Wednesday, July 18, 2012

முப்பாட்டன் வீடு


-மலையருவி


வீடு கைமாறிய பொழுதில்
முன்பு எப்பொழுதோ
சில பொழுதுகளில்
அந்த வீட்டின்
கதவுகள்
திறக்கப்பட்டதாய்
சில பெரியவர்கள் 
தம் பழைய நினைவுகளைத்
தூசி தட்டிக்
கதை சொன்னதுண்டு.

அது
சுவரில்
அதிஅற்புதமாகத் தீட்டப்பட்ட
ஒரு கதவு ஓவியமாக இருக்கலாம்
என்றும் நாங்கள் நம்பியதுண்டு

எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு
இடையில் பல கைமாறி
இப்போது,
சுதந்திரம் என்ற பெயரில்
எங்களுக்கு,
என்றான சந்தோஷத்தில்
கதவைப் பற்றியோ
வீட்டைத் திறப்பதைப் பற்றியோ
நாங்கள் யோசிக்கவில்லை

கொண்டாட்டங்கள் எல்லாம்
வீட்டைச் சுற்றியே இருந்தன
வீட்டின் அழகும்
மூதாதையர் பெருமையுமே
எங்கள் பேச்சாயிருந்தது.

முப்பாட்டன் வீட்டில்
கடந்த காலங்களில்
பலரும் சுருட்டியது போக
மீதமுள்ள பொக்கிஷங்கள்
மிதமிஞ்சிக் கிடந்தன

வீட்டுக்குள் நுழைய
எங்களைத் தவிர
பலருக்கும்
பலவழிகள் தெரிந்திருந்தன
உடைந்த ஜன்னல்கள் வழியாக,
தோட்டத்துச் சுவர்ஏறிக் குதித்து,
சிதைந்த மேற்கூரையின்
ஓடுகளைப் பிரித்து..
இவை போதாவென்று
உள்ளேயே
பல பழம்பெருச்சாளிகள்

காலக்கிரமத்தில்
கஜானாவும் காலியாச்சு
பொக்கிஷங்களும் கொள்ளை போச்சு

சாவி எங்கள் கைகளில்
பத்திரம் எங்கள் பெயர்களில்

ஒருமுறைகூட நாங்கள்
உள்நுழைந்ததில்லை
உள்நிறை வளங்களைக்
கண்டதேயில்லை

சமத்துவக் கதவின்
சாவி இருந்தும்
கதவைத் தேட முயன்றதுமில்லை
இருக்கும் கதவைக் காணவுமில்லை

கதவையும் திறக்காமல்
களவையும் அறியாமல்
கண்முன்னே
எம் முப்பாட்டன் வீடு
கணந்தொறும் சிதைய,
கதவு திறக்கும்
கணங்களுக்கான
விழிப்பைத் தேடுகின்றன
விழிகள் விரக்திகளோடு..