Thursday, June 9, 2011

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஆயிற்று
அரை நூற்றாண்டுகள்.

தேய்த்துத் தேய்த்து
அழுக்கை நீக்க
ஆன பொழுதுகள்
எத்தனை எத்தனையோ!

உடம்பின் அழுக்கைத்
தேய்த்துக் குளித்தேன்.
துணியின் அழுக்கை
அடித்துத் துவைத்தேன்.
தரையின் அழுக்கைப்
பெருக்கிக் கூட்டிக்
குப்பையில் கொட்டினேன்.

குப்பையும்
சாக்கடையும்
அழுக்கின் கொள்கலம்.

சூழ்ந்து நிற்கும்
குப்பைமேட்டிலும்,
சாக்கடை நீரிலும்
மனிதனின் அழுக்குகள்

அழுக்கைக் கண்டால்
அசூயை.. அசூயை..
அழுக்கை,
நீக்கிட நீக்கிட
அடுத்த அழுக்கு.

மனிதர்களின்றி
மண்ணில் அழுக்குகள் உண்டா?
அழுக்குகள் இன்றி
இங்கே மனிதர்கள் உண்டா?

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

சாதி அரசியல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெண்ணியம் பேசினான்,
எழுதினான்,
மேடைகளில் முழங்கினான்.
ஆண்கள் போராடி
பெண்ணுக்கு விடுதலையா?

பெண்கள் எதிர்த்தனர்,
எங்கள் விடுதலையை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம் என்று.

தலித்தியம் பேசினான்,
எழுதினான்,
போராடினான்.

தலித்தின் வலி
உனக்குத் தெரியுமா?
வேண்டாம்
ஓநாய் அழுகை என்றனர்.

இப்போது
ஒடுக்கப்பட்ட
தன் சொந்த சாதிக்காக
எழுதுகிறான்.

சொல்கிறார்கள்,
அவன் சாதி அரசியல்
பண்ணுகிறான் என்று!

Monday, May 23, 2011

யார் யாருக்குக் காவல்?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெருமாளுக்குப்
பக்தர்களின் காணிக்கை
அவரவர்
பணம் செல்வாக்கிற்கேற்பப்
பலரகம்

வேண்டுதல்,
நேர்த்திக் கடன்,
காணிக்கை,
பகவானுக்கு ஒரு பங்கு
என விரியும்

காசு, ரூபாய்களில்,
முடி காணிக்கை, மொட்டை,
வசதிக்கேற்ற பொருளில்
எடைக்கு எடை துலாபாரம்.

உண்டியல் காணிக்கை
நூறு ஆயிரங்களில் தொடங்கி
இலட்சம் கோடிகளில்
செய்பாவங்களுகேற்ப
வினைத் தொகையாய்
பங்குகள் கூடும்.

வெள்ளி, தங்கம், வைரங்களில்
வாள், கிரீடம்,
அண்டா, குண்டா
தேர், கலசம், கோபுரம்
என
அன்பளிப்புக் காணிக்கைகள்
தொடரும்..

சில,
பெயர் விளம்பும்
விளம்பரங்களுடன்

புகழ் விரும்பா
புண்ணியர்கள் சிலர்
ரகசியமாய்
விளம்பரமின்றி.

கடவுளின்
காணிக்கைகளைக் காக்க
ப+ட்டு, பெரிய பூட்டு, மெகா பூட்டு
இரவு பகல் பராமல்
போலீஸ் காவல்
கண்காணிப்புக் கேமராக்கள்

என்ன செய்ய?
அவ்வப்போது
உண்டியல் உடைப்பு,
காவலாளியைக் கொன்று
கோயில் நகை திருட்டு,
பக்தர்கள்,
பூசாரி
அறங்காவலர் திருட்டுகள்

சமயங்களில்
உடைமைகள் மட்டுமின்றி
பகவானே திருட்டு போகும்
பரிதாபம்

காக்கும் பெருமாளே!
உண்மையைச் சொல்லும்
யார் யாருக்குக் காவல்?


Saturday, May 21, 2011

ஆட்சி மாற்றம்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பேருந்துத் தடமறியா
நாட்டுப்புறத்து
ஒத்தையடிப் பாதையில்
நீண்ட
நடைப் பயணம்.

தலைச்சுமையோடு
கையில்
பெருஞ்சுமையாய்த்
பெரிய பை ஒன்று

தொடர் நடையில்,
சுமக்கும் நேரம்
கூடக் கூட
பையின் பாரம்
கூடுமோ?
கழுத்து நரம்பு புடைக்க
சுமக்கும் கையோ தளர்ந்து வீழ
நடை பின்ன

இனி முடியாது
எனும்போதில்
பெரும்;பை பாரத்தை
மறுகைக்கு மாற்றினேன்.

நிம்மதிப் பெருமூச்சு
பாரம் குறைந்தது.
நடை முடுக்கேற
வேகநடை போட்டேன்

என்ன வியப்பு?
சுமப்பவன் நானேதான்
சுமையும் அதேதான்
குறையவில்லை,
என்றாலும்
பாரம் நீங்கி
இதம் பெற்றதுபோல்
ஒரு நிம்மதி.

இந்தக் கையிலிருந்து
அந்தக் கைக்குப்
பாரத்தை மாற்றியதில்
சுகமோ சுகம்

பாரம் தெரியவில்லை
பயணம் சுளுவானது

இந்த
நிம்மதிப் பெருமூச்சும்
கொஞ்சநேரம் தான்.

தொடரும் நடைப் பயணத்தில்
பாரம் சுமக்கும்
நேரம் கூடக் கூட..

மீண்டும்
கழுத்து நரம்பு புடைக்க..
சுமக்கும் கையோ தளர்ந்து வீழ..
நடை பின்ன..

இனியும் முடியாது!
எனும் போதில்

பாரத்தை
மீண்டும்
மறு கைக்கு மாற்ற வேண்டும்.
ஆட்சி மாற்றம் போல்.

Thursday, May 19, 2011

சுயதொழில் நாட்டை உயர்த்தும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




அழைப்பு மணி
மெல்லச் சிணுங்க
கதவு திறந்து
தயக்கங்களோடு
தலைநீட்டியு போது

ஷுவும் டையுமாய்
டக்செய்த மிடுக்கோடு
இளைஞனொருவன்

ஒரு கையில்
உள்ளதை மறைக்க
பின்னால் மடக்கி
தத்துபித்தென்று
தமிழான ஆங்கிலத்தில்
ஏதோ ஒன்றை
விற்கத் துடித்தான்

வாங்கித் தீரவேண்டும்
என்ற அவசியமில்லையாம்
சும்மா
டெமோ பார்த்தால்
போதுமென்றான்

சமாளித்து அனுப்பிவிட்டு
கதவு சார்த்தித் திரும்ப,

மீண்டும்
அழைப்பு மணி
இளம் பெண்ணொருத்தி
களைத்த முகத்தோடும் குரலோடும்
புதுக் கம்பெனி
விளம்பரத்திற்காய்
எனச் சொல்லி
ஏதேதோ எடுத்து நீட்டி
இலவசங்களோடு
விற்பனை என்றாள்.

சலித்துத் தட்டிக் கழித்து
விரைந்து தாழ் அடைத்து
உள் நுழைய,

மீண்டும்
அழைப்பு மணி..
சிடுசிடுத்த முகத்தோடு
படீரெனக் கதவு திறக்க
நரைக் கிழவரொருவர்

ஊறுகாய் வடாம் வத்தல்
பாக்கெட்டுகளோடு
வழியும் வியர்வை துடைத்து
தடுமாறும் கரம் நீட்டி
வார்த்தைகளைக் குதப்ப

ச்சே!
முகத்திலும் குரலிலுமாய்
எரிச்சல் காட்டி
விரட்டிக் களைத்து,

காலிங்பெல் நிறுத்தி
கதவை உள்தாழிட்டு

பதட்டம் தணிய
ஆசுவாசப் படுத்தும் முயற்சியில்

இன்றைய செய்தித்தாள் புரட்ட
கண்ணில் பட்டது.
நேற்று
ஓர் அரசு விழாவில்
பேசிய என்பேச்சு

அரசாங்க வேலை..
அரசாங்க வேலை..
என்றில்லாமல்
சுயதொழில் செய்து
எல்லோரும்
நாட்டை உயர்த்தணும்.

Wednesday, May 18, 2011

மனிதத் தின்னிகள்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



காலைநேரக் கண்விழிப்பு
அநிச்சையாய்க்
கண்ணும் மனமும் தேட,

வீடெங்கும்
சிதறிக் கிடக்கும்
செய்திக் குப்பைகள்
வார்த்தைகளும் படங்களுமாய்.

பழைய குப்பைகள் விலக்கி
புதிய குப்பைகள் தேடும்
கண்ணும் மனமும்.

காலை தினசரி..
பதட்டம் தொற்றிப்
புரட்டப் புரட்ட..

முதல் பக்கம் தொடங்கி
கடைசிப் பக்கம் வரை
பெரிய செய்தி
சிறிய செய்தி
பெட்டிச்செய்தி
கடைசிச் செய்தி
தேடத் தேடச்
சலித்தது மனசு

தாளின்
உள்ளே இறங்கியும்
செய்திகளைக்
கொட்டிக் கவிழித்தும்
தீவிர தேடல்

ஏன் இப்படி?
எங்கே! சாவும் பிணமும்
எங்கே! கொலையும் விபத்தும்
எங்கே! யுத்தமும் வெறியும்
எங்கே! இரத்தமும் சதையும்
என்ன எழவு செய்தித்தாள்?
இவைகளில்லாமல்

வழிந்தோடும் இரத்தமின்றி
சிதறிய உடல்களின்றி
எழுத்துக்களும் படங்களும்
வெறுமையாய்

கண்வெறிகொள
மனசு பிறாண்ட
எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும்
பித்தேற.. பித்தேற..

வேறுவழியில்லை
கண்ணும் மனசும் பரபரக்க

பழைய செய்தித்தாள்கள்
பழைய குப்பைகள்
புரட்டப் புரட்ட
மனசு நிறைந்தது

எழுத்துக்களும் படங்களும்
முழுமையுற
குவியல் குவியலாய்ப்
பிணங்கள்

மதக்கலவரத்தில்
எட்டுபேர் உயிரோடு எரிப்பு!

கார் குண்டு வெடிப்பு
இருபது பேர் உடல் சிதறி மரணம்!

இரசாயண குண்டு வீச்சு
எரிந்து கரிக்கட்டைகளான
அப்பாவிப் பொதுமக்கள்!

இரத்தம், நிணம்,
பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…

பிணவாடை மூக்கைத் துளைக்க
பித்தம் தெளிய
இருப்புக்குச் சேதமில்லாமல்
நாள் தொடங்கியது

Sunday, January 16, 2011

சாமியேய்ய் மரணம் ஐயப்பா !!

- மலையருவி


சாமியேய்ய் மரணம் ஐயப்பா!

சரண கோஷங்களோடு
மரண கோஷங்களும்
வானைப் பிளந்தனவே!

ஐயப்பா!
கலியுகக் கடவுளாமே! நீ
இப்படிக் காலனாய் ஆனதென்ன!

இருமுடி சுமந்த உன் மக்கள்
ஒருமுடியும் இழந்ததென்ன!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
எனக் காத தூரங்களைக்
கடந்த கால்கள்

பிதுங்கி வழிந்த மனிதநெரிசலில்
அச்சத்தின் உச்சத்தில்
சக பக்தர்களையே
மிதித்துத் துவைத்த
கொடுமை!
என்ன? உன் திருவுளமா!

புல்மேடு தரிசனம்
புதைமேட்டுக்கு அழைத்ததென்ன!
மகரஜோதி
இப்படி
மரணத்தின் நுழைவாயில்
ஆனதேன்!

மணிகண்டா!
உன் சன்னதி மணியோசை
சாவுமணி ஆனதெப்படி!

சாஸ்தாவே!
எங்கள் வாய்க்கரிசி
வாய்த்த வழக்கென்ன
வகையறியோமே!

அரிஹர சுதனே!
உன்னைத் தேடிவந்த
சாமிகளைக் சவக்குழிக்கு
அனுப்பிவிட்டு
இனி
யாரைக் காத்து இரட்சிக்கத் திட்டம்!

சாமியேய்ய் மரணம் ஐயப்பா...!!