Sunday, July 15, 2012

நிஜங்கள் நிராகரிக்கப்படும் போது


-மலையருவி



நிஜம்
பலவண்ண மலர்களாய்ப்
பூத்துக்குலுங்கும்
நந்தவனத்தில்
வேர்களின் வாசம் நுகரக்
கூரிய நகங்களோடு
கரங்கள்
ஆழமாய் மண் பறிக்கும்

நிஜம்
மனம் லயிக்கும் இசையாய்க்
செவிக் கோப்பைகளில்
வழியக் காத்திருக்கையில்
அந்தகார இருட்டில்
மௌனத்தை மொழிபெயர்க்க
விரல்கள்
வேகவேகமாய்
அகராதிகளைப் புரட்டும்

நிஜம்
மேனி சிலிர்க்கத் தீண்டி
மெய்தொட்டுப் பயிலுகின்ற
தென்றலாய் வருகையில்
கைகள் இறுக்கி
கால்கள் மடக்கி
கணப்பைப் போர்த்தி
உடல்கள்
சுருண்டு முடங்கும்

நிஜங்கள்
நிராகரிக்கப்படும் போது

பொய்ம்மைகள்
புதுப்புதுக் கோலம் புனைந்து
புன்னகை தவழ
வலம் வருவது
விசித்திரமல்ல
நடப்பின் சித்திரம்


Wednesday, July 11, 2012

என் ஞாபக நதி


-மலையருவி


பல நூறு, ஆயிரம், கோடி
நினைவுகளால்
பொங்கிப் பிரவகிக்கிறது
என் ஞாபக நதி

கருப்பையில்
கைகால் முடக்கித்
தலைகீழாக
நான்
இருந்தநாள் தொடங்கி
நீர் கசிந்து மெல்லத் திரண்டு
பள்ளிப்பருவத் தடம்கண்டு
வழிந்து நீர்த்தாரையாகி
வாலிப மிதப்பில்
சிற்றோடை, பேரோடையாகிப்
பெருக்கெடுத்து
இன்றோ
காலத்தின் கரைகள் ததும்ப
பெருவெள்ளமாய்ச் சுழித்தோடுகின்றது
என் ஞாபக நதி

அதில்
சுழல்களும் புதைகுழிகளும்
ஏராளம், ஏராளம்
அதில் புதையுண்டன
என் மனசாட்சிகள்

மேலே நிலத்தில்
பெருகி வழிந்தோடும்
நதிக்கு இணையாக
என் மன அடுக்குகளின் கீழே
ஒரு ரகசியநதி
ஓடிக்கொண்டிருப்பதை
நான் யாருக்கும் சொன்னதில்லை
அது நதியல்ல சாக்கடை.
அதில் மிதந்தோடும் பிணங்கள்
என் குரூரங்கள்

மலைச் சரிவுகளிலும்
பாறையின் முடுக்குகளிலும்
தாவிக் குதித்துத் தட்டுத் தடுமாறிய
என் ஞாபக நதி
இப்பொழுது
பரந்த சமவெளியில்
பரபரப்பின்றி
சலனமற்றுத் தவழ்ந்தோடுகின்றது

சுழித்தோடிய நதி
வாரிக் கொணர்ந்த
தன்முனைப்பும் மமதைகளும்
சமவெளியை நோக்கிய பாய்ச்சலில்
கரையொதுங்கி விட்டன.

இப்பொழுது
விரிந்து பரந்து
விசாலமாய்த்
தெளிந்து
மென்மையாய்ச் சில்லிட்டு
படித்துறை இறங்கி
மூழ்கிக் குளிப்பவர்
சிலிர்ப்புற்று உவப்புற உதவி

பின்..
மெலிந்து தளர்ந்து
கடல் நோக்கித்
தளர்நடை இடுகிறது
என் ஞாபக நதி

Tuesday, July 10, 2012

இப்படிக்கு -கலியுகக் கடவுள்.


-மலையருவி


பரந்து விரிந்த பிரபஞ்சத்தின்
ஒரே புண்ணிய பூமி
எங்கள் இந்திய தேசம்.

இந்தப் புனிதபூமி
ஆயிரமாயிரம்
ரிஷகளின் யோகிகளின் மகான்களின்
சரணாலயம்

இந்த இருபத்தோராம்
நூற்றாண்டிலும்
சரணாலயத்தில்
எண்ணிக்கை குறையவில்லை

தினம் தினம்
ஓயாத அழைப்பு
காற்றுவெளி எங்கும்
சப்தமாய் ரூபமாய்
தொடரும் அழைப்புகள்

தியானம்,
வெட்டவெளி தியானம்,
பிரபஞ்ச தியானம்
உள்முக தியானம்
இப்படி
எத்தனை எத்தனையோ
தியான அழைப்புகள்

யோகம்,
பூரண யோகம்,
குண்டலினி யோகம்
காயகல்ப யோகம்
இப்படி
எத்தனை எத்தனையோ
யோக அழைப்புகள்

தரிசனங்கள்,
உள்ளே பார், வெளியே பார்,
மேலே பார், கீழே பார்
முகக் கண்ணால் பார்,
அகக் கண்ணால் பார்
இப்படி
எத்தனை எத்தனையோ
தத்துவ தரிசன அழைப்புகள்

இடைவிடாத அழைப்புகளின்
கீழே
முக்கிய அடிக்குறிப்பு

-பற்றறு, பந்தங்களைத் துற
ஆசைகளை அடியோடு வேரறு,
சில ஆயிரங்களுடனோ
இலட்சங்களுடனோ
கோடிகளோடோ வா!
பரிபூரண நித்திய ஆனந்தம் நிச்சயம்-

இப்படிக்குக்
-கலியுகக் கடவுள்.



Monday, July 2, 2012

உள்ளியங்கும் இயக்கமே உயிர்வாழ்வு..

 மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


முட்செடிகளும் புற்களும்
முளைத்துக் கிடக்கும்
அந்த வெற்றுநிலத்தில்தான்
குடைவிரித்து மலரப்போகும்
காலங்களுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
காளான்கள்,
வித்துக்களாய்

வறண்டு இறுகி
வெடித்துக்கிடக்கும்
இறந்த காலத்துக்
குளங்களில்தான்
சுழன்று சுழன்று
நீந்திக் களிக்கப் போகும்
பொழுதுகளுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
மீன்கள்,
முட்டைகளாய்

வெப்பத்தில் ஆவியாகி
மடிகனத்துச் சூல்கொண்டு
மென்காற்றில் சிலிர்ப்புண்டு
பரந்த கடல்நோக்கி
ஒளிரப்போகும்
எதிர்காலக் கனவுகளோடு,
சிப்பிகளின் இதழ்நுழைய
சரம்சரமாய் வீழ்கின்றன
முத்துக்கள்,
மழைத்துளியாய்

உள்ளியங்கும் இயக்கமே
உயிர்வாழ்வின் அடையாளம்

இருப்பே சிதைந்து
இருள் சூழ்ந்தாலும்
உள்ளியங்கும் இயக்கத்தால்
உருவாகும் எதிர்காலம்.

Friday, June 29, 2012

வெப்பத்தை உடுத்தி…

-மலையருவி


தகிக்கும் கோடையில்
வெப்பத்தை உடுத்தி
வெளிக்கிளம்பிய பொழுதில்

நிர்வாண நாட்களின்
நினைப்பில்
மேனி
ஆடைகளைக் கிழித்தெறிய
அவசரம் காட்டும்

சரசம் வேண்டி
நாக்கில் படுத்து
காமுற்ற நீர்வேட்கை
விரக்தியில்
படுக்கை சுருட்டும்

அகோரப் பசியால்
நிழல் புசிக்க
நீளும் கால்கள்
கவளங்களை நினைத்து
பருக்கைகளில் பசியாறும்

Monday, June 25, 2012

திணிக்கப்படும் கவளங்களாய் மதிப்பெண்கள்


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



அந்த நாளில்
ஓராண்டாய்த் தொடர்ந்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
ஓயாமல் சுழன்றடித்து
மூர்க்கமாய்க் கரையேறியது,
தேர்வு முடிவுகளாய்

காற்றின்
கோரத்தாண்டவத்தில்
முகமுடைந்து நெஞ்சழிந்து
வாழ்வை
வினாக்குறிகளால் நிமிர்த்தியபடி
மாணவர்கள் பலர்

இணைய மையங்கள் தோறும்
மதிப்பெண்களைப்
பொறுக்கியபடி
பெற்றோர்களும் மாணவர்களும்

தூக்கி எறியப்பட்ட
மேற்கூரைகளாய்ப்
பாடப்புத்தங்கள்

வழியெங்கும்
நொறுக்கி வீசப்பட்ட
கேள்வி பதில்களும்
சூத்திரங்களும்
வரைபடங்களுமாக
மிதிபட்டுக் கிடந்தன
இளைஞர் கனவுகள்

காற்று மழையின்
கவலையில்
பட்டினி கிடந்த
தங்களின்
அகோரப் பசிக்குப்
பிள்ளைகள் வாயில்
திணிக்கப்படும் கவளங்களாய்
மதிப்பெண்கள்

புயல் ஓய்ந்த
திருநாளில்

புயலின் சுவடுகள் துடைத்து
புதுப்பொலிவை
எதிர்நோக்கிக்
காத்திருக்கும்
எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.

Friday, June 22, 2012

காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை


-மலையருவி




காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.