Sunday, June 23, 2013

வாழ்க்கை ஈ மொய்த்துக் கிடக்கின்றது

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


நிமிடங்களைச் சிதறி,
மணிநேரங்களை
வாரி இறைத்து,
வசிப்பிடங்கள்
அலங்கோலமாய்ப்
பொலிவிழிக்க,
கசக்கி வீசப்பட்டுக் கிடக்கின்றன
பகலும் இரவும்.

வாரங்களும் மாதங்களும் கூட
கிழித்தெறியப் பட்டுள்ளன.
கடிகாரங்களோடு
நாட்காட்டிகளும்
பொசுங்கிக் கிடக்கின்றன.

ஒவ்வொரு வீட்டிலும்
புறக்கணிக்கப்பட்ட குப்பைகளோடு
நிரம்பி வழிந்து கிடக்கிறது
காலம்.

குப்பைத் தொட்டியை
நிரப்பும் அவசரத்தில்
பொசுக்கப்பட்டு,
வீசப்பட்டு,
கிழிக்கப்பட்டவைகளோடு
சேர்ந்து
ஈ மொய்த்துக் கிடக்கின்றது
வாழ்க்கை

Tuesday, June 18, 2013

ஊடக மாய வெளிச்சத்தில்..

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


அடிக்கப்போய்
அரண்டு மல்லாந்த
கரப்பான் பூச்சியாய்,
இயல்புக்குத் திரும்பும்
வகையறியாது
சலனங்கள் கீழ்நோக்கிப் பிறாண்ட
தவிக்கிறது என்மனம்

முயற்சியின் தோல்வியில்
கவலைகள்
எறும்புக் கூட்டங்களாய்
மொய்த்துக்
கூடிச் சுமக்கப்
தொடங்குகிறது பயணம்

தேவைக்கும் இருப்புக்குமான
இடைவெளியில்
வாழ்க்கை
தொங்கிக் கிடக்க
ஆசையெனும் ஆப்பசைத்து
சிக்கித் துடிக்கிறது
மனம்

முயற்சியின் தோல்வியில்
வாலைப் பறிகொடுத்துக்
குருதிச் சொட்டச்சொட்ட
ஆசையை வீசி
நடுங்கித் தளர்கிறது

ஊடக விளம்பரங்கள்
உருவாக்கும்
மாய வெளிச்சத்தில்
தொலைத்த வாழ்க்கையை
யதார்த்த இருட்டில் தேடும்
விழியற்றவர்களாய்ப்
பலரோடு நானும்..

Tuesday, June 11, 2013

ஓர் ஒற்றைக்குரல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


ஆணிவேரென வான் வீழ்த்தும்
மின்னலில்,
திக்குகள் அதிரும்
இடியோசையில்,
கொட்டித் தீர்க்கும்
பெருமழையில்,
சுழன்றடிக்கும்
சூறாவளிக் காற்றில்,
ஒரு கை தாங்கி
ஒரு கை காக்கும்
அகல் விளக்கின்
சுடர் போற்றும்
ஓர் ஒற்றைக்குரல்
ஓங்கி ஒலித்தது

மதப்பூசல்களின்
சூறாவளிப் பெருமழையில்
ஜீவகாருண்யச் சுடர் ஏந்தி
உயிர்க்குலச் சமத்துவம் வேண்டி
தனிப்பெருங் கருணையோடு
ஒலித்தது அந்தக் குரல்

வேத புராண இதிகாசச்
சேற்றில் குளித்து
நாறிக்கிடந்த
உயிர்க்குலத்தை
அருள்மழை பொழிந்து
தூய்மை செய்த
வள்ளலின் குரல் அது.

மூடர்கள் துப்பியது துய்த்து
முழுவயிறு நிரப்பும்
காக்கைகளின் பெருங்கூச்சலில்
தனிக்குரல் கேட்கத்
தவறின செவிகள்

தனிக்குரல் கேட்கத்
தழைக்கும் உயிர்க்குலம்.

Monday, June 10, 2013

வினாக்களும் விடைகளும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


வினாக்கள்! வினாக்கள்!!

என்னுடைய முடிவற்ற
தேடல்
வினாக்களே!
விடைகள் அல்ல.

விடைகள்
அவை என்னுள்ளேயே

காலநதிப் பெருக்கின்
ஞானம்
நதிமூலத்தில் சுரக்கும்
வினாக்களின் ஊற்றால்
நிறைகின்றன

சொல்லப்பட்ட எழுதப்பட்ட
எல்லாக் கனிகளுக்குள்ளும்
வினாக்களே
வீரிய விதைகளாய்ப்
பொதிந்துள்ளன.
நாளை
ஓராயிரம் விடைகளை
பிரசவிக்கும்
வித்துக்கள் அவை.

வினாக்களை வேண்டி
காலமெல்லாம்
தவமிருக்கையில்
மேனகைகளை அனுப்பும்
எந்த நூல்களும்
எனக்குத் தேவையில்லை

வெளி எங்கும்
வியாபித்திருக்கும்
விடைகளை
எனக்குள் பதிவிறக்கும்
வினாக்களின் அலைவரிசை
தேடி அலையும்
தேடல் முடிவதில்லை.

Sunday, June 9, 2013

பழுத்துக் கனிந்தது இருள்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


காய்த்துத் தொங்கிய
பகல்பொழுதின்
முதிர்ச்சியில்
பழுத்துக் கனிந்தது இருள்

இருளின் சுவை நுகர
வட்டமிடும் வவ்வால்களாய்
மனிதர்கள்.

வெளிச்சத்தில் கருத்திருக்கும்
மனிதமனம்
இருளில் வெளுத்திருக்கும்

பகலில் உள்ளேயும் வெளியேயும்
மேய்ந்துக் கறித்த
பணிச்சுமைகளை
ஆறஅமர அசைபோடவும்

இயந்திர இயக்கத்தை
இடைநிறுத்தி
மனித உடலுக்குக்
கூடுபாய்ந்து
உயிரோட்டம் கொள்ளவும்

ஆழ்ந்த துயில் வாசிப்பில்
மனதின் பக்கங்களைக்
பிரித்துப் போட்டு
கீழ் மேலாகவும்
மேல் கீழாகவும்
மீண்டும் மீண்டும்
அடுக்கிப் பார்க்கவும்

இருள் போர்த்திய இரவு
கம்பளம் விரிக்கும்
இருளே
காலஓட்டத்தின் ஆதாரம்
இருளே
இயக்கத்தின் கூடாரம்

Saturday, June 8, 2013

நாடக ஒத்திகை நேரம்

-மலையருவி


ஒத்திகை நடக்கும் அறையில்
எல்லோர் கைகளிலும்
அவர் அவர்களுக்கான
வசனப் பக்கங்கள்

விருப்பம்போல்,
சிலர் வெற்றுப் பார்வையில்
சிலர் ஆழ்ந்த யோசனையில் மூழ்கியபடி
மெல்ல வாசித்து,
உரக்கப் படித்து
பேசி,
நடித்து
ஒவ்வொருவரும் வேறுபட்டு
வசனப் பக்கங்களோடு

நடிக்க அழைக்கப்பட்டிருந்தேன்!
எனக்கான
வசனப் பக்கங்களுக்கு
யாரைக் கேட்பது?

நாடக ஆசிரியரோ
இயக்குநரோ
வரக்கூடும்..
காத்திருக்கிறேன்

நேரம் கடந்துகொண்டே இருக்க,
கைக் கடிகாரம் பார்த்து
காலண்டர் பார்த்து
மாறிவரும்
பருவ காலங்களைப் பார்த்துக்
காலம் கடப்பதை உணர்கிறேன்

எனக்கான
வசனப் பக்கங்கள் இல்லாமல்
நான் என்ன செய்வது?

சலித்துப் போய்
உரத்துக் குரல் கொடுத்தேன்,
எனக்கான வசனப் பக்கங்கள்; எங்கே?

நீ கொண்டு வரவில்லையா!
அதிர்ந்தனர் அனைவரும்.

எங்கள் கையில்
நாங்கள் கொண்டு வந்தது.
உனக்கான வசனத்தை
வேறு யார் தரமுடியும்!

கவிழ்ந்த தலை நிமிர்த்தி
ஏமாற்றத்தை மறைத்து,
நாடக இயக்குநர் வரட்டும்
என்றேன் அமைதியாக.

மறுமொழி தந்தனர்
கூட்டாக!
நாங்களும் அவருக்காகத்தான்
காத்திருக்கிறோம்
நம்பிக்கையோடு!

காலம் காலமாக!