Friday, June 29, 2012

வெப்பத்தை உடுத்தி…

-மலையருவி


தகிக்கும் கோடையில்
வெப்பத்தை உடுத்தி
வெளிக்கிளம்பிய பொழுதில்

நிர்வாண நாட்களின்
நினைப்பில்
மேனி
ஆடைகளைக் கிழித்தெறிய
அவசரம் காட்டும்

சரசம் வேண்டி
நாக்கில் படுத்து
காமுற்ற நீர்வேட்கை
விரக்தியில்
படுக்கை சுருட்டும்

அகோரப் பசியால்
நிழல் புசிக்க
நீளும் கால்கள்
கவளங்களை நினைத்து
பருக்கைகளில் பசியாறும்

Monday, June 25, 2012

திணிக்கப்படும் கவளங்களாய் மதிப்பெண்கள்


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



அந்த நாளில்
ஓராண்டாய்த் தொடர்ந்த
காற்றழுத்தத் தாழ்வுநிலை
ஓயாமல் சுழன்றடித்து
மூர்க்கமாய்க் கரையேறியது,
தேர்வு முடிவுகளாய்

காற்றின்
கோரத்தாண்டவத்தில்
முகமுடைந்து நெஞ்சழிந்து
வாழ்வை
வினாக்குறிகளால் நிமிர்த்தியபடி
மாணவர்கள் பலர்

இணைய மையங்கள் தோறும்
மதிப்பெண்களைப்
பொறுக்கியபடி
பெற்றோர்களும் மாணவர்களும்

தூக்கி எறியப்பட்ட
மேற்கூரைகளாய்ப்
பாடப்புத்தங்கள்

வழியெங்கும்
நொறுக்கி வீசப்பட்ட
கேள்வி பதில்களும்
சூத்திரங்களும்
வரைபடங்களுமாக
மிதிபட்டுக் கிடந்தன
இளைஞர் கனவுகள்

காற்று மழையின்
கவலையில்
பட்டினி கிடந்த
தங்களின்
அகோரப் பசிக்குப்
பிள்ளைகள் வாயில்
திணிக்கப்படும் கவளங்களாய்
மதிப்பெண்கள்

புயல் ஓய்ந்த
திருநாளில்

புயலின் சுவடுகள் துடைத்து
புதுப்பொலிவை
எதிர்நோக்கிக்
காத்திருக்கும்
எங்கள் எதிர்கால நம்பிக்கைகள்.

Friday, June 22, 2012

காலக்கூட்டைக் கிழித்துக் கிளம்பிய முதுமை


-மலையருவி




காலக் கூட்டில்
முடங்கிய இளமை

தம் கன்னிமைப் பருவத்தில்
கம்பளிப் புழுவாய்
மேய்ந்து மேய்ந்து
இடங்கொடுத்த
இலை, தழைகளை
மென்று செரித்து

மேனி முட்களால்
தீண்டிய இடத்தில்
தீமை புரிந்து..

தீமை கண்டு
பிறர் அஞ்சி ஒதுங்க

தம்மை நொந்து
தனியே ஒதுங்கி
காலக் கூட்டில்
கவனிப்பார் இன்றி
முடங்கிக் கிடந்த இளமை
இன்று
இல்லாதொழிந்தது

கூட்டில் சுருண்டு
சுயத்தை இழந்து
சும்மாக் கிடந்த
காலங்கள் எல்லாம்

தன்னை இழந்தது
தன்;உரு தொலைத்தது
இறந்தகால
இகழ்ச்சிகள் எல்லாம்
காலக் கூட்டில்
கழன்று விழுந்தன.

இன்று
அனுபவச் சிறகுகளால்
அழகு பெற்றுக்
காலக் கூட்டைக்
கிழித்துக் கிளம்பியது
முதுமை.

பார்ப்பவர் எல்லாம்
பரவசம் அடைந்தனர்
வண்ணங்களை
வாரி இறைக்கும்
சிறகுகளால்
அது
வானை அளந்தது
மண்ணை
வலம் வந்தது.

காண்போர் களிக்கப்
பட்டாம்பூச்சியாய்ப்
முதுமை இன்று
முழுமை பெற்றது.


Friday, June 15, 2012

இலவசங்களின் விலை


-மலையருவி




ஆளுவோரின் இலவசங்கள்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வரப்பிரசாதம்..
ஏழ்மையை விரட்டும்
எளிய உத்தி..
சமத்துவம் பேணும்
சாமார்த்திய வழி..
ஆவேசப் பேச்சு
அறிக்கைகள்
மின்னணுப் பதாகைகள்
ஊடக விளம்பரங்கள்

இலவசங்கள்..
அவை இலவசங்கள் இல்லை
எங்கும் எப்போதும் எவையும்
இலவசங்கள் ஆவதில்லை

இலவசங்களின் முதல்பலி
மக்களின் சுயமரியாதை..
அதன்
பகாசூரப் பசிக்குத் தீனி
புதுப்புது வரிகள்

ஆளுவோருக்கு
அவை அமுதசுரபிகள்
ஆறு கொடுத்தால்
நூறு எடுக்கலாம்

இலவசங்களுக்குக்
கையேந்திக் கையேந்தி..
கூனிக் குறுகிக்
குப்புறக் கீழே
வீழ்ந்து கிடக்குது
குடிமக்களின் மாண்பு

கேள்வி கேட்க,
எதிர்க்குரல் எழுப்ப,
உரிமைக்குப் போராட
எதற்கும் திராணியற்று

இலவசங்களால்
கொள்ளைபோகும்
பல கோடிகளைப் பறிகொடுத்துச்
சிதறிய சில்லறைகளைத்
தேடிப் பொறுக்குவதில்

நம்
தேசம் தொலைகிறது



Wednesday, June 13, 2012

கொடும்பாவிகளின் தீச்சுவாலை

  
            -மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்

தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்

எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்

இத்தனைக்கும் நடுவே

நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்

Monday, June 11, 2012

ஆட்காட்டி விரல்


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஓட்டு யந்திரத்தின்
பொத்தான் அமுக்க..
வறுமைக்கோட்டுக்கும்
கீழே
தலைக்குப்புற
வீழ்ந்துகிடக்கும்
வாக்காளர்களின்
ஆட்காட்டி விரல்களுக்கு மட்டும்
சந்தனக்காப்பு...
சாமரவீச்சு...

தேர்தல் திருவிழாக்களில்
இலவசங்கள் எனும்
அலங்காரம் ஒளிவீச
வாக்குறுதித் தேர்ஏறி
பவனி வருகின்றன
அரசியல்வாதிகளின்
ஈர நாக்குகள்

பேரரசர்களுக்கும்
இளவரசர்களுக்கும்
இயற்றமிழால் புகழ்மொழிகள்
எதிர்க்கட்சிகளுக்கு
இசைத் தமிழால் அர்ச்சனைகள்
நாடகத் தமிழால்
யாவரும் ரசித்துக் களிக்க
தொப்பக் கூத்தாடிகளோடு
ஒய்யாரக் கூத்து

தேர்தல் நியாயங்கள்
அநியாயத்துக்குக்
காற்றில் பறக்க..
குடம், மூக்குத்திகளோடு
சேலை, வேட்டி
நூறு, ஆயிரமாய் ரொக்கத்துடன்
தாராளமாகத்
தண்ணீ புரண்டோட

வாழ்கிறது ஜனநாயகம்?