Wednesday, September 19, 2007

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எழுதப்போகும் கவிதை- மலையருவி

எண்ணங்களாலே பின்னிய வலைகளில்
சிக்கிய கவிதையின்
இரத்தம் குடித்து
இளைப்பாறுகின்றது…
சிந்தனைச் சிலந்தி.

வார்த்தைப் புழுவைத்
தூண்டிலில் மாட்டி
சிரத்தையின்றிக்
கவிதையைப் பிடிக்க
தூண்டிலோடு போனது,
மீன்.

சொற்களைக் கொண்டு
விண்ணை முட்டக்
கலைநயத்தோடு கட்டிய மாளிகை
யதார்த்த உலகின்
அனுபவ அதிர்வுகளில்
ஆட்டம் காண்கிறது.

சொல்லுக்குள்ளே பொருளைத் தேடும்
தொடர்ந்த முயற்சியில்
மூச்சு முட்டுகிறது…
சுவாசத்திற்காக
தலை நீட்டுகையில்
கவிதை வானம்
தலைமேல் கவிழ்கிறது.

கழனிகளிலே
கவிதைப் பயிர்கள்
வார்த்தைக் களைகளால்
வளர்ச்சி குன்றின…
எழுத்தும் சொல்லும்
வேகமாய் வளர்கையில்
கவிதைகள் மட்டும்
காணாமல் போவதேன்

வாழ்க்கைப் பூக்களில்
வண்டுகள் உறிஞ்சிக்
காலம் காலமாய்க்
கட்டிய தேனடைகவிதைத் தேனாய்
நிரம்பி வழிகையில்
சிந்திய சிலதுளி
நெஞ்சம் நிறைந்து
நினைவில் இனிக்கிறது.

2 comments:

நளாயினி said...

கழனிகளிலே
கவிதைப் பயிர்கள்
வார்த்தைக் களைகளால்
வளர்ச்சி குன்றின…
எழுத்தும் சொல்லும்
வேகமாய் வளர்கையில்
கவிதைகள் மட்டும்
காணாமல் போவதேன்

அது தானே. நான் நினைக்கிறேன் நம்மை இன்னொரு படிநிலைக்கு உயர்த்துவதாற்காய் இருக்கலாம்.

முனைவர் நா.இளங்கோ said...

உண்மைதான்.
கவிதைகள் காணாமல் போகும்
வார்த்தைகள்
வாணவேடிக்கை காட்டும்