Wednesday, July 11, 2012

என் ஞாபக நதி


-மலையருவி


பல நூறு, ஆயிரம், கோடி
நினைவுகளால்
பொங்கிப் பிரவகிக்கிறது
என் ஞாபக நதி

கருப்பையில்
கைகால் முடக்கித்
தலைகீழாக
நான்
இருந்தநாள் தொடங்கி
நீர் கசிந்து மெல்லத் திரண்டு
பள்ளிப்பருவத் தடம்கண்டு
வழிந்து நீர்த்தாரையாகி
வாலிப மிதப்பில்
சிற்றோடை, பேரோடையாகிப்
பெருக்கெடுத்து
இன்றோ
காலத்தின் கரைகள் ததும்ப
பெருவெள்ளமாய்ச் சுழித்தோடுகின்றது
என் ஞாபக நதி

அதில்
சுழல்களும் புதைகுழிகளும்
ஏராளம், ஏராளம்
அதில் புதையுண்டன
என் மனசாட்சிகள்

மேலே நிலத்தில்
பெருகி வழிந்தோடும்
நதிக்கு இணையாக
என் மன அடுக்குகளின் கீழே
ஒரு ரகசியநதி
ஓடிக்கொண்டிருப்பதை
நான் யாருக்கும் சொன்னதில்லை
அது நதியல்ல சாக்கடை.
அதில் மிதந்தோடும் பிணங்கள்
என் குரூரங்கள்

மலைச் சரிவுகளிலும்
பாறையின் முடுக்குகளிலும்
தாவிக் குதித்துத் தட்டுத் தடுமாறிய
என் ஞாபக நதி
இப்பொழுது
பரந்த சமவெளியில்
பரபரப்பின்றி
சலனமற்றுத் தவழ்ந்தோடுகின்றது

சுழித்தோடிய நதி
வாரிக் கொணர்ந்த
தன்முனைப்பும் மமதைகளும்
சமவெளியை நோக்கிய பாய்ச்சலில்
கரையொதுங்கி விட்டன.

இப்பொழுது
விரிந்து பரந்து
விசாலமாய்த்
தெளிந்து
மென்மையாய்ச் சில்லிட்டு
படித்துறை இறங்கி
மூழ்கிக் குளிப்பவர்
சிலிர்ப்புற்று உவப்புற உதவி

பின்..
மெலிந்து தளர்ந்து
கடல் நோக்கித்
தளர்நடை இடுகிறது
என் ஞாபக நதி