Sunday, November 18, 2007

துளித் துளியாய்...(2)

துளித் துளியாய்...(2)

கையில் உளி
கண்ணில் பசி
உருவாகும் சிற்பம்

கையில் உளி
கண்ணில் குருதி
சிதைந்த சிற்பம்

எழுத்தில் கரையும்
தொடுவானம்
எழுதியவன் வாழ்வு

அருகருகே அலைபேசிகளாய்க்
கணவன் மனைவி
மனங்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால்

துளித் துளியாய்...

துளித் துளியாய்...

யுகங்களாய்ச் சுழலும்
புவியின் வியர்வை
உப்புக் கடல்

சூரிய அகலைச்
சுற்றும் விட்டில்
பூமி

நிலவு அப்பளம் கடித்து வீசி
விண்மீன் பருக்கைகள் சிதறி
சாப்பிட்டெழுந்த குழந்தை யார்?

குடிசையின் பொத்தல்கள் வழியே
சூரியக்கிழவனின்
நரைமுடிகள்

Friday, November 9, 2007

ஒரு தீக்குச்சியின் தலையில்....

ஒரு தீக்குச்சியின் தலையில்......

மலையருவி

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

ஒரு சிறு பொறிக்குள்
ஒடுங்கிய மூச்சுகள்
அடங்கிய பேச்சுகள்

ஆண்டுகள் அடங்கி
ஆற்றலாய் நிமிர
ஐந்து விரல்களுக்குள்
ஓர் அடங்காச் சக்தி

சூரியச் சிவப்பின்
விடியலுக்குள்
கருங்காடுகளின் கல்லறை

ஒரு தீக்குச்சியின் தலையில்
எத்தனைக் கடமைகள்?
உரசப் போகும்
பொழுதுக்காக
எத்தனை தவங்கள்?

நிமிரத்தான் போகிறேன்

நிமிரத்தான் போகிறேன்

மலையருவி

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

அதற்குள் ஏனிந்த ஏளனங்கள்
எதிர்பாரா ஏச்சுகள! பேச்சுகள!

எதைத் தேடி வந்தேனோ?
அதை எடுக்க வேண்டாமா?

எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்

Sunday, November 4, 2007

எங்கே கவிதை?

எங்கே கவிதை?

அதைத் தேடி
இதைத் தேடி
தேடித் தேடித் தேய்ந்தேன்

சொற்களை நிறுத்திச்
சுமைகளை ஏற்றினேன்

நகர மறுத்தன

உத்திகளாலே குத்தித் தள்ளி
அணிகளாலே நையப் புடைத்து
மெல்ல நகர்த்தினேன்

சொற்கள் செத்தன.

மீண்டும் மீண்டும்
கவிதை தேய்ந்தது

கடைசி முயற்சியாய்
எனக்குள் பயணம்
என்னை அடைய…

எங்கே கவிதை?

நானே… நானே…!!!

நானே… நானே…!!! ---மலையருவி


எழுதும் தூரிகை
வண்ணக் குழம்பில்
நானே குழைந்து
ஓவிய மாகிறேன்

தூரிகை பிடித்த
விரல்களின் வழியே
நானே படர்ந்து
காட்சியாய்க் கரைகிறேன்

மயக்கும் இசையில்
மகுடியின் லயிப்பில்
நானே பாம்பாய்
நெளிந்து ஆடுகின்றேன்

ஊதும் குழலில்
காற்றாய் கரைந்து
உயிரே இசையாய்
உருகிடு கின்றேன்.

எதில் வெற்றி?

எதில் வெற்றி?

மலையருவி

பொய்முடி புனைந்தாள்
கூந்தல் நீண்டு
மலர்சூடி மணந்தது.

எதில் வெற்றி?

பொய்யின் இருப்பிலா?
இருப்பின் மறைப்பிலா?

இருட்டுக் காட்டில்...

இருட்டுக் காட்டில்

மலையருவி


கண்களை மூடு
விழிகளைப் புதை

பார்வைப் பூக்களை
வெளிச்சப் பருந்துகள்
கவர விருப்பதைக்
கருத்தில் நிறுத்து

கண்களின் கற்பைக் காக்க
இயற்கைக் காட்சியில்
இரண்டறக் கலந்து
காட்சிக் கருவைச் சுமந்து வா!

மின்ஒளி விலங்குகள்
சுற்றிச் சீறும்
பாழ் நகருக்குப்
பயந்து ஒதுங்கி
இருட்டுக் காட்டில்
வாழ்வைத் தொடங்கு

Thursday, October 18, 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும்
எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

Friday, September 21, 2007

உள்ளங்கையும் கட்டை விரலும் -மலையருவி

உள்ளங்கையும் கட்டை விரலும்

உலக உருண்டை
உள்ளங்கைக்குள் ஒடுங்கிப் போனது

கை நீட்டிக் குரலெடுத்து
அழைத்ததெல்லாம் போய்
கட்டை விரலால் அழைப்பு

கண்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு
விரல்களாலே
தடவித் தடவி அழைப்பு
ஓயா அழைப்பு!

முகங்கள்
உருண்டையாய் நீண்டதாய்
தட்டையாய் கோணலாய்
அழகாய் விகாரமாய்
எத்தனை எத்தனை முகங்கள்
எல்லாம் கரைந்து
0 1 2 3 4 5 6 7 8 9
எண்களில் அமிழ்ந்து போயின

முகங்களற்ற உலகில்
வெட்டவெளியில்
மிரட்டல்கள் கோபங்கள்
சவால்கள் சமாதானங்கள்
கொஞ்சல்கள் கெஞ்சல்கள்
மௌனங்கள்

பிரபஞ்சமே
உதடுகளில் தொடங்கி
செவிகளில் முடிந்து போனது
கண்கள் மட்டும் களவு போயின.

எதிரே
உறவும் நட்பும்
முகங்களைக் காணோம்
எண்கள்… எண்கள்…
கட்டைவிரல்
உள்ளங்கையில் தடவத் தொடங்கியது.

Wednesday, September 19, 2007

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எண்ணங்களாலே பின்னிய வலைகளில்
சிக்கிய கவிதையின்
இரத்தம் குடித்து
இளைப்பாறுகின்றது…
சிந்தனைச் சிலந்தி.

வார்த்தைப் புழுவைத்
தூண்டிலில் மாட்டி
சிரத்தையின்றிக்
கவிதையைப் பிடிக்க
தூண்டிலோடு போனது,
மீன்.

சொற்களைக் கொண்டு
விண்ணை முட்டக்
கலைநயத்தோடு கட்டிய மாளிகை
யதார்த்த உலகின்
அனுபவ அதிர்வுகளில்
ஆட்டம் காண்கிறது.

சொல்லுக்குள்ளே பொருளைத் தேடும்
தொடர்ந்த முயற்சியில்
மூச்சு முட்டுகிறது…
சுவாசத்திற்காக
தலை நீட்டுகையில்
கவிதை வானம்
தலைமேல் கவிழ்கிறது.

கழனிகளிலே
கவிதைப் பயிர்கள்
வார்த்தைக் களைகளால்
வளர்ச்சி குன்றின…
எழுத்தும் சொல்லும்
வேகமாய் வளர்கையில்
கவிதைகள் மட்டும்
காணாமல் போவதேன்

வாழ்க்கைப் பூக்களில்
வண்டுகள் உறிஞ்சிக்
காலம் காலமாய்க்
கட்டிய தேனடைகவிதைத் தேனாய்
நிரம்பி வழிகையில்
சிந்திய சிலதுளி
நெஞ்சம் நிறைந்து
நினைவில் இனிக்கிறது.

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும் - கவிதை

மதமான பேய்பிடியாதிருக்க வேண்டும்

மலையருவி


ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

செத்தவன் குடல்உருவி
செங்காவி உடையுடுத்து
எத்திசையும் மதப்பேய்கள்
எக்காளம் இடுகிறதே!

ரத்தத்தில் முகம்கழுவி
ரதங்களிலே யாத்திரையாய்
யுத்தத்தை மிகவேண்டி
ருத்திரமாய் வருகிறதே!

அந்த மதப்பேய்கள்
அண்டாமல் தடுத்துவிடு
முந்தி நீயிருந்து
மோதி அழித்துவிடு

அயோத்தி தெருக்களிலே-அது
ஆடிய ஆட்டத்தால்
அய்யோ நாம் படும்
துன்பம் அளவிட முடியாதே

குஜராத் தெருக்களிலே-இப்போ
குடியிருக்கும் சேதிகேட்டேன்
நிஜமாகச் சிலநாளில்
நம்மூர்க்கும் வந்திடலாம்

அப்போது அப்பேய்கள்
ஆர்ப்பாட்டம் தாங்காது
இப்போதே புறப்பட்டால்
இல்லாம செஞ்சிடலாம்

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

மதமான பேய்களையே
மயானத்துக்கு ஓட்டிவிடு
பதமாக அதையடக்கிப்
படுகுழிக்குத் தள்ளிவிடு

வேறுசில மதப்பேய்கள்
வெடிகுண்டு கையெடுத்து
சேறுபடும் ரத்தத்தில்
சந்தோஷப் படுகிறதே

பச்சை மதப்பேய்கள்
பம்பாய் கோவையென
உச்ச வெறிபிடித்து
ஊரை அழிக்கிறதே

கோவிலுக்குள் நுழைந்து
அப்பாவி மக்களின்
ஆவிகளைப் பறித்து
அஞ்சிடச் செய்கிறதே

ஆபத்து வருமுன்னே
ஆத்தா மகமாயி
காபந்து பண்ணுமம்மா
கண்ணாயிரம் கொண்டவளே!

எல்லா மதப்பேய்களையும்
எரிவிழியால் அழித்துவிடு
பொல்லாத பேய்களைப்
பொசுக்கியே சாம்பலாக்கு

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையா!
சூலி திரிசூலி சொல்லறதக் கேளுமம்மா!

இரத்தவெறி வேண்டாம்-அம்மா
யுத்தவெறி வேண்டாம்
குண்டுகள் வேண்டாம்-அம்மா
சூலங்களும் வேண்டாம்

மதம் வேண்டாம் தாயே- எங்களை
மனுஷங்களா வாழவிடு
ஆயதங்கள் வேண்டாம் தாயே-எங்களை
அன்போடு வாழவிடு.