Tuesday, April 21, 2020

கைகழுவி விட்டார்கள்.


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



நுரை ததும்ப
நக அழுக்குகளைக் கீறி
உள்ளங்கைகளைத்
தேய்த்துக் குழைத்து
விரல்கள் நீவி
புறங்கை சுரண்டிக்
கழுவி கழுவி
கழுவி கழுவிக்
கைகள் சிறுத்தன

கைகழுவிச்
சோறுண்ணும் பழக்கத்தில்
கைகழுவும் போதெல்லும்
இரைப்பை
இரையை எதிர்நோக்கிக்
குதூகலிக்கும்
அநிச்சைய்யாய்ச் சுரக்கும்
உமிழ்நீரில்
நாக்கு  
புரண்டு புரண்டு படுக்கும்

ஈரமானது
கைகள் மட்டுமல்ல
கண்களும்தான்

ஈரமில்லா தேசத்தில்
எல்லோரும்
கைகழுவி விட்டார்கள்.

Friday, April 3, 2020

எது ஜெயிக்கும்?



கதவடைத்து
தெருவடைத்து
ஊரடைக்க
நாடடைக்கத்
தனித்திருந்தேன்

எல்லாம் அடைத்த
பின்னும்
வயிறடைக்க வழியில்லை

வாய் மூடி
கை கழுவி
வீடு மெழுகி
கிருமிநாசினி தெளித்து
அழுக்குப் போக்கி
கிருமி கொன்று
சுத்தத்தைப் பேணித்
தனித்திருந்தேன்

சுத்தம்
சோறுபோடுமெனச்
சொன்னவர்கள்
காணவில்லை.
எல்லாம்
கழுவி வைத்தும்
வயிற்றைக் கழுவ
வழியில்லை

முகக் கவசம்
போட்டதுபோல்
இறுகக் கட்டி
வயிற்றுக்கும்
போட்டு விட்டேன்.

கிருமியா?
பசியா?
எது ஜெயிக்கும்
என்றறியா
மயக்கத்தில்
வீழ்ந்து விட்டேன்.

-மலையருவி


Wednesday, April 1, 2020

கனவு தேசத்தில்...


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



கனவு தேசத்தில்
அவசரநிலை
மக்கள் வெளியேற உத்தரவு
வீடில்லை
தொழில் இல்லை
உணவில்லை
கவலை வேண்டாம்

நல்ல மேய்ப்பர்கள்
உங்களைக்
காலாற மேய்ப்பார்கள்
குழலூதி
தேவகானம் இசைத்து
தொலை தூரத்து
அக்கரைப் பச்சையைக் காட்டி
மேயச்சொல்லி
வழியனுப்புவார்கள்

பசி பட்டினி உயிரச்சம்
தேச விரோதம்
வழியெங்கும்
கோமாதாயும் கோமியமும்
சர்வரோக நிவாரணியாய்க்
காத்து நிற்கும்

தலைச்சுமை
கைச்சுமைகளை
உதறி வீசுங்கள்
பாரம்சுமக்க
படைத்தவன் வருவான்

வயிறுகாய்ந்து
நடைதேய்ந்து
நாவறண்டு
கண்கள் இருண்டு
சுருண்டு வீழ்ந்து
செத்து மடிந்தாலும்
அவசரநிலை
கவனத்தில் இருக்கட்டும்

உதவிக்கரம் நீட்ட
ஆண்டவனோ
ஆள்கிறவனோ
வரவில்லையே என
வாய்விட்டுக் கூவாதே!

இது புண்ணிய தேசம்
மகான்களின் மண்
நம்பிக்கை அவசியம்
நாளைய
பொற்காலத்தை
நினைத்துக் கொண்டே
கண்களை மூடு.