Saturday, November 23, 2019

கூட்டணி தர்மம்

-மலையருவி


நாய் வேடம்
புனைந்த சுகத்தில்
குரைக்க குரைக்க
வால் வளரும் அதிசயம்

"பித்தளைச் சட்டி"

முனைவர் நா.இளங்கோ (மலையருவி)

அடர்ந்த இருட்டில்
பின்னிரவுப் பொழுதுகளில்
அசந்த உறக்கத்தில்
தட்டு முட்டுச் சாமான்கள்
களவாடப் பட்டதென்றால்
கலங்கி நிற்கப் போவதில்லை
கவனத்தை நிலைப்படுத்தி
கண்ணுறக்கம் குறைத்து
காவலை முடுக்கலாம்

ஆனால்,
நடந்த விந்தையை
நானறியா அனுபவத்தை
எப்படி எடுத்துரைப்பேன்

அன்றைக்குக்
காலை விழித்தெழுந்து
விரல்வைத்துப் பல்தேய்க்க
சாம்பலைத் தேடி
புழக்கடைக்குப் போகையிலே
புதுசா ஒரு சட்டி
பொன்னிறத்தில் மின்னியது
தங்கமில்ல.. பித்தளைதான்
நம்ப வீட்டுப் பொருளில்லை
தொலைச்சவரோ
போட்டவரோ
யார் என்று தெரிந்துகொள்ள
திசை நாலும் நானலைந்தேன்
ஆளரவம் கேட்கவில்லை
ஆள் ஒண்ணும் தென்படல

பாத்திரத்தை எடுத்து
உள்ளே வைக்க ஒப்பவில்லை
அடுத்தவங்கப் பொருளெதுக்கு!
பித்தளை சட்டி
நம் வீட்டுக்குப் பொருந்தாத
புதுப் பொருளாய் நெருடியது

இராத்திரியும் பகல்பொழுதும்
தூக்கம் பிடிக்கவில்லை
நிம்மதி மனசில் இல்லை
மாதங்கள் கடந்து
ஆண்டுகள் உருண்டன.

இந்தப் பொழுது
இப்படியா விடியனும்?

திபுதிபுவென யார்யாரோ
என் வீட்டின் உள்நுழைந்தார்
வீட்டுப் பொருளையெல்லாம்
தலைகீழாய்க்
கொட்டிக் கவிழ்த்தார்கள்
ஓ’ என்று ஓயாத பேரிரைச்சல்
எதையோ தேடினார்கள்

கூட்டத்தில் ஒருவன்
உற்சாகக் கூச்சலிட்டான்
அதோ இருக்கிறது!
அதோ இருக்கிறது!!
நாம் தேடிவந்த பித்தளை சட்டி

வந்தவர்கள் தேடியது
அதைதான் எனத் தெரிந்துகொண்டேன்.

அது என்னுடையதில்லை
நீங்கள் எடுத்துச் செல்லலாம்
பணிவோடு விடைகொடுத்தேன்.

கோபத்தோடு ஒருவன்
பின்மண்டையில் தட்டினான்
பலரும் தொடர்ந்தனர்
எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்
இது எங்கள் சட்டி
எங்கள் வீட்டுச் சட்டி

இந்தப் பித்தளை சட்டி
இப்போ இங்கே இருப்பதால்
இதுதான் எங்கள் வீடு
இதுதான் எங்கள் வீடு
அன்னியனே வெளியே போ
அன்னியனே வெளியே போ

Thursday, June 13, 2019

உள்ளங்கையில் சிக்கிய மேகம்

-முனைவர் நா.இளங்கோ



குவித்து மூடிய
கைகளுக்கு இடையே
சிக்கிய மேகத்தை
எப்படிப் பார்ப்பது?

இலேசாகக்
கைகளைப் பிரிக்கவும்
அச்சம்.
இடைவெளியில்
மேகம் நழுவிவிடக் கூடும்

விரல் இடுக்குகளில்
மேகம் கசிந்து விடாதிருக்க
இறுகப் பற்றிய
விரல்கள் நடுங்கின

கைகளுக்குள்ளே
கருவரைச் சிசுவாய்
மடங்கிச் சுருண்டிருக்கும்
மேகத்தைப் பார்க்க
மனசு துடித்தது

விரல்களை விலக்கினால்..
கைகளைப் பிரித்தால்..
உள்ளங் கைக்குள்
சிறைபட்டிருக்கும்
மேகப்பறவை
விருட்டென்று சிறகடித்து
விரைந்து பறக்கலாம்

நடுங்கிய விரல்கள்
நாழிகை கடக்கையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
மரக்கத் தொடங்கின

கைச்சிறைக்குள்
சிக்கிய மேகத்தை
என்ன செய்வது?

ஒருமுறை
ஒரே ஒருமுறையாவது
கண்ணாரக் காணாமல்
கைப் பிடிக்குள்
கட்டுண்ட மேகத்தைக்
கனவில் கண்டா
களிப்புறுவது.

காலம் கடக்க
காலம் கடக்க
மேகம் மறந்தது
கைகள் கனத்தன

கனத்த விரல்களை
மெல்லத் திறந்தேன்
ஆகாயத்தில்
மேகத்திரட்சி

உள்ளங்கையில்..?

Tuesday, June 4, 2019

காதல் வரமா? - காதலர் தின சிறப்புக் கவிதை

-முனைவர் நா.இளங்கோ




வாழ்க்கைப் பாதையின்
மேடு பள்ளங்களில்
சலியாத பயணம்…
இலக்கற்றுத் தொடங்கும்
ஒவ்வொரு பயணமும்
வெற்றியில் முடியும்

வாழ்க்கைப் பயணத்தில்
அலுப்புறும் போதெல்லாம்
சக பயணிகளோடு
நேசக்கரம் நீளுமந்த
ஒவ்வொரு கணத்திலும்
காதல் மலரும்

நீளும் கரங்களை
நிராகரிப்பதும் நேசிப்பதும்
அவரவர் விருப்பம்
ஒருகை விலக்கினால்
ஒருகை உறவுறும்

உள்ளம் உருக
உன் கரங்களைப் பற்றும்
அந்தக் கைகளைத்
தேடும்பயணத்தில்
உதாசீனப் படுத்தியக்
கரங்களை மறந்துவிடு

அழுந்தப் பற்றும்
அன்புப் பிடியில்
என்பு உருகும்
ஏக்கம் தொலையும்

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை
உயிர்ப்பின் அடையாளம்

மகரந்தச் சேர்க்கைகள்
இல்லாமல்
காய் ஏது? கனி ஏது?

உயிர்ப்பின் உன்னதம்
காதலின் இலட்சியம்

உள்ளத்தில் தொடங்கி
உடம்பில் முடிவதும்
உடம்பில் தொடங்கி
உள்ளத்தில் முடிவதும்
இரண்டும் காதல்தான்

மனுதர்மம் பேசி
சாதிப் பதாகைகள் ஏந்தி
சில கழுகுகள்
வானில்
வட்டமிடத் தொடங்கிவிட்டன

செத்த எலிதொடங்கி
நரமாமிசம் வரைக்
குத்திக் கிழிக்கும்
கொலைகாரக் கழுகுகளுக்கு
குழந்தைகளைக்
கொஞ்சத் தெரியுமா?

காதல் வரமல்ல!
உயிர் இயற்கை

உயிர்ப்பின் அடையாளம்

-மலையருவி-

கூடிப் பொங்கல் வைப்போம் - பொங்கல் கவிதை

முனைவர் நா.இளங்கோ




பழைய நினைவுகளின்
உசலாட்டத்தில்
உயிர் வாழ்க்கை
ஒட்டிய வயிற்றோடு

பசுமைப் போர்த்திய
பரந்த வயல்வெளி,
ததும்பி வழியும் வரப்புகளில்
துள்ளிக் குதிக்கும் கெண்டை,
வரப்பு வளைகளில்
எட்டிப் பார்த்து
கண்ணாம்பூச்சி விளையாடும்
சேற்று நண்டுகள்

நினைவுகளை
அசைபோட்டு அசைபோட்டு
வழியும் இரத்தத் துளிகளில்
விழித்தெழுகிறோம்

புதுப்பானை
கரும்பு மஞ்சள்
புத்தரிசிப் பொங்கல்
கனாக்கண்டு விழித்தெழுகையில்
வெடித்துப் பிளந்த
நஞ்செய் வயல்களாய்
நெஞ்சு வெடித்து
விவசாயி

மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடித்த
களத்து மேடுகளில்
சிதறிய
நித்தியக் கல்யாணிகளோடு
உழவனின் கனவுகள்

ஏறு தழுவிய தோள்கள்
ஏந்திய கைகளாகும்
சோகத்தில்
எதிர்காலம் வினாக்குறிகளோடு

சூலமேந்தி
பொய்மூட்டைகளைச் சுமந்து
விடாமல் துரத்தும்
தேசபக்தர்களின்
பலிபீடத்தில்
மண்டியிட்டு
தலைகுனிந்து நிற்கிறது
தேசம்..

நேற்றைய நினைவுகளின்
உற்சாகத்தில்
இன்றைய
வலிகளைக் கடந்து
நாளைய விடியலை
எதிர்நோக்குவோம்..

வியர்வைகளின் தேசமே!
இன்றைய உலைகளில்
நாம்
நம்பிக்கை நீர்ஊற்றி
விழிப்பின் நெருப்பினிலே
மக்கள் சக்தியெனும்
மகத்தான
பொங்கல் வைப்போம்
கூடிப் பொங்கல் வைப்போம்
குதூகலப் பொங்கல் வைப்போம்


                  -மலையருவி

Sunday, May 26, 2019

உழைக்கும் பெண்ணே!

முனைவர் நா.இளங்கோ




பெண்ணே!
கருத்து உடல்பெருத்து
முடிசிறுத்து
உழைத்த உடல் சோர்ந்து
சற்றே சாய்ந்து தளர்ந்தாயா!

நிமிர்ந்து உடல்மினுக்கும்
செவ்வகப் பெட்டியொன்று
அருகமர்ந்து ஆதரவாய்
அன்பொழுகப் பேசியது

குங்குமப் பூப்போனற
சிவப்பழகு வேண்டுமா?
ஒரே வாரத்தில்!
நீண்ட கருங்கூந்தல்
அலைபாய
வாகனங்களையே
கட்டிஇழுக்கும்
வலிமையாக கூந்தல் ரகசியம் சொல்லவா?
மெலிந்த தேகமும்
வசீகரிக்கும் முகமும்
வெய்யில் தூசு புழுதியில்
மாசடையாத
மேனி வேண்டுமா?

செவ்வகப் பெட்டி
அக்கறையோடு
அடுக்கடுக்காகத்
தன் பொய் மூட்டைகளை
திறந்து கொட்டியது

பெண்ணே!
ஆணை மயக்கத்தான் உன்மேனி
அழகு! கவர்ச்சி! வசீகரம்
இதுவே
வாழ்க்கையின் இலட்சியம்
ஆசைப்படு! ஆசைப்படு!
பூ! புடவை! நகை!
அத்தனைக்கும் ஆசைப்படு!

கிரீம்! லோஷன்! பாலீஷ்
நுகர்வுச் சந்தையில்
உன்னை நம்பித்தான்
இத்தனையும், இன்னமும்..
மாயப்பெட்டியின்
ஓயாத ஓலம்
தொடர்ந்துகொண்டே இருந்தது..

பெண்ணே!
உழைக்கும் பெண்ணே!
அந்த மாயப்பெட்டி
நீண்ட தொடர்களால்,
கண்ணீர் கசியும்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளால்
உன்னைக்
கட்டிப் போட்டதெல்லாம்
எதற்கென்று அறிவாயா!

விழித்தெழு!
ஆண்களில் சந்தையில்
நீ நுகர்பொருளல்ல!
பெண்களின்
நுகர்பொருளுக்கு
நீ சந்தையுமல்ல..

உன் மாயக் கனவுகளை
உதறி எறிந்துவிட்டு
புதுமைப் பெண்ணாக
உடனே கிளர்தெழு!
உழைக்கும் பெண்ணே!
உலகம் உன்கையில்..


      

Tuesday, May 21, 2019

முப்பாட்டன் வீடு - விடுதலைநாள் சிறப்புக் கவிதை

-மலையருவி

முனைவர் நா.இளங்கோ



சுதந்திரம் என்ற பெயரில்
வீடு கைமாறிய பொழுதில்…

முன்பு எப்பொழுதோ
சிலபொழுதுகளில்
அந்த வீட்டின்
கதவுகள்
திறக்கப்பட்டதாய்ச்
சில பெரியவர்கள்
தம் பழைய நினைவுகளைத்
தூசிதட்டிக்
கதை சொன்னதுண்டு.

கதவு,
அது
சுவரில்
அதிஅற்புதமாகத் தீட்டப்பட்ட
ஒரு ஓவியமாக இருக்கலாம்
என்றும் நாங்கள் நம்பியதுண்டு

எங்கள் முப்பாட்டன் காலத்து வீடு
இடையில் பல கைமாறி
இப்போது,
சுதந்திரம் என்ற பெயரில்
எங்களுக்கு,
என்றான சந்தோஷத்தில்
கதவைப் பற்றியோ
வீட்டைத் திறப்பதைப் பற்றியோ
நாங்கள் யோசிக்கவே இல்லை

கொண்டாட்டங்கள் எல்லாம்
வீட்டைச் சுற்றியே இருந்தன
வீட்டின் அழகும்
மூதாதையர் பெருமையுமே
எங்கள் முழுப் பேச்சாயிருந்தது.

முப்பாட்டன் வீட்டில்
கடந்த காலங்களில்
பலரும் சுருட்டியது போக
மீதமுள்ள பொக்கிஷங்கள்
மிதமிஞ்சிக் கிடந்தன

வீட்டுக்குள் நுழைய
எங்களைத் தவிர
பலருக்கும்
பலவழிகள் தெரிந்திருந்தன

உடைந்த ஜன்னல்கள் வழியாக
தோட்டத்துச் சுவர் ஏறிக்குதித்து
சிதைந்த மேற்கூரையின்
ஓடுகளைப் பிரித்து..
இவை போதாவென்று
உள்ளேயே
பல பழம் பெருச்சாளிகள்

காலக் கிரமத்தில்
கஜானாவும் காலியாச்சு
பொக்கிஷங்களும் கொள்ளை போச்சு

சாவி எங்கள் கைகளில்
பத்திரம் எங்கள் பெயர்களில்

ஒருமுறை கூட நாங்கள்
உள்நுழைந்ததில்லை
உள்நிறை வளங்களைக்
கண்டதே யில்லை

சமத்துவக் கதவின்
சாவி இருந்தும்
கதவைத் தேட
முயன்றது மில்லை
இருக்கும் கதவைக்
காணவுமில்லை

கதவையும் திறக்காமல்
களவையும் அறியாமல்
கண்முன்னே
எம் முப்பாட்டன் வீடு
கணந்தொறும் சிதைய,
கதவுதிறக்கும் கணங்களுக்கான
விழிப்பைத் தேடுகின்றன
விழிகள் விரக்திகளோடு..