Monday, June 1, 2020

நாடெங்கும் தேரைகள்…

-மலையருவி

 



எங்கள் வீட்டுக்

குளியலறை ஜன்னலில்

ஒரு தேரை.

சில மாதங்களாக

ஒரே இடத்தில்..

 

இடம் பெயர்வதில்லை

ஒலி எழுப்புவதில்லை..

ஆனால்

உயிரோடுதான் இருக்கிறது.

 

எப்பொழுதாவது

கொஞ்சம் இடப்பக்கமோ

கொஞ்சம் வலப்பக்கமோ

அசையும்

உயிரோடுதான் இருக்கிறேன்

என்பதைக் காட்ட

 

எப்பொழுது உணவு

எப்பொழுது தண்ணீர்

உயிர் வாழ்க்கை எப்படி?

புரியாத புதிர்..

 

இடி மின்னலோடு

சுழன்றடிக்கும் சூறாவளி

கொட்டும் மழை

கொளுத்தும் வெயில்

எதற்கும்

அசைந்து கொடுக்காத

தேரை..

 

யார் வாழ்கிறார்

யார் சாகிறார்

பூமி குளிர்கிறதா

தீயில் வேகிறதா

சலனமில்லா

சஞ்சலமில்லா

மோன தவத்தில்

தேரை..

 

குளியலறையில்

மட்டுமல்ல

வீட்டின்

உள்ளேயும் வெளியேயும்

நகரமெங்கும்

நாற்றிசையிலும்

நாடெங்கிலும்

தேரைகள்..

தேரைகள்..

 

வாழும் களத்தில்

இருக்கும் இடத்தில்

கண்ணுக்கெதிரே

எது நடந்தாலும்

யாருக்கு நடந்தாலும்

அசைந்து கொடுக்காத

தேரைகள்

 

புத்தகம் தின்று

பட்டங்கள் செரித்து

மூளை வீங்கிக் கிடக்கும்

தேரைகள்

நாடெங்கிலும்

நடுவீட்டிலும்..


நடக்கிறோம்.. நடக்கிறோம்..


-மலையருவி

நடக்கிறோம்
நானும் என் குடும்பமும்..
நடக்கிறோம்
நானும் சக தோழர்களும்..

தேசத்தின்
குறுக்கும் நெடுக்குமாக
தெற்கிலிருந்து வடக்காக
மேற்கிலிருந்து கிழக்காக
தேசம் எவ்வளவு பெரிது

தலைச்சுமையால்
கழுத்து நெரிய
மூட்டை முடிச்சுகளால்
முதுகு நெளிய
நடக்கிறோம்.. நடக்கிறோம்
வலசை போன
பறவைகளாய்த்
தாய் மண் தேடி..

பஞ்சம் பழைக்கப் போய்
பாதிவழி மீள்கிறோம்
பீச்சியடிக்கும்
கிருமி நாசினிக்
குழாய்களில் குளித்து
லத்தி யடிகளில்
உடல் திமிறி
எல்லையற்று நீளும்
தார்ச்சாலைகளில்
தடம் தேய
நடக்கிறோம்..
நடக்கிறோம்..

சாலை விபத்துகளில்
ரயில் தண்டவாளங்களில்
பசி மயக்கத்தில்
செத்து வீழ்ந்தவர்களைச்
சுமக்க முடியாத
நடைப் பிணங்களாய்..

கொளுத்தும்
கோடை வெயில் குளித்து
வீசும் புழுதி
மண் பூசி
தாகம் தணிக்க
நீரின்றி
வயிற்றுப் பசிக்குச்
சோறின்றி
நடக்கிறோம்..
நடக்கிறோம்..

தேசமெங்கும்
தார்ச் சாலைகள்
எங்கள் ஊரிலும்
இதே தார்ச் சாலை
நடப்போம்
நடப்போம்

கால்நடையாய்..
நடந்து நடந்துக்
கால்கள் தேய்ந்தாலும்
சுமந்துச் சிவந்த
கைவிரல்களுக்குச்
சேதமில்லை..
தேர்தலன்று
மை வைக்க
விரல் வேண்டுமே!

Friday, May 15, 2020

வண்ணங்களின் அரசியல் -மலையருவி



வண்ணங்களின்
அரசியல் புரியாத
வெள்ளந்திகளுக்கு

கருப்போ
பச்சையோ
மஞ்சளோ
நீலமோ
சிவப்போ
காவியோ
எந்த நிறமானால் என்ன?

எந்த வண்ணமும்
இங்கே
இப்பொழுதெல்லாம்
தனித்துத் தெரிவதில்லை
தேவைகளுக்கு ஏற்ப
கொஞ்சம்
கூட்டியோ குறைத்தோ
மற்ற வண்ணங்களோடு
கலந்துக் கரைகின்றன

பகை வண்ணங்கள்
நட்பு வண்ணங்கள்
ஓவியர்களுக்குத்தான்..
இங்கே
அந்த பேதாபேதங்களுக்குக்
கொஞ்சமும் இடமில்லை

பகையை நட்பாக்கி
நட்பைப் பகையாக்கி
பகையின் பகையை நட்பாக்கி
நாளும்
புதுப்புது வண்ணங்களோடு
கலந்துக் குழைந்துக் கரைவதனால்
சொந்த வண்ணத்தின்
சுவடுகள் நினைவில் இல்லை.

சில வண்ணங்கள்
தனித்துவம் நிறைந்தவை
எளிதில்
எந்த வண்ணத்தோடும்
இழைந்து இயைவதில்லை
அது அந்தக்காலம்

இப்பொழுதெல்லாம்
நோட்டுக் கட்டுகள்
ரெய்டுகள்
நிலுவை வழக்குகள்
முதலான
நவீன தொழில் நுட்பங்கள்
எந்த வண்ணத்தையும்
எளிதில் இளக்கிக்
குழைத்து விடுகின்றன

எந்த
வண்ணமாய் இருந்தாலும்
கொஞ்சம்
காவி கலந்துவிட்டால்
எளிதில் வெளுக்காது
என்பது புதிய நம்பிக்கை

ஆனால்,
காலப் பயணத்தில்
கொட்டித் தீர்க்கும் பெருமழை
சுழன்றடிக்கும் சூறாவளி
சுட்டெரிக்கும் வெப்பம்
எந்த வண்ணத்தையும்
வெளுத்துவிடும்

ஊருக்கு உபதேசம்.. -மலையருவி



ஆயிற்று..
ஆயத்தங்கள் முடிந்தன
அனாதைப் பிணத்தை
வெள்ளைத் துணியின்
கிழிசல் தெரியாமல்
லாவகமாகப்
போர்த்திக் கிடத்தியாச்சு..

தலைமாட்டில் வாழைப்பழம்
செருகிய வத்திகள்
நெடியைக் கிளப்பும்
வத்திக் கங்கும்
மண்டிய புகையும்..

வக்கிரமும் குரூரமும்
மறைத்துக் குந்திய
நாலைந்து சோக முகங்கள்
பிணத்தைச் சுற்றி..

முன் யோசனையோடு
சில்லறை ரூபாய் நோட்டுக்களைக்
கொஞ்சமாய்ச் சிதறவிட்ட
துண்டு விரிப்பு..
பறந்துவிடாதபடி
நாலுபக்கமும் கனத்த கற்களோடு..

ஒப்பிக்கும் பாணியில்
கனத்த சோக மிரட்டலுடன்
பிணத்தின்முன்
பிச்சை வேண்டி யாசிப்பு

பலரும்
அனிச்சையாய்
வீசியெறிந்த
சில்லறைக் குவியலில்
மூச்சுத் தினறியது பணவேட்கை
நல்ல வேட்டைதான்..

பணத்துண்டை
முடித்துக் கிளம்பையில்..

அனாதைப் பிணத்தை
என்ன செய்வது?

மரணமும் பிணங்களும்
இயற்கையின் நியதி
அவற்றோடே
வாழப் பழகுங்கள்

வருங்காலம் நிச்சயமில்லை
மரணத்தோடு வாழும்
மனப்பக்குவம் வாய்த்துவிட்டால்
எதுவும் துன்பமில்லை.
ஊருக்கு உபதேசம்..

Tuesday, May 12, 2020

வயிற்றுச் சோறோ? வாய்க்கரிசியோ?



பூமி வெந்து
கும்பி வெந்து
மனசும் வெந்து
தகிக்கும் முன்னிரவில்
கிழிந்த கோரைகள்
குத்தீட்டுகளாய் முதுகில் தைக்க
வெக்கையின் தகிப்பிலும்
வயிற்றுத் தீயிலும்
புரண்டு புரண்டு..
தூக்கத்தை
விழிகளுக்கு இறக்கும்
பகீரத பெருந்தவங்கள்
தோல்வியில் முடிய

பின்னரவிலும்
மறுஒளிப்பாய்
தூக்கமற்ற இரவுகள்

உழைப்பும்
உழைப்பாளியும்
இல்லாமல்
அதிகாரப் பூனைகளுக்கு
உல்லாசம் இல்லை

நேற்றும்
அதற்கு முன்னும்.. முன்னும்..
வீசப்பட்ட
அரசின் வாக்குறுதிகள்
பாதுகாப்பாக
உங்களைச் சொந்த மாநிலத்திற்கு
அனுப்பி வைப்போம்

உழைப்புத் தீயில்
உணவு உண்டவன்
தட்டேந்தும் அவலம்
நடந்து சென்றால் வதை
வாகனங்களின்
பதுங்கிச் சென்றால் சிறை
சாகத் துணிந்தவனுக்கு
சமூக இடைவெளி சம்பிரதாயமே

நோயில் சாவதா?
நொந்து பசியால் சாவதா?
எது எப்படியானாலும்
தாய் மண்ணில்
சொந்தங்களின் அரவணைப்பில்
வயிற்றுச் சோறோ?
வாய்க்கரிசியோ?
அதுவே போதும்

-    மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

மாடித் தோட்டத்தின் மரண ஓலம்


பூத்துக் காய்த்துக்

குலுங்கி நிற்கும்
மாடித் தோட்டத்துக்கு
வந்தது சோதனை

வினோதப் பூச்சிகளின்
எதிர்பாராத் தாக்குதலில்
தோட்டம் சிதைந்தது
காய்கள் கருகின
இலைகள் சுருண்டன

செடிகளைக் கொடிகளைக்
காக்கும் வகையறியாக்
கவலையில் ஆழ்ந்தது வீடு

சரி, பூச்சி மருந்து தெளித்து
எருவைத்து நீருற்றி
தோட்டத்தைக் காக்கும்
முயற்சிக்குக் கைபிசைகையில்..  

உடலும் மூளையும் பெருத்த
ஊர்ப் பெரியவருக்கு
எப்படியோ செய்தி தெரிந்து
ஆரஅமர அவசரமாய்க் காட்சியளித்தார்

தோட்டத்தைக் காப்பது
உன் கடமை, என் கடமை, நம் கடைமை
என உபதேசம் தொடங்கினார்

அவசரமாய்க்
கொஞ்சம் எருவும் பூச்சி மருந்தும்
கொடுத்து உதவிடும்
கோரிக்கையை
வளைந்தும் நெளிந்தும் தண்டனிட்டும்
விண்ணப்பம் செய்தோம்.

நீட்டிய கரங்களைக்
கண்டும் காணாமல்
மீண்டும் உபதேசம்..
தோட்டத்தைக் காக்கும்
எங்கள் முயற்சிக்கு வாழ்த்துரைத்தார்.

செடிகளும் கொடிகளும் வாடி வதங்கின

விளைந்த காய்கள்
பூத்த பூக்களின்
அருமை பெருமைகளைத்
திக்குகள் எட்டும்
பேசி மகிழுங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
இடைவிடாது, இடைவிடாது..

ஊர்ப் பெரியவரின் உபதேசம் தொடர்ந்தது
தோட்டம் அழியாது
அழியவும் விடமாட்டேன்
நம்பிக்கை முக்கியம்

வாடி வதங்கும்
மாடித் தோட்டத்தின்
மரண ஓலத்தை
மீறி ஒலித்தன
தோட்டத்தின் புகழ் முழக்கமும்
போற்றி கீதமும்.

-மலையருவி