Tuesday, September 18, 2012

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்

-மலையருவி


மலையருவி - நா.இளங்கோ

சாலையின் விளிம்பில்
சாக்கடையோரத்தில் படுத்திருக்கும்
நாயாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
என் கவலைகள்

எப்பொழுதாவது கிடைக்கும்
எச்சில் சோறும்
எலும்புத் துண்டுமான
சில ஆறுதல் மொழிகளும்
இல்லாமல்
ஒட்டிய வயிற்றொடு
கொலைப் பட்டினியாய்..

வீசப்பட்ட
எச்சில் இலைகளுக்கும்
சொந்தம் கொண்டாடும்
அன்னக்காவடிகளாய்
வார்த்தைகள்,
இலைவழித்த கையோடு
மிரட்டும்

தொலைவில் எங்கோ கேட்கும்
சக நாய்களின்
குரைப்பொலி கேட்டுத்
திடுக்கிட்டு விழித்து
பசி மயக்கிலும்
குரலெடுத்துக் குரைத்துத்
தோழமை காட்டும்
என் கவலைகள்

Wednesday, September 12, 2012

நாளைய சாம்பல்

-மலையருவி


கோர்த்த நூலறுந்து
சிதறிய மணிகளாய்
ஆன்மாவின் நிராசைகள்
அறை முழுவதும்

எதிர்கால மரணத்தின்
ருசி பார்க்க
மொய்க்கும் ஈக்களாய்
உறவும் நட்பும்

மாலையின்
உதிர்ந்த மலரிதழ்களாய்
நிலையாமை,
வார்த்தைகளில்
கசங்கியபடி

கொடுத்த வாக்குறுதிகள்
நம்பிய எதிர்பார்ப்புகள்
பகையால் எரியும் வெறுப்புகள்
அன்பால் நனைந்த விருப்புகள்
வன்மம் குரூரம்
இரக்கம் கருணை
எல்லாம்
அந்தரத்தில் மிதக்க

குளிர்ப் பெட்டியில்
நாளைய சாம்பல்

Sunday, September 2, 2012

காக்கையின் கனவுகளில் கூடு

-மலையருவி



சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு..,

கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,

நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,

சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,

வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,

இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,

பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.

ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு

கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு

கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது

உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.

சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..