Tuesday, November 12, 2013

குரு இல்லாமல் பிரபஞ்ச இயக்கம் எப்படி!


மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)

நீண்ட நாட்களாய் 
ஒரே குருவுக்குச்
சீடனாயிருப்பது..
தொடரும்
ஆன்மீகத் தேடலுக்கு
சலிப்பைத் தந்தது.
எப்பொழுதும்
சீரான கால இடைவெளிகளில்
புத்தம் புதிய சாமியார்கள் 
எனக்குக் குருவாவதுண்டு.
பழையவர்கள்
பெரும்பாலும் 
வழக்கு, ஜாமீன், சிறை என்று
பரபரப்பாகி விடுவதால்
தொடர்ந்து.. 
குருவாயிருக்க சாத்தியமில்லை
தொடரும் வழக்கத்தில் 
புதிய தேக்கநிலை
புதிய குரு வேண்டும்
அண்மையில் பிரபலமான,
தாடியுடனோ இல்லாமலோ,
தேஜஸ்மிக்க,
வார்த்தைகளில் வசீகரிக்கக் கூடிய,
அயல்நாட்டு பக்தர்கள் மண்டிய,
பல கோடிகளில் ஆசிரமம் நடத்தும்
நானே பிரம்மம் 
எனச் சவால்விடும்
புதிய சாமியார் வேண்டும்
பழைய குருவைக் 
கழட்டிவிடும் தருணமிது
பழசோ புதுசோ
குரு இல்லாமல்
பிரபஞ்ச இயக்கம் எப்படி!
உள்முக வெளிமுகத் தேடல் எப்படி!

புதிய குரு
புதிய தீட்சை
புதிய தேடல்
புதிய நான்..

Monday, July 1, 2013

கால்களும் காலங்களும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


வாகனங்கள்
பெருகியோடும்
நெடுஞ்சாலைகளில்
தடம்மாறாமல்
கைகளும் மனதும் சலிக்க..
துச்சாதனன் கைச்சேலையாய்ச்
சாலைகளை உரித்தபடி
தொடரும் பயணங்கள்
என்னை வெறுப்பேற்றும்

பாம்பாய் நெளியும்
ஒற்றையடிப் பாதைகளில்
விழிகள் மேய
வானை முத்தமிட்டுப்
பாதைகள் துழாவி
மேய்ந்து திரியும்
பயணங்கள்
என்னை ஆரத்தழுவும்

தேய்ந்து வெளுத்தப்
பாதைகளின் இடையே
விழி காட்டும்
வழி திரும்ப..
நெருஞ்சி விரிப்பில்
கால்கள்
புதுப்புதுப் பாதைகள் சமைக்க
சிலுவைகள் சுமக்கும்

கால்கள் கிழித்த
மண்ணின் வடுக்கள்
இனிவரும் பாதங்களுக்குப்
பல்லக்குகள் சுமக்க
வழிமேல் விழி புதைக்கும்
பாதைகளின் பயணத்தில்
நடப்பன
கால்கள் மட்டுமல்ல
காலங்களும்.

Sunday, June 23, 2013

வாழ்க்கை ஈ மொய்த்துக் கிடக்கின்றது

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


நிமிடங்களைச் சிதறி,
மணிநேரங்களை
வாரி இறைத்து,
வசிப்பிடங்கள்
அலங்கோலமாய்ப்
பொலிவிழிக்க,
கசக்கி வீசப்பட்டுக் கிடக்கின்றன
பகலும் இரவும்.

வாரங்களும் மாதங்களும் கூட
கிழித்தெறியப் பட்டுள்ளன.
கடிகாரங்களோடு
நாட்காட்டிகளும்
பொசுங்கிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும்
புறக்கணிக்கப்பட்ட குப்பைகளோடு
நிரம்பி வழிந்து கிடக்கிறது
காலம்.

குப்பைத் தொட்டியை
நிரப்பும் அவசரத்தில்
பொசுக்கப்பட்டு,
வீசப்பட்டு,
கிழிக்கப்பட்டவைகளோடு
சேர்ந்து
ஈ மொய்த்துக் கிடக்கின்றது
வாழ்க்கை

Tuesday, June 18, 2013

ஊடக மாய வெளிச்சத்தில்..

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


அடிக்கப்போய்
அரண்டு மல்லாந்த
கரப்பான் பூச்சியாய்,
இயல்புக்குத் திரும்பும்
வகையறியாது
சலனங்கள் கீழ்நோக்கிப் பிறாண்ட
தவிக்கிறது என்மனம்

முயற்சியின் தோல்வியில்
கவலைகள்
எறும்புக் கூட்டங்களாய்
மொய்த்துக்
கூடிச் சுமக்கப்
தொடங்குகிறது பயணம்

தேவைக்கும் இருப்புக்குமான
இடைவெளியில்
வாழ்க்கை
தொங்கிக் கிடக்க
ஆசையெனும் ஆப்பசைத்து
சிக்கித் துடிக்கிறது
மனம்

முயற்சியின் தோல்வியில்
வாலைப் பறிகொடுத்துக்
குருதிச் சொட்டச்சொட்ட
ஆசையை வீசி
நடுங்கித் தளர்கிறது

ஊடக விளம்பரங்கள்
உருவாக்கும்
மாய வெளிச்சத்தில்
தொலைத்த வாழ்க்கையை
யதார்த்த இருட்டில் தேடும்
விழியற்றவர்களாய்ப்
பலரோடு நானும்..

Tuesday, June 11, 2013

ஓர் ஒற்றைக்குரல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


ஆணிவேரென வான் வீழ்த்தும்
மின்னலில்,
திக்குகள் அதிரும்
இடியோசையில்,
கொட்டித் தீர்க்கும்
பெருமழையில்,
சுழன்றடிக்கும்
சூறாவளிக் காற்றில்,
ஒரு கை தாங்கி
ஒரு கை காக்கும்
அகல் விளக்கின்
சுடர் போற்றும்
ஓர் ஒற்றைக்குரல்
ஓங்கி ஒலித்தது

மதப்பூசல்களின்
சூறாவளிப் பெருமழையில்
ஜீவகாருண்யச் சுடர் ஏந்தி
உயிர்க்குலச் சமத்துவம் வேண்டி
தனிப்பெருங் கருணையோடு
ஒலித்தது அந்தக் குரல்

வேத புராண இதிகாசச்
சேற்றில் குளித்து
நாறிக்கிடந்த
உயிர்க்குலத்தை
அருள்மழை பொழிந்து
தூய்மை செய்த
வள்ளலின் குரல் அது.

மூடர்கள் துப்பியது துய்த்து
முழுவயிறு நிரப்பும்
காக்கைகளின் பெருங்கூச்சலில்
தனிக்குரல் கேட்கத்
தவறின செவிகள்

தனிக்குரல் கேட்கத்
தழைக்கும் உயிர்க்குலம்.

Monday, June 10, 2013

வினாக்களும் விடைகளும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


வினாக்கள்! வினாக்கள்!!

என்னுடைய முடிவற்ற
தேடல்
வினாக்களே!
விடைகள் அல்ல.

விடைகள்
அவை என்னுள்ளேயே

காலநதிப் பெருக்கின்
ஞானம்
நதிமூலத்தில் சுரக்கும்
வினாக்களின் ஊற்றால்
நிறைகின்றன

சொல்லப்பட்ட எழுதப்பட்ட
எல்லாக் கனிகளுக்குள்ளும்
வினாக்களே
வீரிய விதைகளாய்ப்
பொதிந்துள்ளன.
நாளை
ஓராயிரம் விடைகளை
பிரசவிக்கும்
வித்துக்கள் அவை.

வினாக்களை வேண்டி
காலமெல்லாம்
தவமிருக்கையில்
மேனகைகளை அனுப்பும்
எந்த நூல்களும்
எனக்குத் தேவையில்லை

வெளி எங்கும்
வியாபித்திருக்கும்
விடைகளை
எனக்குள் பதிவிறக்கும்
வினாக்களின் அலைவரிசை
தேடி அலையும்
தேடல் முடிவதில்லை.

Sunday, June 9, 2013

பழுத்துக் கனிந்தது இருள்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


காய்த்துத் தொங்கிய
பகல்பொழுதின்
முதிர்ச்சியில்
பழுத்துக் கனிந்தது இருள்

இருளின் சுவை நுகர
வட்டமிடும் வவ்வால்களாய்
மனிதர்கள்.

வெளிச்சத்தில் கருத்திருக்கும்
மனிதமனம்
இருளில் வெளுத்திருக்கும்

பகலில் உள்ளேயும் வெளியேயும்
மேய்ந்துக் கறித்த
பணிச்சுமைகளை
ஆறஅமர அசைபோடவும்

இயந்திர இயக்கத்தை
இடைநிறுத்தி
மனித உடலுக்குக்
கூடுபாய்ந்து
உயிரோட்டம் கொள்ளவும்

ஆழ்ந்த துயில் வாசிப்பில்
மனதின் பக்கங்களைக்
பிரித்துப் போட்டு
கீழ் மேலாகவும்
மேல் கீழாகவும்
மீண்டும் மீண்டும்
அடுக்கிப் பார்க்கவும்

இருள் போர்த்திய இரவு
கம்பளம் விரிக்கும்
இருளே
காலஓட்டத்தின் ஆதாரம்
இருளே
இயக்கத்தின் கூடாரம்

Saturday, June 8, 2013

நாடக ஒத்திகை நேரம்

-மலையருவி


ஒத்திகை நடக்கும் அறையில்
எல்லோர் கைகளிலும்
அவர் அவர்களுக்கான
வசனப் பக்கங்கள்

விருப்பம்போல்,
சிலர் வெற்றுப் பார்வையில்
சிலர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியபடி
மெல்ல வாசித்து,
உரக்கப் படித்து
பேசி,
நடித்து
ஒவ்வொருவரும் வேறுபட்டு
வசனப் பக்கங்களோடு

நடிக்க அழைக்கப்பட்டிருந்தேன்!
எனக்கான
வசனப் பக்கங்களுக்கு
யாரைக் கேட்பது?

நாடக ஆசிரியரோ
இயக்குநரோ
வரக்கூடும்..
காத்திருக்கிறேன்

நேரம் கடந்துகொண்டே இருக்க,
கைக் கடிகாரம் பார்த்து
காலண்டர் பார்த்து
மாறிவரும்
பருவ காலங்களைப் பார்த்துக்
காலம் கடப்பதை உணர்கிறேன்

எனக்கான
வசனப் பக்கங்கள் இல்லாமல்
நான் என்ன செய்வது?

சலித்துப் போய்
உரத்துக் குரல் கொடுத்தேன்,
எனக்கான வசனப் பக்கங்கள்; எங்கே?

நீ கொண்டு வரவில்லையா!
அதிர்ந்தனர் அனைவரும்.

எங்கள் கையில்
நாங்கள் கொண்டு வந்தது.
உனக்கான வசனத்தை
வேறு யார் தரமுடியும்!

கவிழ்ந்த தலை நிமிர்த்தி
ஏமாற்றத்தை மறைத்து,
நாடக இயக்குநர் வரட்டும்
என்றேன் அமைதியாக.

மறுமொழி தந்தனர்
கூட்டாக!
நாங்களும் அவருக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நம்பிக்கையோடு!

காலம் காலமாக!

Wednesday, April 10, 2013

வீர தீர அதிசூர பராக்கிரம

-மலையருவி




வீர தீர அதிசூர
பராக்கிரமத்
தலைவருக்குப் பிறந்தநாள்

இந்த ரகசியம்
அகில உலகத்திற்கும்
இன்றுதான் தெரிந்தது.

வாலிபத்தைக் கடந்த
வயதென்றாலும்
இந்தநாள்வரைப்
பிரபஞ்சத்தின்
எந்த மூலையில்
செங்கோல் ஓச்சிக் கொண்டிருந்தார்
என்பது பிரம்ம ரகசியம்

வாழ்த்து சொல்லும்
பேனர்களில்
வெட்டப்பட்டுத்
தொங்கும் தலைகள்
கணக்கற்றவை

வரலாறே, வருங்காலமே,
உயிரே, இதயமே,
விடிவெள்ளியே, இயக்கமே என்ற
விளிகளே அவரின்
விலாசங்களாகும்

வீதியெங்கும்
தோரணங்கள், பதாகைகள்,
மின்விளக்குகள், வாணவேடிக்கைகள்
பிரியாணிப் பொட்டலங்கள்
வாழ்க! வெல்க கோஷங்கள்

மாமன்னர்களின்
பட்டாபிஷேகங்களை வெல்லும்
பகட்டும் படாடோபங்களும்
வராது வந்த மாமணிக்கு
அல்லக்கைகளின் அமர்க்களங்கள்

இலட்சங்களில் கோடிகளில்
நடக்கும் கொண்டாடட்டங்கள்
நாளைய அறுவடைக்கு
அச்சாரங்கள்!
களத்துமேட்டில்
சிதறியது பொறுக்கும் கனவில்
துதிக் கூட்டங்கள்

-மலையருவி

Sunday, February 24, 2013

முகமற்றவளின் சிணுங்கல்

-மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)


கவிஞர் மலையருவி

நள்ளிரவைத் தவிர?
நாளின் எந்த நேரமும்
கழிப்பறை, குளியலறை
உண்ணும் இடம், பயணப் பாதை,
அலுவலகம், ஆலயம்
இடம் எதுவாயினும்
அவளின் சிறப்புக் கவனம்
உங்களை நோக்கியே..

பிடித்த நடிகரின்
திரைப்படத் தகவல்,
பாடல்கள்,
ரிங்டோன்,
காலர் டியூன்
வேண்டுமா!

பணத்தேவையா!
வீடு கட்ட, கார் வாங்கக்
கடன் ஆலோசனை வேண்டுமா!

உங்கள் சுகதுக்கங்களை
மனம்விட்டுப் பேச,
திறந்த மனதுடன் கேட்க
ஒரு சிநேகிதி வேண்டுமா!
எப்பொழுதும் தயார்..

இன்றைய இயந்திர உலகில்
உங்களுக்காகக் கவலைப்பட,
ஆலோசனை கூற,
வார்த்தையில் உதவ
ஒருத்தி!

அந்த முகமற்றவளின்
சிணுங்கல் குரல்
நெருக்கத்தில்
உங்கள் காது மடல்களைத்
தழுவியபடி..

காற்றில் மிதந்து
கைபேசி வழியாய்
உங்கள் காதுகளுக்கு
விருந்தளிக்கும்
அந்த முகமற்றவளுக்கு
உங்கள் நன்றியைத் தெரிவிக்க..

ஒரே வழி
நிறைய ரீசார்ஜ் செய்யுங்கள்
உங்கள் கைபேசியின்
கையிருப்பு எப்பொழுதும்
நிரம்பி வழியட்டும்

அவள் அதைத்தான் சுவாசிக்கிறாள்.


Thursday, January 31, 2013

கவிதை ஜெயித்துவிடும்


-மலையருவி


துண்டறிக்கையின்
பின்புற வெற்றிடத்தில்
எழுதப்பட்ட கவிதை?
வாசிக்கக் காத்திருந்தார் கவிஞர்

பார்வையாளர்களில் பலரும்
ஆளுக்கொரு தாள்ஏந்தி..

வாசித்து முடித்தவர்களுக்கு..
வேறு அவசர வேலை!
மெல்ல நழுவல்

நேரம் கடக்கக்.. கடக்க..
அரங்கு
காலி இருக்கைகளால்
நிரம்பி வழிந்தது

மைக்கைப் பிடித்தவர்களோ
சொல்லுக்குச் சொல்
வரிக்கு வரி
இருமுறைக்கு மும்முறையாய்
பதவுரை, பொழிப்புரை,
விளக்கவுரையாய்
விளங்கி..
விளக்கி..
உரத்த முழக்கம்

காத்திருந்த கவிஞரோ!
நிலவரத்தின் கலவரத்தால்
கவலையை முகத்தில் தேக்கி

எப்போதும் கைகொட்டி ரசிக்கும்
சுவைஞர் ஒருவர்,
இன்னும்ம்ம்.. அரங்கிலிருக்க!
நிம்மதிப் பெருமூச்சு

ரசிக்கத் தெரிந்தவர்
ஒருவர் போதும்
கவிதை ஜெயித்துவிடும்.

பாவம்,
கவிஞரின் நம்பிக்கை!

Tuesday, January 1, 2013

கான்கிரீட் மரம்


-மலையருவி



ஊரெங்கும்
கான்கரீட் தோப்புகள், காடுகள்
கண்ணில் நிறைந்து
கனவில்; ததும்பும்

வான்முட்ட வளர்ந்ததும்
வனப்புடன் விரிந்ததும்
புதரெனச் செறிந்ததும்
குறுமரமாய்க் குவிந்ததும்..
வகைவகையாய்
வனப்புமிகு மரங்கள்,
இரவில் மலரும்
வண்ணமிகு
மின்னொளிப் பூக்களில் மிளிரும்

நாடெங்கும் கான்கிரீட் மரங்கள்
எனக்கான மரம் எங்கே!

அப்பன் பாட்டன்
ஆசையுடன்
நாளைக்காக நட்டுவைத்த
நல்ல மரங்களின் நலன்சுருட்டும்
யோகமும்
எனக்கு வாய்க்கவில்லை.

கையில் மரக்கன்றும்
காலடியில் குழியுமாய்
கண்ணை விண்ணில்வைத்து
கடன் நோக்கிக்
கழித்துவிட்டேன்

குவளையில் கொண்டுவந்த
சேமிப்பும்
மண்உறிஞ்ச
ஒற்றை மரக்கன்றும்
வாடிக் காய்ந்ததுவே

வெட்டிய குழியருகே
வெறுமனே நான் குந்தி
வேடிக்கைப் பார்த்திருக்க
பக்கத்துக் குழியிலெ;லாம்
வான்முட்டும் வரை உயர்ந்து
வளர்ந்தனவே பயன்மரங்கள்

கான்கிரீட் மரம் வளர்க்கும்
பகல்கனவில் நான் திகைக்க
வெட்டிய குழி புதைந்து
விதையாகும் என் நிராசைகள்.