Wednesday, September 10, 2008

சிரிக்கப் பழகுங்கள்

சிரிக்கப் பழகுங்கள்
மலையருவி

பகல் இரவு
இரண்டு நேரங்களில் மட்டும்
மின்சாரம் தடைபடலாம்

வந்து வந்தும் போகலாம்
வராமலும் போகலாம்

மின்சார வாழ்க்கை
செயற்கையானது
இயற்கையை நோக்கித் திரும்புவோம்

சிறுதொழில்கள்
மின்சாரமின்றி நலிவடைகின்றதா?
உலக முதலாளிகளும்
பன்னாட்டு நிறுவனங்களும்
இருக்கும்போது
நம்மூர்த் தொழில்கள் எதற்கு?

சாதாரண குடிமக்கள்
மின்சாரமின்றி பழகிக்கொள்வது நல்லது
அது
நம் மூதாதையர்களுக்கு
நாம்காட்டும் மரியாதை

வாகனங்கள் வைத்திருக்கின்றீர்களா?
நடப்பது நல்லது
காலை மாலை மட்டுமல்ல
எப்பொழுதுமே நடப்பது நல்லது

வாகனங்களைத் தள்ளிக்கொண்டே
நடந்து பழகினால்
நானூறு ஆண்டுகள்
நலமாக வாழலாம்

பெட்ரோல் பங்குகளில்
வாகனங்களின் துணையோடு
முண்டியடித்து
வரிசையென்ற ஒன்றில்லாத
வரிசைகளில் நிற்கப் பழகிக்கொண்டால்
வருங்காலம் பிரகாசமாகும்

சிரிக்கப் பழகுங்கள்
அட சும்மா!
சிரிச்சித்தான் பழகுங்களேன்.

Sunday, September 7, 2008

அணுசக்தி ஒப்பந்தம்!

அணுசக்தி ஒப்பந்தம்!

மலையருவி

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது

நாளைக்கே இந்தியா ஒளிவீசப் போகுது

புண்ணியவான்! சாமி!
புஷ் மனசு வச்சிட்டாரு!

அணுசக்தி ஒப்பந்தம்
அமெரிக்க ஒப்பந்தம்

நல்லா நடந்துதுன்னா
நாடே செழிச்சிப்புடும்

வல்லரசா இந்தியாவும்
வளைச்சிப் போடும் ஆசியாவ

ஏழை இந்தியா எங்கியோ போயிடும்

மக்குகளா!
குஜராத் ஒரிசா
மதக்கலவர மெல்லாம்
மறந்தே போயிடும்
மறந்தே போயிடும்

விஷம்போல ஏறிவரும்
வெலவாசி நிலைமையெல்லாம்
வேடிக்கபோல
வெளயாட்டா ஆயிடும்
வெளயாட்டா ஆயிடும்

எல்லாமே மாறிடும்
எல்லாமே மாறிடும்

அய்யாசாமி! கேட்டிட்டு
அப்படியே போனா எப்படி?

வயித்துக்கு வழியில்ல சாமி
நாலணாவோ! ஏட்டணாவோ!
போட்டுட்டுப் போணா
புண்ணியமாப் போவும்

நல்ல காலம் பொறக்குது!
நல்ல காலம் பொறக்குது

கோரிக்கைகள்

கோரிக்கைகள் - மலையருவி

கவிதை எழுதினோம்

கரங்களை உயர்த்தி
முழக்கங்கள் இட்டோம்

கருப்புக் கொடியணிந்து
கண்டனம் தெரிவித்தோம்

ஆர்ப்பாட்டம், தர்ணா, பட்டினிப் போர்
உள்ளரங்கக் கூட்டம்,
வாயில் கூட்டம்
தெருமுனை முழுக்கம்

அரசு ஊழியராய்
வேறென்ன செய்ய?

புதிய அமைச்சர்
பதவியேற்றுள்ளார்
சால்வை அணிவித்து
படமெடுத்துக்கொள்ளலாம்.

கோரிக்கைகள்?