Thursday, October 18, 2007

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்

வீட்டுக்குள் வளர்ந்த விருட்சம்-மலையருவி

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

விதை விழுந்ததை எப்படி கவனிக்காமல் போனோம்
விதை விழுந்ததை மட்டுமா
அது வேர்விட்டு வளர்ந்ததையும் அல்லவா
கவனிக்கத் தவறிவிட்டோம்

தொலைக்காட்சி பெட்டி வரவேற்பரைக்கு வந்த பிறகுதான்
அது நடந்திருக்க வேண்டும்
அநேகமாக கேபிள் ஒயரோடு
அந்த ஆலம் விதை வந்திருக்க வேண்டும்

என்ன அசுர வளர்ச்சி
வந்த சில மாதங்களிலேயே
வேர்விட்டு... விழுதுகளைப் பரப்பி
வரவேற்பரை முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டு
வளர்ந்து செழித்தது ஆலமரம்

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கோ நண்பர்களுக்கோ
எங்கள் முகம் தெரியாமல்
அவர்கள் முகங்களைக் காட்டாமல்
அது வியாபித்திருக்கிறது

வீட்டுக் குழந்தைகள் விளையாட இடந்தராமல்
குறுக்கும் நெடுக்குமாய்க் கிளைகளைப் பரப்பி
கண்டபடி வளர்ந்து காடாக மண்டிவிட்டது

ஏன் பல சமயங்களில்
நாங்களே ஒருவரை பார்க்க முடியாமல்
பேசிக்கொள்ள முடியாமல்
இடத்தை அடைத்துக் கொண்டு
இருப்பிடத்தை இருட்டாக்கி விட்டது

யார் அந்த விதையைப் போட்டார்கள் என்றே தெரியவில்லை?
போயும் போயும்
வீட்டு வரவேற்பரையிலா அதைப்போடுவது....

வரவேற்பரையும் போதாமல்
சில கிளைகள்
படுக்கைஅறையையும்
எட்டிப் பார்த்து அச்சமூட்டுகின்றன.

ஆலமரத்தின் விழுதுகளுக்கிடையே
வேர் முடிச்சுகளில் சிக்கி
கிளைகளின் ஊடே இருகிய முகங்களோடு
விழிகள் நிலைகுத்தி
உறைந்து போகிறோம்

3 comments:

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
தங்கள் கவிதை நன்கு வளர்ந்து
செழித்துள்ளது.
மு.இளங்கோவன்
புதுச்சேரி

நளாயினி said...

ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் பாடசாலை விடுமுறை நாட்களில் வயல் வெளிக்கு போவோம். இதமான காற்று. சமைத்து தேனீரோடு போவோம் குடும்பமாக. ஒரு சின்ன பிள்ளையார் கோவில். அதன் அருகே பெரிய ஆலமரம். அதில் எல்லோரும் பாய்விரித்து அமருவோம்.அப்பா சங்கீதம் பாடுவார். அப்படியே கேட்டு மகிழ்வோம். அதிலேயே தூங்கிப்போவோம். ஆலமரத்துள் ஓடி விழையாடுவோம். விழுதுகளை பிடித்து கட்டி ஊஞ்சல் செய்து ஆடுவோம். மாலை வேளை நிலாவருகையை அழகாக பார்த்துவிட்டு மணல்மண்ணுக்குள்; கால் புதைத்து மீண்டும் குதூகலித்தபடி வீடு சேர்வோம்.

அதனால் தொலைக்காட்சி சீரியல்களை ஆலமரத்தக்கு ஒப்பிட்டதை கொஞ்சம் ஐPரணிக்க முடியவில்லை. மற்றபடி நன்றாக உள்ளது.

முனைவர் நா.இளங்கோ said...

கவிஞர் நளாயினி அவர்களுக்கு, உங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி!
எனது கவிதை உங்களின் ஈழ வாழ்க்கையையும் பிள்ளையார் கோயில் ஆலமரத்தையும் நினைவூட்டியதில் மகிழ்ச்சி!
/அதனால் தொலைக்காட்சி சீரியல்களை ஆலமரத்தக்கு ஒப்பிட்டதை கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை/
என்ற உங்களின் பார்வை என்னைச் சிந்திக்க வைத்தது.
நன்றி!!