மலையருவி
(முனவர் நா.இளங்கோ)
புதுச்சேரி-8
உலகம்
மேசைக்குள் அடங்கி
நம் மடிக்குள்ளும்
அடங்கிவிட்டதா?
இன்று
கணினி இல்லாத இடமேது?
செய்யாத பணியேது?
எழுத,
கணக்குப் போட,
படம் வரைய,
பாட்டுக் கேட்க,
திரைப்படம் பார்க்க
எல்லாமாகிப் போன
கணினி
வேகம், அதிவேகம்,
துல்லியம், நம்பகம்
அளவற்ற கொள்ளிடம்
எல்லாவற்றிலும்
மனிதனை மிஞ்சும்
மாயப் பெட்டகம்.
இணைய வலையில்
சிக்கிய மீன்களாய்
மனிதர்கள்
எதையும் தேடுபொறிகளில்
தேடிக்கொள்ளும்
விரல்களும் விழிகளும்
மின் அஞ்சல்,
இணைய வழி-
பார்க்க, பேச.
உரையாட, உறவாட
முகங்கள் அற்ற
இணைய வெளியில்
நீங்களும் நானும்
கணினிப் புரட்சி
எங்கும் எதிலும்
இடைவெளி,
தூரம், தொலைவுகள் இல்லாத
உலகம்
நாளை
மனிதர்களை
நட்பை, உறவை,
பாசத்தை, அன்பை
மீட்டெடுக்குமா
கணினிப் புரட்சி.