Saturday, October 20, 2012

உள்ளிறங்கும் விஷம்

 -மலையருவி


படமெடுத்தாடிப்
பாய்ந்து தீண்டிய
வார்த்தைகளிலிருந்து
உள்ளிறங்கும் விஷம்

சொற்களுக்கிடையே
தொக்கி நிற்கும்
நிறுத்தக் குறிகளும்
நிசப்தமாய்
நினைவிழக்கச் செய்யும்

மொழியற்ற
மௌனங்கள் கூட
மதியை மயக்கி
மயக்கத்தில் ஆழ்த்தும்

வார்த்தைகள் நஞ்சென்றால்
இடைவெளிகளும்
குறியீடுகளும்
மௌனங்களும் வேறென்ன!

கடிவாயில் பல்புதைத்துத்
துப்பிய வி~ம் உறிஞ்சும்
வார்த்தைகள்
இன்னும்
வார்க்கப்படவே இல்லை.

துளித்துளியாய்
உதடுகள்
கக்கிய விஷம்
தன்மானச் சூட்டில்
விரைந்து உயிர்வாங்க
உடல்பரவும்.

Tuesday, September 18, 2012

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்

-மலையருவி


மலையருவி - நா.இளங்கோ

சாலையின் விளிம்பில்
சாக்கடையோரத்தில் படுத்திருக்கும்
நாயாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
என் கவலைகள்

எப்பொழுதாவது கிடைக்கும்
எச்சில் சோறும்
எலும்புத் துண்டுமான
சில ஆறுதல் மொழிகளும்
இல்லாமல்
ஒட்டிய வயிற்றொடு
கொலைப் பட்டினியாய்..

வீசப்பட்ட
எச்சில் இலைகளுக்கும்
சொந்தம் கொண்டாடும்
அன்னக்காவடிகளாய்
வார்த்தைகள்,
இலைவழித்த கையோடு
மிரட்டும்

தொலைவில் எங்கோ கேட்கும்
சக நாய்களின்
குரைப்பொலி கேட்டுத்
திடுக்கிட்டு விழித்து
பசி மயக்கிலும்
குரலெடுத்துக் குரைத்துத்
தோழமை காட்டும்
என் கவலைகள்

Wednesday, September 12, 2012

நாளைய சாம்பல்

-மலையருவி


கோர்த்த நூலறுந்து
சிதறிய மணிகளாய்
ஆன்மாவின் நிராசைகள்
அறை முழுவதும்

எதிர்கால மரணத்தின்
ருசி பார்க்க
மொய்க்கும் ஈக்களாய்
உறவும் நட்பும்

மாலையின்
உதிர்ந்த மலரிதழ்களாய்
நிலையாமை,
வார்த்தைகளில்
கசங்கியபடி

கொடுத்த வாக்குறுதிகள்
நம்பிய எதிர்பார்ப்புகள்
பகையால் எரியும் வெறுப்புகள்
அன்பால் நனைந்த விருப்புகள்
வன்மம் குரூரம்
இரக்கம் கருணை
எல்லாம்
அந்தரத்தில் மிதக்க

குளிர்ப் பெட்டியில்
நாளைய சாம்பல்

Sunday, September 2, 2012

காக்கையின் கனவுகளில் கூடு

-மலையருவி



சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு..,

கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,

நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,

சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,

வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,

இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,

பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.

ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு

கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு

கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது

உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.

சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..

Saturday, August 25, 2012

நழுவும் காலம்

-மலையருவி


கைளிலிருந்து
நழுவும் பந்தாய்க்
காலம் உருள,
கையின் இருப்பிடம்
இறந்த காலம்

சுழலும் காற்றாய்க்
காலம் வீச,
சிக்கிய
துகள்களுக்கோ
காற்றின் பாதை
நிகழ்காலம்

வில்லிடைக் கிளம்பும்
அம்பாய்க்
காலம் கடக்க
இலக்குகள் எல்லாம்
எதிர்காலம்

புடவியின் பார்வையில்
நழுவும் காலம்
பூமிப் பந்தின்
கானல் காட்சியே

Saturday, August 18, 2012

கடவுளிடம் கேட்ட வரம்!

-மலையருவி


வீதியின் விளிம்புச் சாக்கடை
சர்வ சுதந்திரமாய்ச்
சாலையின் நடுவில்..

சகதிக் களமான
சாலையைச் செப்பனிட்டு,
சாக்கடைக்கு வழியமைத்து,
ஊருக்கு வசதி செய்ய..

கோரிக்கை மனு,
நேரடிப் புகார்,
கண்டனக் கூட்டம்,
ஆர்ப்பாட்டம்,
மறியல்,
அடையாளப் பட்டினிப்போர்
என,
தொலைக்காட்சித் தொடராய்
நீண்ட போராட்டம்

ஆளுவோருக்குக் கேட்காத
மக்களின் குரல்,
அதிசயமாய்
ஆண்டவனுக்குக் கேட்டது.

ஊர்ப்பொது மன்றில்
அவசரமாய் ஆஜரானார்
கடவுள்.

என்ன வேண்டும்?
கடவுளின் கேள்விக்கு
ஆளாளுக்கு ஒரு கோரிக்கை.

சாலை, சாக்கடை வசதி,
குடி தண்ணீர், தொடர்ச்சியாய் மின்சாரம்,
பணம், பாத்திரங்கள்
மூக்குத்தி, புடவை
அரிசி, மண்ணெண்ணெய்,
சிலருக்குச் சரக்கு..
எனப் பட்டியல்கள் நீண்டன.

மலைத்தார் கடவுள்

எல்லோருக்கும் சேர்த்;து
ஏதாவது ஒன்று..
அதுதான் முடியும்
கறாராய்க் கடவுள்

நீண்ட விவாதத்தின் முடிவில்
ஊர்கூடி
ஒன்றே ஒன்று கேட்டது

இடைத்தேர்தல்

Tuesday, August 14, 2012

விடாமல் துரத்தும் கனவு

-மலையருவி

கவிஞர் மலையருவி

சாலை விபத்தொன்றில்
கைஉடைந்து
கட்டிலில் கிடக்கையில்

ஜவ்வு மிட்டாயாய்க்
காலம் நீளுகின்ற
அவஸ்தையில்

உறக்கம் தொலைத்துப்
படுக்கையில்
உருளவும் வழியின்றி
விட்டம் பார்த்துச் சலித்த விழிகள்
மெல்ல இமைமூடும்.

பசித்திருக்கும் வேளையில்
எனது இடதுகையே
எனக்குச் சோறூட்டத்
தவிக்கையில்
திடுமென முளைத்த
மூன்றாவது கையொன்று
வாய் ஊட்டும்

தட்டுத் தடுமாறி
மலையேறிக் குதிக்கையில்
கையில் பிணைத்த
கட்டுகள் கிழித்து
சிறகுகள் முளைத்துக்
காற்றை அலைக்கும்

பகைமுகத்தில்
ஆயுதம் தொலைத்து
எதிரிகள் சூழ
மரணத்தை எதிர்நோக்கி
விழிக்கையில்
உடைந்த கையின்
மாவுக் கட்டிலிருந்து
உடைவாள் ஒன்று நீளும்

கண்மூடும் பொழுதிலெல்லாம்
திரைவிரித்துக்
கனவுகள்
காட்சிகளாய் விரியும்
காட்சிகளில்
சுகித்தும் அதிர்ந்;தும்
திரை சுருட்டுகையில்
விழிகள் மீண்டும்
விட்டம் வெறிக்கும்.