Thursday, December 31, 2009

இவ்விடம் யாவரும் நலம்!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

அன்பு மகன் சிரஞ்சீவிக்கு,

இவ்விடம் யாவரும் நலம்!

நீ அனுப்பிய பணம் கிடைத்தது.

அம்மாவுக்கு
ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிட்டது
தூக்கமில்லை
மூச்சுவிட அதிக சிரமப்படுகிறார்
இருந்தாலும்
வீட்டுவேலைகளெல்லாம் அவள் தலையில்தான்
என்ன செய்ய!

உன்மனைவி
உன் மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம்
அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்!

எனக்கு
வழக்கம் போல்தான்!
இப்போ கொஞ்சம் கொஞ்சம்
தட்டுத் தடுமாறி நடக்க முயற்சிக்கிறேன்!
சக்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்
பி.பி.தான் அப்பப்போ ஏறிவிடுகிறது
கால்காயம் ஆறிவருகிறது

நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள்

இவ்விடம் யாவரும் நலம்!!

தைரியத்துடன் அப்பா

வைத்தியநாதன்

Wednesday, December 30, 2009

செம்மொழியும் இரத்தவாடையும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

என் அறை முழுவதும் செம்மொழி?

செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..

என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..

படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..

மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது

பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்

சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்

இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!

இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!

மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை

பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!

என் அறை முழுவதும்.. .. ..

Sunday, November 29, 2009

அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பிரசவ அறைக்கு
உள்ளே
மகவு ஈனும்
தாயின்
வேதனை முனகல்

வெளியே
கணவன்,
உற்றார் உறவினர்
நட்பு வட்டம்

வெடிக்கும் வேதனையின்
கதறலைத் தொடர்ந்தது,
குழந்தையின்
மெல்லிய அழுகையொலி.

தேனாய் இனித்தது.

காத்திருந்தோருக்குக்
கற்கண்டாய்ச்
சேதி!
தாயும் சேயும் நலம்!

குழந்தைக்குப் பெயர்?
சூட்டி மகிழ
தாய், தந்தை
தாத்தா, பாட்டி
உறவு, நட்பு
ஆயிரமிருந்தும்

ஓடு! ஜோசியக்காரனிடம்,

என்ன பெயர் வைக்க?
நட்சத்திரப்படி,
ரி, ரீ, லு, லூ
எனத்தொடங்கும் பெயர்வை!
இதுவோ? இது போன்றோ?

எழுத்து இத்தனைதான்!
கூட்டினால்
எழுத்தெண்ணிக்கை
இத்தனை? வரவேண்டும்.

தமிழில் பெயர்!
ஆகவே ஆகாது

அடச்சீ!
இதுக்கா பெத்தீங்க?

கருவறைகளும் காமக் களியாட்டங்களும்

மலையருவி

காமத்தை விட்டொழிக்க
பக்தர்கள் ஆனதெல்லாம்
பழைய கதை

பக்தி மீதூற
கடவுளைக் காமுற்று
கவிதைகள் பாடியதும்
கடந்த காலம்

காம வெறியேற
கடவுள் துணையோடு
பக்தைகளை மேய்வதுவே
புதிய கதையாச்சு

கருவறைகள்
கடவுள் இருப்பிடமாம்

எட்டிப் பார்த்து
கும்பிட்டு
தட்சணை கொடுக்க மட்டும்
பக்தர்கள்

பக்தைகளுக்கு
ஆண்டவன் ஆசியோடு
குருக்கள் குதூகலிக்க
அனுமதி!

புனிதம்! புனிதம்!!

காஞ்சிபுரத்து
தேவநாதன்கள்
கருவறைகள் தோறும்!

எங்கே கடவுள்?

Wednesday, October 28, 2009

சசிகலாவிலும் மு.க.அழகிரியிலும் முனைவர் பட்டமா?

முனைவர் நா.இளங்கோ

இனி வரப்போகும் ஒருநாளில்,

நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது.

வல்லுநர் குழு
வட்டமாய் அமர்ந்து
முந்திரி கொறித்து
வேலைக்களத்தில்
வென்ற நபரை
அறிவிக்க முனைந்தது

மாநிலத்தில்
நெருக்கடி,
மத்தியில் ஆளும்
தேசியக் கட்சியோடு
ஒத்துப்போகாத
மாநிலஆட்சி கலைக்கப்பட்டு
குடியரசுத் தலைவர் ஆட்சி!

சிக்கலே அதனால்தான்!

இருப்பது ஒருபதவி
யாருக்குக் கொடுப்பது?

ஜெயலலிதா சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
சசிகலாவில்
முனைவர் பட்டம் முடித்தவர்க்கா?

கலைஞர் சிந்தனைகளில்
முதுகல்வி முடித்து
மு.க.அழகிரியில்
முனைவர் பட்டம் பெற்றவர்க்கா?

வல்லுநர் குழுவில்,
அத்வானியில்
முதுமுனைவர் முடித்தவர்க்கும்
சோனியா
இருக்கைத் தலைவருக்கும்
ஓத்த கருத்து இல்லாததால்
நேர்முகத் தேர்வு ரத்து.!

Saturday, October 17, 2009

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

வீர மரணங்கள் கொண்டாடத்தக்கன

மலையருவி

மரணம் கொண்டாடத்தக்கதா?

யுத்தம்
இரண்டு பக்கங்களைக் கொண்டது

தர்மம் அதர்மம்
நியாயம் அநியாயம்
நன்மை தீமை
சரி தவறு

தீர்மானிப்பது யார்?

அதிகாரம்,
எதிரியை
பயங்கரவாதி எனச் சுட்டும்
தீவரவாதி எனத் தீர்மானிக்கும்

ஒடுக்கப்பட்டவனுக்கு,
போராட நேர்ந்தவனுக்கு,
யுத்தத்திற்கு
நிர்ப்பந்திக்கப் பட்டவனுக்கு,
அவன் ஆயுதத்தை
எதிரி தீர்மானித்த பிறகு
அவன்
போர் வீரனாகிறான்

களத்தில்
மரணங்கள்
தவிர்க்கப்பட முடியாதவை

வாமனர்களால்
மகாபலிகள்
களப்பலி ஆனபிறகு

மரணங்கள் கொண்டாடப்படுகின்றன

ஏனெனில்
மாவீரர்களின் மரணங்கள்
விதைக்கப்படுகின்றன.

Thursday, October 15, 2009

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

அரசியல் நாடகம் பார்க்கலாம் வாங்க!

மலையருவி

நாடகம் பார்க்கலாம்
வாருங்கள்!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்!

இயக்குநர் தந்த
வசனப் புத்தகத்தின்
ஆறுதல் வசனங்கள்
பிழையின்றி
ஒப்புவிக்கப்படுகின்றன

அரிதாரம் பூசாத
நடிகர்கள் எல்லாம்
பாத்திரம் அறிந்து,

மிகையுமில்லாமல்
குறையுமில்லாமல்
கனகச்சிதமாய்
நடிப்பில்
வெளுத்துக் கட்டுகிறார்கள்

வேடிக்கை பார்க்கும்
வெட்கம் கெட்டதுகளோ?
எப்போதும் போலவே
விநோதமாய் ரசிக்குது!

முள்கம்பி வேலிகளுக்குள்
வதை முகாம்களில்
சிக்கி,
ஓர் உலகம்
விழிபிதுங்கி,
சேறும் இரத்தமுமாய்
சின்னா பின்னப்பட்டுக் கிடக்கயில்
நாடகம் நடக்குது நலமாக!!

மேடையில்லாமல்
ஒப்பனையும் இல்லாமல்
நடக்குது நாடகம்
வெகு ஜோராய்

Saturday, October 3, 2009

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா நீ இன்னும் சாகவில்லை!

மலையருவி

ஞானிகளுக்கும்
மகான்களுக்கும்
மகாத்மாக்களுக்கும்
ஒரு சாபமுண்டு!

போதனைகள்
பொய்க்கும் வரை
பூமியில் அவர்களுக்கு
மரணமில்லை

மகாத்மா!
அஹிம்சை
உன் வேதம்

இன்றுவரை
இது
ஹிம்சைகளால் ஆன உலகம்!

நீ பூதவுடல் துறந்து
அரை நூற்றாண்டுக்கும்
மேலாகலாம்.
உண்மைதான்!
ஆனாலும்
நீ இன்னும் சாகவில்லை!

மகாத்மா!
நீ வாயால் சொன்னதையும்
வாழ்ந்து சொன்னதையும்
நாங்கள்
காந்தீயம் என்போம்.!

உன் காந்தீயம்
என்றைக்குத்
தேவைப்படுவதில்லையோ?
அன்றைக்கு
உனக்கும் வேலையில்லை!

மகாத்மா!
அப்போது
நீ மரணமடைவாய்!
அதுவரை நீதான் சாகமாட்டாய்!

Wednesday, September 9, 2009

ஏது தொடக்கம்! ஏது முடிவு! - மலையருவி

ஏது தொடக்கம்! ஏது முடிவு!

எங்கே தொடங்குவது?
எங்கே முடிப்பது?

தொடக்கப் புள்ளி தெரியாமல்
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்

எங்கோ ஒரு இடத்தில்
எப்பொழுதோ ஒரு பொழுதில்
தொடங்கியிருக்க வேண்டுமே!
அந்தப் புள்ளி இல்லாமல் எப்படி?

முழுமைபெற்று
முடிந்து போகும்
அந்த முற்றுப் புள்ளி எங்கே?
தேடித் தேடித்
தேடித் தளர்ந்தேன்

ஏதோ ஒரு புள்ளியில்
என்றோ ஒரு பொழுதில்
முடிந்திருக்க வேண்டுமே!
அந்த முற்றுப்புள்ளி இல்லாமல் எப்படி?

***
எல்லாமே ஒரு வட்டம்
அதில்
மேலது கீழாய் கீழது மேலாய்
தொடக்கமே முடிவாய்
முடிவே தொடக்கமாய்
தொடக்கமுமின்றி
முடிவுமின்றி
இடைவெளி இன்றி

சுற்றி! சுற்றி!
சுற்றி! சுற்றி!
சுழற்சி!

ஏது தொடக்கம்! ஏது முடிவு!

Friday, September 4, 2009

விருந்தோம்பலும் பந்தியும் -மலையருவி

விருந்தோம்பலும் பந்தியும்

மலையருவி

பந்தி என்பது பகரும் காலை
முதல், இடை, கடை என மூன்றாகும்மே


முதல் பந்தி
பார்க்க உசிதம்
விருந்து வகைகள்
ஒன்றும் குறையாமல்
ஒய்யாராமாக
அதனதன் இடத்தில்
அமர்ந்திருக்கும்
அழகே தனி அழகு

ஆனால்
எப்பொழுதோ பரிமாறி
ஆறி அவலாகிச்
சூடும் சுவையும் குன்றியிருக்கும்

கடைசிப் பந்தி
கவலை அளிக்கும்
விருந்துக்கு அழகாம்
வடை, அப்பளம், பாயாசம்
பருப்பு நெய்யெலாம்
பந்திக்குப் பந்தி
பற்றாக்குறையாகி
கடைசிப் பந்தியில்
கைவிரிக்கும்

இடைநிலைப் பந்திகளே
இனிமை சேர்ப்பன

ஆனாலும்
இடைநிலைப் பந்திகளில்
இருந்து சாப்பிட
முன் அனுபவங்கள்
ரொம்பவும் முக்கியம்

முந்தைய பந்தி
முடியும் வரிசையை
முழுதாய் அறிந்து
முண்டி நின்று
கண்கொத்திப் பாம்பாய்
கவனிக்க வேண்டும்

முன்னவர் உண்டு முடித்து
இலைமடித்து
எழுவுதற்குள்ளாக
அந்த இருக்கையில்
நுட்பமாய் உடலை
நுழைத்து அமரணும்
இல்லையென்றால்
கண்மூடி கண்திறப்பதற்குள்
பந்தி நிரம்பி -நம்மைப்
பார்த்துச் சிரிக்கும்

அடுத்த பந்திக்கும்
இதே நிலைதான்

கவனம் பிசகாமல்
இடம் பிடித்தபின்
எச்சில் இலை
முன்னே இருந்தாலும்
காணாதது போல்
கடமையில்
கண்ணாயிருக்கணும்

ஆயிற்று,

இலையெடுத்து
மேசை துடைத்து
வகையாய் இலைபோட்டு
வீசி எறிந்தும்
கொட்டியும் ஊற்றியும்
சிந்தியும் சிதறியும்
விருந்து பரிமாறும்
விந்தைமிகு பக்குவத்தில்

தமிழனின் விருந்தோம்பல்
தலைகுப்புற
வீழ்ந்து கிடப்பதைப் பற்றி
நமக்கென்ன கவலை!

Monday, August 31, 2009

பிள்ளையார் அரசியல் - மலையருவி

பிள்ளையார் அரசியல்

மலையருவி

விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு போயி
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு

ஆனா!
நீதான் கொஞ்சம் ஒத்துழைக்கணும்

பக்தர்களாகிய
நம் தொண்டர்கள்
உற்சாகத்தில்
எல்லைமீறிப் போனாலும்
நீதான் கணேசா
கண்டுக்காம இருக்கணும்

வழியெல்லாம்
உன் அருமை பெருமைகளை
ஆடிப் பாடி
ஆர்ப்பாட்டம் செய்தாலும்
ஊரைக் கலக்கினாலும்
உனக்காகத் தானே கணபதி
ஒத்துக்கிட்டு பேசாம வா!

விஸ்வரூப தரிசன
விநாயகப் பெருமானே
கடலில் உனைக் கரைக்க
கஷ்டப்படும்
தொண்டனுக்குக்
கொஞ்சம் நீ ஒத்துழைச்சா
கட்சிக்கு நல்லது

கிரேனால தூக்கும் போதே
உன் கைகால்கள்
சிதைஞ்சிட்டா
பிள்ளையாரே
சிரமம் உனக்குமில்ல
சின்னவன் எனக்குமில்ல

உடைஞ்சி போகாம
அய்ந்து கரத்தானே!
நீ அழிச்சாட்டியம்
பண்ணாக்கா
கத்தியால உன்ன
கால் வேற கை வெறா
வெட்டறத தவிர வேற வழியில்ல

வெட்டுப்பட்ட பெறகும்
விக்னேஸ்வரா!
நீ கடலில் மூழ்கிக்
கரைஞ்சி போகலன்னா
ஏறி மிதிச்சித்தான்
ஏதனாச்சும் செய்யனும்

விக்ன விநாயகா!
ஒரு விக்னமும் நேராம
உன்னைப் பத்தரமா கொண்டு வந்து
கடல்ல கரைக்கறது என் பொறுப்பு

Sunday, August 30, 2009

தேசிய முகமூடி - மலையருவி

தேசிய முகமூடி

மலையருவி

பழைய முகமூடி
நைந்து போனதால்
தேவை
இப்போதைக்குப்
புதிய முகமூடி

அவசரத் தேவைக்கு
அணிந்து தொலைத்த
தனிநாடு முகமூடி
தரமற்று இருந்ததால்
தார் தாராகக்
கிழித்து எறிந்தோம்

அன்றைய தேவைக்குச்
சுயாட்சி முகமூடி
சுகமாயிருந்ததால்
அணிந்து சுகித்தோம்

ஊழல் சுயநல
வெய்யில் மழையில்
காய்ந்தும் நனைந்தும்
பழைய முகமூடி
நைந்து கிழிந்தது

முகத்தோடு
ஒருபாதி ஒட்டிக்கொண்டும்
மறுபாதி வெளுத்துக்
கிழிந்து தொங்கியும்
பழைய முகமூடி
பயனற்றுப் போனது

தேவை
இப்போதைக்கு
ஒரு புதிய முகமூடி

பரவாயில்லை!
முகத்துக்குப் பொருந்தவில்லை
என்றாலும்
தேசிய முகமூடியே
இருக்கட்டும்

சமாளித்துக் கொள்ளலாம்.

கவர்ச்சித் தலைவர்கள் தேவை -மலையருவி

கவர்ச்சித் தலைவர்கள் தேவை

மலையருவி


தேவை
கவர்ச்சித் தலைவர்கள்

நாளை ஆட்சியைப் பிடிக்க
இன்று
அவசரத் தேவை
வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்

முகமற்ற
முந்தைய தலைகளின்
முகவரிகள்
தொலைந்து போனதால்
புதிய தலைகள்
கவர்ச்சித் தலைகள்
கட்டாயம் வேண்டும்

பெருந்தலைவர்களின்
பெருங்காய டப்பாவையே
எத்தனை நாள்தான்
முகர்ந்து கிடப்பது

வசீகரமிக்க
வளப்பமான
வண்ண முகத்தோடு
தேவை
சில கவர்ச்சித் தலைகள்

வண்ணத்திரையின்
மின்னொளிகளில் மின்னும்
அட்டைக் கத்தித் தலைவர்கள்
அவசியம் வேண்டும்

நோட்டைக் குவிக்கும்
கோஷ்டித் தலைகள்
பேதங்களற்று
பெரிய மனதோடு
வலைகளை வீசிக் காத்திருக்க
கவர்ச்சித் தலைவர்கள்
கட்டாயம் சிக்குவர்

நாளைய வாக்குவங்கியாம்
இளைய தளபதிகளுக்கு
இன்முக வரவேற்பு

நாளை ஆட்சியைப் பிடிக்க
இன்று
அவசரத் தேவை
வாக்குகளை வாரிக் கட்டும்
கவர்ச்சித் தலைவர்கள்

Tuesday, August 25, 2009

வேடங்களின் பின்னே ஒரு வெற்றுமுகம் - மலையருவி

வேடங்களின் பின்னே ஒரு வெற்றுமுகம்

வேடங்கள் பொய்யெனில்
வேடம் புனைந்த
வேலன் பொய்யா?
வேலன் புனைந்த
வேந்தன் பொய்யா?

புனைகளின் புலம்பலில்
வேந்தன் வெல்கிறான்
வேலன் தோற்கிறான்

வேடம் புனைந்து
வினைகள் ஆற்றிட
வேடம் வெல்லுமோ?
வினைகள் வெல்லுமோ?

வேடங்களின் பின்னே
ஒரு வெற்றுமுகம்
வேதனைப் படுவதென்ன
வேடிக்கையா?

தொலைவது என் வாடிக்கை - மலையருவி

தொலைவது என் வாடிக்கை
மலையருவி

எனது நாட்குறிப்பேட்டில்
சில பக்கங்கள் குறைகின்றன

வாழ்ந்த தாள்களில்
வாடிக்கை தவிர
வேடிக்கை ஒன்றுமில்லை

வரைந்த நாட்களில்
தேய்ந்தவை தவிரத்
தேர்ந்தவை ஒன்றுமில்லை

நாட்குறிப்பேட்டின்
நமுத்துப்போன பக்கங்களில்
நானே தெரிகிறேன்
நானாகத் தெரிகிறேன்

குறைந்த பக்கங்களைக்
கூட்டிக் கழித்துக்
குழம்பித் தெளிந்து
தெளிவைக் குழப்பித்
தேடிப் பார்க்கிறேன்
தேதிகள் இழப்பில்லை

சில பக்கங்கள் குறைகின்றன – ஆனால்
தேதிகள் குறைந்ததில்லை.