Friday, July 27, 2012

இரவின் விளிம்பில்

-மலையருவி


இரவின் விளிம்பில்
உடைபடும் பனித்துளிகளில்
மென்மையாய்க் கரைகின்றன
என்
கனவுகள்

கரையும் கனவுகளிலிருந்து
கண்கள் கசக்கி
விழித்தெழுகின்றன
என்
கடந்த காலங்கள்

கடந்த காலங்களின்
இருள் துடைத்து
வெளுத்துச் சிவக்கின்றன
என்
மௌனங்கள்

மௌனங்களின்
அர்த்த அழுத்தங்களில்
உடைபட்டுக்
கண்ணாடிச் சில்லுகளாய்ச்
சிதறுகின்றது
என்
தனிமை

தனிமையின்
வெப்பச்சூட்டில் ஆவியாகி
வான்கலந்து
மழைத்துளிகளாய்
வழிகின்றன
என்
கண்ணீர்த் துளிகள்

Saturday, July 21, 2012

சித்திரங்கள் தோறும் வழிந்தோடும் குருதி ஆறு


-மலையருவி


என் வீட்டுச் சுவரில்
ஓவியங்களாய்த் தொங்குகின்றன
கடந்த காலங்கள்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடும்
குருதி ஆறுகளின்
குறுக்கே
பலி ஆட்டு மந்தைகள்
தலையைக் கவிழ்த்தபடி

தொங்கும் படங்களிலிருந்து
நீளுகின்றன
கழுமரங்களும் சூலங்களும்

உள்ளிருந்து
ஓயாமல் ஒலிக்கும்
கலவர, யுத்தப் பேரொலிகள்

யுத்தப் பின்னணிகள்,
தேசங்கள்
கண்டங்களைக் கடந்து,
பாலைவனங்களாய்,
நதிக்கரைகளாய்,
சமவெளிகளாய்,
குறுங்காடுகளாய்
திரைச்சீலைகளைப் போல்
மாறிக்கொண்டே இருக்கும்

சாந்தியும் சமாதானமும்
அன்பும் அகிம்சையும்
கருணையும் சமத்துவமும்
நிலைபெற வேண்டிக்
குரூரமாய்ச்

சித்திரங்கள் தோறும்
வழிந்தோடுகின்றது
குருதி ஆறு.

Wednesday, July 18, 2012

முப்பாட்டன் வீடு


-மலையருவி


வீடு கைமாறிய பொழுதில்
முன்பு எப்பொழுதோ
சில பொழுதுகளில்
அந்த வீட்டின்
கதவுகள்
திறக்கப்பட்டதாய்
சில பெரியவர்கள் 
தம் பழைய நினைவுகளைத்
தூசி தட்டிக்
கதை சொன்னதுண்டு.

அது
சுவரில்
அதிஅற்புதமாகத் தீட்டப்பட்ட
ஒரு கதவு ஓவியமாக இருக்கலாம்
என்றும் நாங்கள் நம்பியதுண்டு

எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு
இடையில் பல கைமாறி
இப்போது,
சுதந்திரம் என்ற பெயரில்
எங்களுக்கு,
என்றான சந்தோஷத்தில்
கதவைப் பற்றியோ
வீட்டைத் திறப்பதைப் பற்றியோ
நாங்கள் யோசிக்கவில்லை

கொண்டாட்டங்கள் எல்லாம்
வீட்டைச் சுற்றியே இருந்தன
வீட்டின் அழகும்
மூதாதையர் பெருமையுமே
எங்கள் பேச்சாயிருந்தது.

முப்பாட்டன் வீட்டில்
கடந்த காலங்களில்
பலரும் சுருட்டியது போக
மீதமுள்ள பொக்கிஷங்கள்
மிதமிஞ்சிக் கிடந்தன

வீட்டுக்குள் நுழைய
எங்களைத் தவிர
பலருக்கும்
பலவழிகள் தெரிந்திருந்தன
உடைந்த ஜன்னல்கள் வழியாக,
தோட்டத்துச் சுவர்ஏறிக் குதித்து,
சிதைந்த மேற்கூரையின்
ஓடுகளைப் பிரித்து..
இவை போதாவென்று
உள்ளேயே
பல பழம்பெருச்சாளிகள்

காலக்கிரமத்தில்
கஜானாவும் காலியாச்சு
பொக்கிஷங்களும் கொள்ளை போச்சு

சாவி எங்கள் கைகளில்
பத்திரம் எங்கள் பெயர்களில்

ஒருமுறைகூட நாங்கள்
உள்நுழைந்ததில்லை
உள்நிறை வளங்களைக்
கண்டதேயில்லை

சமத்துவக் கதவின்
சாவி இருந்தும்
கதவைத் தேட முயன்றதுமில்லை
இருக்கும் கதவைக் காணவுமில்லை

கதவையும் திறக்காமல்
களவையும் அறியாமல்
கண்முன்னே
எம் முப்பாட்டன் வீடு
கணந்தொறும் சிதைய,
கதவு திறக்கும்
கணங்களுக்கான
விழிப்பைத் தேடுகின்றன
விழிகள் விரக்திகளோடு..

Sunday, July 15, 2012

நிஜங்கள் நிராகரிக்கப்படும் போது


-மலையருவி



நிஜம்
பலவண்ண மலர்களாய்ப்
பூத்துக்குலுங்கும்
நந்தவனத்தில்
வேர்களின் வாசம் நுகரக்
கூரிய நகங்களோடு
கரங்கள்
ஆழமாய் மண் பறிக்கும்

நிஜம்
மனம் லயிக்கும் இசையாய்க்
செவிக் கோப்பைகளில்
வழியக் காத்திருக்கையில்
அந்தகார இருட்டில்
மௌனத்தை மொழிபெயர்க்க
விரல்கள்
வேகவேகமாய்
அகராதிகளைப் புரட்டும்

நிஜம்
மேனி சிலிர்க்கத் தீண்டி
மெய்தொட்டுப் பயிலுகின்ற
தென்றலாய் வருகையில்
கைகள் இறுக்கி
கால்கள் மடக்கி
கணப்பைப் போர்த்தி
உடல்கள்
சுருண்டு முடங்கும்

நிஜங்கள்
நிராகரிக்கப்படும் போது

பொய்ம்மைகள்
புதுப்புதுக் கோலம் புனைந்து
புன்னகை தவழ
வலம் வருவது
விசித்திரமல்ல
நடப்பின் சித்திரம்


Wednesday, July 11, 2012

என் ஞாபக நதி


-மலையருவி


பல நூறு, ஆயிரம், கோடி
நினைவுகளால்
பொங்கிப் பிரவகிக்கிறது
என் ஞாபக நதி

கருப்பையில்
கைகால் முடக்கித்
தலைகீழாக
நான்
இருந்தநாள் தொடங்கி
நீர் கசிந்து மெல்லத் திரண்டு
பள்ளிப்பருவத் தடம்கண்டு
வழிந்து நீர்த்தாரையாகி
வாலிப மிதப்பில்
சிற்றோடை, பேரோடையாகிப்
பெருக்கெடுத்து
இன்றோ
காலத்தின் கரைகள் ததும்ப
பெருவெள்ளமாய்ச் சுழித்தோடுகின்றது
என் ஞாபக நதி

அதில்
சுழல்களும் புதைகுழிகளும்
ஏராளம், ஏராளம்
அதில் புதையுண்டன
என் மனசாட்சிகள்

மேலே நிலத்தில்
பெருகி வழிந்தோடும்
நதிக்கு இணையாக
என் மன அடுக்குகளின் கீழே
ஒரு ரகசியநதி
ஓடிக்கொண்டிருப்பதை
நான் யாருக்கும் சொன்னதில்லை
அது நதியல்ல சாக்கடை.
அதில் மிதந்தோடும் பிணங்கள்
என் குரூரங்கள்

மலைச் சரிவுகளிலும்
பாறையின் முடுக்குகளிலும்
தாவிக் குதித்துத் தட்டுத் தடுமாறிய
என் ஞாபக நதி
இப்பொழுது
பரந்த சமவெளியில்
பரபரப்பின்றி
சலனமற்றுத் தவழ்ந்தோடுகின்றது

சுழித்தோடிய நதி
வாரிக் கொணர்ந்த
தன்முனைப்பும் மமதைகளும்
சமவெளியை நோக்கிய பாய்ச்சலில்
கரையொதுங்கி விட்டன.

இப்பொழுது
விரிந்து பரந்து
விசாலமாய்த்
தெளிந்து
மென்மையாய்ச் சில்லிட்டு
படித்துறை இறங்கி
மூழ்கிக் குளிப்பவர்
சிலிர்ப்புற்று உவப்புற உதவி

பின்..
மெலிந்து தளர்ந்து
கடல் நோக்கித்
தளர்நடை இடுகிறது
என் ஞாபக நதி

Tuesday, July 10, 2012

இப்படிக்கு -கலியுகக் கடவுள்.


-மலையருவி


பரந்து விரிந்த பிரபஞ்சத்தின்
ஒரே புண்ணிய பூமி
எங்கள் இந்திய தேசம்.

இந்தப் புனிதபூமி
ஆயிரமாயிரம்
ரிஷகளின் யோகிகளின் மகான்களின்
சரணாலயம்

இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும்
சரணாலயத்தில்
எண்ணிக்கை குறையவில்லை

தினம் தினம்
ஓயாத அழைப்பு
காற்றுவெளி எங்கும்
சப்தமாய் ரூபமாய்
தொடரும் அழைப்புகள்

தியானம்,
வெட்டவெளி தியானம்,
பிரபஞ்ச தியானம்
உள்முக தியானம்
இப்படி
எத்தனை எத்தனையோ
தியான அழைப்புகள்

யோகம்,
பூரண யோகம்,
குண்டலினி யோகம்
காயகல்ப யோகம்
இப்படி
எத்தனை எத்தனையோ
யோக அழைப்புகள்

தரிசனங்கள்,
உள்ளே பார், வெளியே பார்,
மேலே பார், கீழே பார்
முகக் கண்ணால் பார்,
அகக் கண்ணால் பார்
இப்படி
எத்தனை எத்தனையோ
தத்துவ தரிசன அழைப்புகள்

இடைவிடாத அழைப்புகளின்
கீழே
முக்கிய அடிக்குறிப்பு

-பற்றறு, பந்தங்களைத் துற
ஆசைகளை அடியோடு வேரறு,
சில ஆயிரங்களுடனோ
இலட்சங்களுடனோ
கோடிகளோடோ வா!
பரிபூரண நித்திய ஆனந்தம் நிச்சயம்-

இப்படிக்குக்
-கலியுகக் கடவுள்.



Monday, July 2, 2012

உள்ளியங்கும் இயக்கமே உயிர்வாழ்வு..

 மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


முட்செடிகளும் புற்களும்
முளைத்துக் கிடக்கும்
அந்த வெற்றுநிலத்தில்தான்
குடைவிரித்து மலரப்போகும்
காலங்களுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
காளான்கள்,
வித்துக்களாய்

வறண்டு இறுகி
வெடித்துக்கிடக்கும்
இறந்த காலத்துக்
குளங்களில்தான்
சுழன்று சுழன்று
நீந்திக் களிக்கப் போகும்
பொழுதுகளுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
மீன்கள்,
முட்டைகளாய்

வெப்பத்தில் ஆவியாகி
மடிகனத்துச் சூல்கொண்டு
மென்காற்றில் சிலிர்ப்புண்டு
பரந்த கடல்நோக்கி
ஒளிரப்போகும்
எதிர்காலக் கனவுகளோடு,
சிப்பிகளின் இதழ்நுழைய
சரம்சரமாய் வீழ்கின்றன
முத்துக்கள்,
மழைத்துளியாய்

உள்ளியங்கும் இயக்கமே
உயிர்வாழ்வின் அடையாளம்

இருப்பே சிதைந்து
இருள் சூழ்ந்தாலும்
உள்ளியங்கும் இயக்கத்தால்
உருவாகும் எதிர்காலம்.