Thursday, June 13, 2019

உள்ளங்கையில் சிக்கிய மேகம்

-முனைவர் நா.இளங்கோ



குவித்து மூடிய
கைகளுக்கு இடையே
சிக்கிய மேகத்தை
எப்படிப் பார்ப்பது?

இலேசாகக்
கைகளைப் பிரிக்கவும்
அச்சம்.
இடைவெளியில்
மேகம் நழுவிவிடக் கூடும்

விரல் இடுக்குகளில்
மேகம் கசிந்து விடாதிருக்க
இறுகப் பற்றிய
விரல்கள் நடுங்கின

கைகளுக்குள்ளே
கருவரைச் சிசுவாய்
மடங்கிச் சுருண்டிருக்கும்
மேகத்தைப் பார்க்க
மனசு துடித்தது

விரல்களை விலக்கினால்..
கைகளைப் பிரித்தால்..
உள்ளங் கைக்குள்
சிறைபட்டிருக்கும்
மேகப்பறவை
விருட்டென்று சிறகடித்து
விரைந்து பறக்கலாம்

நடுங்கிய விரல்கள்
நாழிகை கடக்கையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மரக்கத் தொடங்கின

கைச்சிறைக்குள்
சிக்கிய மேகத்தை
என்ன செய்வது?

ஒருமுறை
ஒரே ஒருமுறையாவது
கண்ணாரக் காணாமல்
கைப் பிடிக்குள்
கட்டுண்ட மேகத்தைக்
கனவில் கண்டா
களிப்புறுவது.

காலம் கடக்க
காலம் கடக்க
மேகம் மறந்தது
கைகள் கனத்தன

கனத்த விரல்களை
மெல்லத் திறந்தேன்
ஆகாயத்தில்
மேகத்திரட்சி

உள்ளங்கையில்..?

Tuesday, June 4, 2019

காதல் வரமா? - காதலர் தின சிறப்புக் கவிதை

-முனைவர் நா.இளங்கோ




வாழ்க்கைப் பாதையின்
மேடு பள்ளங்களில்
சலியாத பயணம்…
இலக்கற்றுத் தொடங்கும்
ஒவ்வொரு பயணமும்
வெற்றியில் முடியும்

வாழ்க்கைப் பயணத்தில்
அலுப்புறும் போதெல்லாம்
சக பயணிகளோடு
நேசக்கரம் நீளுமந்த
ஒவ்வொரு கணத்திலும்
காதல் மலரும்

நீளும் கரங்களை
நிராகரிப்பதும் நேசிப்பதும்
அவரவர் விருப்பம்
ஒருகை விலக்கினால்
ஒருகை உறவுறும்

உள்ளம் உருக
உன் கரங்களைப் பற்றும்
அந்தக் கைகளைத்
தேடும்பயணத்தில்
உதாசீனப் படுத்தியக்
கரங்களை மறந்துவிடு

அழுந்தப் பற்றும்
அன்புப் பிடியில்
என்பு உருகும்
ஏக்கம் தொலையும்

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை
உயிர்ப்பின் அடையாளம்

மகரந்தச் சேர்க்கைகள்
இல்லாமல்
காய் ஏது? கனி ஏது?

உயிர்ப்பின் உன்னதம்
காதலின் இலட்சியம்

உள்ளத்தில் தொடங்கி
உடம்பில் முடிவதும்
உடம்பில் தொடங்கி
உள்ளத்தில் முடிவதும்
இரண்டும் காதல்தான்

மனுதர்மம் பேசி
சாதிப் பதாகைகள் ஏந்தி
சில கழுகுகள்
வானில்
வட்டமிடத் தொடங்கிவிட்டன

செத்த எலிதொடங்கி
நரமாமிசம் வரைக்
குத்திக் கிழிக்கும்
கொலைகாரக் கழுகுகளுக்கு
குழந்தைகளைக்
கொஞ்சத் தெரியுமா?

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை

உயிர்ப்பின் அடையாளம்

-மலையருவி-

கூடிப் பொங்கல் வைப்போம் - பொங்கல் கவிதை

முனைவர் நா.இளங்கோ




பழைய நினைவுகளின்
உசலாட்டத்தில்
உயிர் வாழ்க்கை
ஒட்டிய வயிற்றோடு

பசுமைப் போர்த்திய
பரந்த வயல்வெளி,
ததும்பி வழியும் வரப்புகளில்
துள்ளிக் குதிக்கும் கெண்டை,
வரப்பு வளைகளில்
எட்டிப் பார்த்து
கண்ணாம்பூச்சி விளையாடும்
சேற்று நண்டுகள்

நினைவுகளை
அசைபோட்டு அசைபோட்டு
வழியும் இரத்தத் துளிகளில்
விழித்தெழுகிறோம்

புதுப்பானை
கரும்பு மஞ்சள்
புத்தரிசிப் பொங்கல்
கனாக்கண்டு விழித்தெழுகையில்
வெடித்துப் பிளந்த
நஞ்செய் வயல்களாய்
நெஞ்சு வெடித்து
விவசாயி

மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடித்த
களத்து மேடுகளில்
சிதறிய
நித்தியக் கல்யாணிகளோடு
உழவனின் கனவுகள்

ஏறு தழுவிய தோள்கள்
ஏந்திய கைகளாகும்
சோகத்தில்
எதிர்காலம் வினாக்குறிகளோடு

சூலமேந்தி
பொய்மூட்டைகளைச் சுமந்து
விடாமல் துரத்தும்
தேசபக்தர்களின்
பலிபீடத்தில்
மண்டியிட்டு
தலைகுனிந்து நிற்கிறது
தேசம்..

நேற்றைய நினைவுகளின்
உற்சாகத்தில்
இன்றைய
வலிகளைக் கடந்து
நாளைய விடியலை
எதிர்நோக்குவோம்..

வியர்வைகளின் தேசமே!
இன்றைய உலைகளில்
நாம்
நம்பிக்கை நீர்ஊற்றி
விழிப்பின் நெருப்பினிலே
மக்கள் சக்தியெனும்
மகத்தான
பொங்கல் வைப்போம்
கூடிப் பொங்கல் வைப்போம்
குதூகலப் பொங்கல் வைப்போம்


                  -மலையருவி