Sunday, November 28, 2010

சுற்றுச் சூழல் உன் சுற்றம் -

மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)





பேரண்டத்தின் ஒரு துகளாம்
பூமிப் பந்து

ஆயிரம், இலட்சம்
கோடி, கோடானுகோடி ஆண்டுகளாய்

எரிந்து கொதித்து
குளிர்ந்து நனைந்து
நிலமாகி
வளிதோன்றி
நீர் சூழ்ந்து

நீர்ப்பாசியாகி
செடியாகி கொடியாகி மரமாகி
ஊர்வனவும் பறப்பனவும்
நடப்பனவும் ஆகிநின்ற
பல்லுயிர்ப் பெருக்கத்தின்
விளைநிலம்.

இயற்கை எனும்
இன்முகம் காட்டிய
இவ்வுலகு

மனித விலங்குகளால்
நீரும் கெட்டு
நிலமும் கெட்டு
காற்றும் கெட்டுக்
களையிழந்த தேனோ?

சுற்றுச் சூழல் உன் சுற்றம்

மனிதா!
பூமி
உனக்கு மட்டும் சொந்தமல்ல
கோடிக்கணக்கான
தாவர, பறவை, விலங்குகளின்
தாய்மண்

இயற்கை
உலகின் இதயம்
நிலத்தை, நீரை, காற்றைப்
பயன்படுத்து
பாழ்பாடுத்தாதே!