கதவடைத்து
தெருவடைத்து
ஊரடைக்க
நாடடைக்கத்
தனித்திருந்தேன்
எல்லாம்
அடைத்த
பின்னும்
வயிறடைக்க
வழியில்லை
வாய் மூடி
கை கழுவி
வீடு மெழுகி
கிருமிநாசினி
தெளித்து
அழுக்குப்
போக்கி
கிருமி
கொன்று
சுத்தத்தைப்
பேணித்
தனித்திருந்தேன்
சுத்தம்
சோறுபோடுமெனச்
சொன்னவர்கள்
காணவில்லை.
எல்லாம்
கழுவி வைத்தும்
வயிற்றைக்
கழுவ
வழியில்லை
முகக்
கவசம்
போட்டதுபோல்
இறுகக்
கட்டி
வயிற்றுக்கும்
போட்டு
விட்டேன்.
கிருமியா?
பசியா?
எது
ஜெயிக்கும்
என்றறியா
மயக்கத்தில்
வீழ்ந்து விட்டேன்.
-மலையருவி