Tuesday, December 16, 2014

சிதறும் கவனத்தில் ஒரு சிக்குக் கோலம்


-மலையருவி
கைகளிலிருந்து நழுவும்
சோப்புக்கட்டியாய்
பிடிக்கு அடங்காமல்
மீண்டும் மீண்டும்
வழுக்கிச் சிதறுகின்றன
என் கவனங்கள்

கட்டும் கயிறெடுத்து
காடு மேடெல்லாம் சுற்றி
கையிடுக்கில் கொணர்ந்தேன்,
கட்டுமுன்னே கைமீற,
கவனத்தைத் தவறவிட்டேன்

வேக நதிப்பெருக்கை
வென்றுவிடும்
மனஓட்டம்,
கட்டும் அணையுடைத்து
கண்டதை சுருட்டிவரும்,
நதியை அடக்கிட்டால்
நன்மைக்குப் பயனாகும்

சாட்டை எடுத்தால்
மனக் குதிரை அடங்கிடுமா!
திமிறித் தடையுடைத்து
திசையெல்லாம் திரிகிறதே!
கட்டுக்குள் அடக்கிவிட்டால்
காதங்கள் கடக்கலாம்

சலன விரலிடுக்கில்
மெல்ல வழிந்து
சிதறும் கவனத்தில்
ஒரு சிக்குக் கோலம்
சிரிப்பது ரகசியமே!

Thursday, January 30, 2014

அடையாளக் குறி எங்கே?


மலையருவி - முனைவர் நா.இளங்கோ


அடையாளமில்லாமல்
எப்பொழுதும்
நான்
அறியப்படுவதில்லை

ஊர், நகரம் தொடங்கி
எல்லைகள் தாண்டத் தாண்ட
மாறுகின்றன
என் அடையாளங்கள்.

சாதி, வர்க்கம், மதம்,
மொழி, இனம், தேசம் என
அடையாளங்கள் குறியிடப்படும்
மாறும் அடையாளங்களே
நான் என்றால்
மாற்றங்கள்தான்
எனது
முதல் அடையாளம்.

அடையாளக் குறிகளால்
பலநேரம்
ஆபத்துகள் விளைந்தாலும்
சில அனுகூலங்களுக்காக
அவற்றைத்
துறந்துவிட மனமில்லை

ஒரே சமயத்தில்
இரண்டு மூன்று அடையாளங்கள்
கையிருப்பில்,
தேவைக்கேற்ப மாற்றி மாற்றிப்
பொருத்திக் கொள்ள வசதியாக.

அடையாளங்கள்
அதிகாரத்தோடு தோழமை கொள்ள
அதிகாரங்களோ
அடையாளத்தை அழிக்க முயலும்.

தனித்து
இருட்டறையில்
எல்லா
அடையாளக் குறிகளும் துறந்து
என்னை நானே
எதிரிட்டுப் பார்க்கையில்
நான் என்பதே இல்லை அங்கே.

- முனைவர் நா.இளங்கோ

Sunday, January 26, 2014

காவல்


மலையருவி - முனைவர் நா.இளங்கோ 

தம்பி வைக்கும்
ஒரு உருண்டை சோறும்,
அக்கா ஊற்றும்
அரை டம்ளர் பாலும்,
அப்பா மென்றுத் துப்பும்
எலும்புத் துண்டுகளும்,
அண்ணன் எப்போதாவது
எட்டி உதைக்கும் உதையும்
எங்கள் வீட்டுக்
கருப்புப் பூனைக்குப்
பழக்கமானதுதான்
ஆனால்
அம்மாவின்
புடவைக் கந்தலில்
விழி திறக்காது
சுருண்டுக் கிடக்கும்
எலிக் குஞ்சுகளுக்குக்
காவலாய் இருப்பது மட்டும்தான்
புதுசோ புதுசு.

Saturday, January 25, 2014

பேச்சுவார்த்தை.


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


அன்றைக்கு,
நாக்கால் சொறிந்துகொள்ளும் சுகத்தில்
நீ தொலைத்துவிட்ட தன்னம்பிக்கை
தவறிப் போய்விடவில்லை.
அது
அவசரத்தில்
யார் வீட்டுத் தோட்டத்திலோ
புதையுண்டு போயிருக்கிறது.

சரி! பேசுவோம்.
நீயும் வா! அவனையும் கூப்பிடு!
பேசுவோம்,
பேசிப் பார்ப்போம்.
எல்லாமே,
பேசக்கூடிய விசயங்கள்தான்.

கூடிக் கூடிக்
கைகளை உயர்த்தாதே!
மூச்சில் அனலை ஏற்றாதே!
அது ஆபத்தின் அறிகுறி.

முகத்தில் வழியும்
இரத்தத்தைத் துடை!
கை கால்களை அசைக்காதே!
முனகலை நிறுத்து!
எல்லாமே,
பேசத் தீர்க்கக் கூடியதுதான்.

பேசாதே!
குரலை உயர்த்தாதே!
அது அதிகப் பிரசங்கித்தனம்.
தலையை ஆட்டு
மேலும்.. கீழுமாய்..
ஆகா! ஆகா!!
தீர்ந்தது பிரச்சனை.

எல்லாமே,
பேசத் தீர்க்கக் கூடியதுதான்.

Tuesday, November 12, 2013

குரு இல்லாமல் பிரபஞ்ச இயக்கம் எப்படி!


மலையருவி
(முனைவர் நா.இளங்கோ)

நீண்ட நாட்களாய் 
ஒரே குருவுக்குச்
சீடனாயிருப்பது..
தொடரும்
ஆன்மீகத் தேடலுக்கு
சலிப்பைத் தந்தது.
எப்பொழுதும்
சீரான கால இடைவெளிகளில்
புத்தம் புதிய சாமியார்கள் 
எனக்குக் குருவாவதுண்டு.
பழையவர்கள்
பெரும்பாலும் 
வழக்கு, ஜாமீன், சிறை என்று
பரபரப்பாகி விடுவதால்
தொடர்ந்து.. 
குருவாயிருக்க சாத்தியமில்லை
தொடரும் வழக்கத்தில் 
புதிய தேக்கநிலை
புதிய குரு வேண்டும்
அண்மையில் பிரபலமான,
தாடியுடனோ இல்லாமலோ,
தேஜஸ்மிக்க,
வார்த்தைகளில் வசீகரிக்கக் கூடிய,
அயல்நாட்டு பக்தர்கள் மண்டிய,
பல கோடிகளில் ஆசிரமம் நடத்தும்
நானே பிரம்மம் 
எனச் சவால்விடும்
புதிய சாமியார் வேண்டும்
பழைய குருவைக் 
கழட்டிவிடும் தருணமிது
பழசோ புதுசோ
குரு இல்லாமல்
பிரபஞ்ச இயக்கம் எப்படி!
உள்முக வெளிமுகத் தேடல் எப்படி!

புதிய குரு
புதிய தீட்சை
புதிய தேடல்
புதிய நான்..

Monday, July 1, 2013

கால்களும் காலங்களும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


வாகனங்கள்
பெருகியோடும்
நெடுஞ்சாலைகளில்
தடம்மாறாமல்
கைகளும் மனதும் சலிக்க..
துச்சாதனன் கைச்சேலையாய்ச்
சாலைகளை உரித்தபடி
தொடரும் பயணங்கள்
என்னை வெறுப்பேற்றும்

பாம்பாய் நெளியும்
ஒற்றையடிப் பாதைகளில்
விழிகள் மேய
வானை முத்தமிட்டுப்
பாதைகள் துழாவி
மேய்ந்து திரியும்
பயணங்கள்
என்னை ஆரத்தழுவும்

தேய்ந்து வெளுத்தப்
பாதைகளின் இடையே
விழி காட்டும்
வழி திரும்ப..
நெருஞ்சி விரிப்பில்
கால்கள்
புதுப்புதுப் பாதைகள் சமைக்க
சிலுவைகள் சுமக்கும்

கால்கள் கிழித்த
மண்ணின் வடுக்கள்
இனிவரும் பாதங்களுக்குப்
பல்லக்குகள் சுமக்க
வழிமேல் விழி புதைக்கும்
பாதைகளின் பயணத்தில்
நடப்பன
கால்கள் மட்டுமல்ல
காலங்களும்.

Sunday, June 23, 2013

வாழ்க்கை ஈ மொய்த்துக் கிடக்கின்றது

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


நிமிடங்களைச் சிதறி,
மணிநேரங்களை
வாரி இறைத்து,
வசிப்பிடங்கள்
அலங்கோலமாய்ப்
பொலிவிழிக்க,
கசக்கி வீசப்பட்டுக் கிடக்கின்றன
பகலும் இரவும்.

வாரங்களும் மாதங்களும் கூட
கிழித்தெறியப் பட்டுள்ளன.
கடிகாரங்களோடு
நாட்காட்டிகளும்
பொசுங்கிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும்
புறக்கணிக்கப்பட்ட குப்பைகளோடு
நிரம்பி வழிந்து கிடக்கிறது
காலம்.

குப்பைத் தொட்டியை
நிரப்பும் அவசரத்தில்
பொசுக்கப்பட்டு,
வீசப்பட்டு,
கிழிக்கப்பட்டவைகளோடு
சேர்ந்து
ஈ மொய்த்துக் கிடக்கின்றது
வாழ்க்கை