Friday, August 6, 2010

பேரண்டமும் நானும் -மலையருவி-

அடடே
செவ்வாய் தோஷம்!
பரிகாரம் பண்ணு
மகாலட்சுமியாட்டம் பொண்ணு வருவா?

பேர்ல ஒரு A கூட சேர்த்துக்க!
அப்பத்தான்
கூட்டுத்தொகை 2 -ல வரும்
அப்புறம் பாரு
கலக்டர் உத்தியோகம்தான்?

ஒன்னோட ராசிக்கு
நீலமே ஆகாது
அதக்கழட்டு மொதல்ல!
பச்சக்கல்லப் போட்டுப்பாரு
கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்?

வாசக்காலு வச்ச
திசையே சரியில்ல!
ம்.. அப்பறம்
அடுப்பங்கரையை மாத்து!
தென்கிழக்குத்தான்
அக்கினி மூலை
மகாராசனாட்டம் பவனிவருவ?

சித்தன்மல பீர்சாமியார
ஒருதடவைப் பார்த்து
தட்சனை கொட்டி
கும்பிட்டு வந்தா
கோடி கோயிலை சுத்துன புண்ணியம்?

தோஷம், பரிகாரம்
ராசி, வாஸ்து
சாமி, தட்சணை
ஓயாத இரைச்சல்களுக்கு நடுவே!

பேரண்டப் புழுதியின் துகள்கள்!
வானக் கடலின் துளிகள்!
துகள்கள்
துளிகளின்
உள்ளியங்கும் பேரண்டம்.

இடவலமற்று
திசைகளற்று
மொழியற்று
வடிவுகளற்று
நிறமற்று
வேடங்களற்ற
பேரண்டம்

என்னுள் தொடங்கி பேருருக் கொள்ளும்
என்னும் அடங்கி சூக்குமமாகும்

பேரண்டமும் நானும் ....

-மலையருவி-