Tuesday, May 12, 2020

மாடித் தோட்டத்தின் மரண ஓலம்


பூத்துக் காய்த்துக்

குலுங்கி நிற்கும்
மாடித் தோட்டத்துக்கு
வந்தது சோதனை

வினோதப் பூச்சிகளின்
எதிர்பாராத் தாக்குதலில்
தோட்டம் சிதைந்தது
காய்கள் கருகின
இலைகள் சுருண்டன

செடிகளைக் கொடிகளைக்
காக்கும் வகையறியாக்
கவலையில் ஆழ்ந்தது வீடு

சரி, பூச்சி மருந்து தெளித்து
எருவைத்து நீருற்றி
தோட்டத்தைக் காக்கும்
முயற்சிக்குக் கைபிசைகையில்..  

உடலும் மூளையும் பெருத்த
ஊர்ப் பெரியவருக்கு
எப்படியோ செய்தி தெரிந்து
ஆரஅமர அவசரமாய்க் காட்சியளித்தார்

தோட்டத்தைக் காப்பது
உன் கடமை, என் கடமை, நம் கடைமை
என உபதேசம் தொடங்கினார்

அவசரமாய்க்
கொஞ்சம் எருவும் பூச்சி மருந்தும்
கொடுத்து உதவிடும்
கோரிக்கையை
வளைந்தும் நெளிந்தும் தண்டனிட்டும்
விண்ணப்பம் செய்தோம்.

நீட்டிய கரங்களைக்
கண்டும் காணாமல்
மீண்டும் உபதேசம்..
தோட்டத்தைக் காக்கும்
எங்கள் முயற்சிக்கு வாழ்த்துரைத்தார்.

செடிகளும் கொடிகளும் வாடி வதங்கின

விளைந்த காய்கள்
பூத்த பூக்களின்
அருமை பெருமைகளைத்
திக்குகள் எட்டும்
பேசி மகிழுங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
இடைவிடாது, இடைவிடாது..

ஊர்ப் பெரியவரின் உபதேசம் தொடர்ந்தது
தோட்டம் அழியாது
அழியவும் விடமாட்டேன்
நம்பிக்கை முக்கியம்

வாடி வதங்கும்
மாடித் தோட்டத்தின்
மரண ஓலத்தை
மீறி ஒலித்தன
தோட்டத்தின் புகழ் முழக்கமும்
போற்றி கீதமும்.

-மலையருவி

யுகங்கள் தோறும்…


யுகங்கள் தோறும்

       -மலையருவி



யுகங்கள் தோறும்
அழிக்கவும் ஆக்கவும்
நானே அவதரிப்பேன்

எல்லா யுகங்களிலும்
நானே இருப்பேன்
நீங்கள் இருப்பதும் கரைவதும்
என் விருப்பப்படியே

எனக்கென்று
உருவம் இல்லை
எனக்குப் பகையும் இல்லை
நட்பும் இல்லை
என்னை நம்புகிறவன்
தன்னைக் காத்துக் கொள்வான்

நான்
எவரிடமிருந்தும்
எளிதில் விலகுவதில்லை

என்னுள் எல்லாம் அடக்கம்
என் சிற்றுரு
பலநூறு கோடிகளில்
பல்லுரு கொள்ளும்
நான்
தூணிலும் இருப்பேன்
துரும்பிலும் இருப்பேன்

எப்பொழுதும்
என்னை
நினைத்துக் கொண்டே இரு
நீ காண்பன
தொடுவன
நுகர்வன
அனைத்திலும்
நானே சூட்சமமாய் இருக்கிறேன்

எவனொருவன்
கைகழுவி
வாய்பொத்தித்
தனித்திருக்கிறானோ
அவனை விட்டு
விலகியே இருப்பேன்

என்னை விட்டு
நீங்குபவன்
மகிழ்ந்திருப்பான்..
நிலைத்திருப்பான்..

சர்வம் கிருமி மயம்..

Tuesday, April 21, 2020

கைகழுவி விட்டார்கள்.


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



நுரை ததும்ப
நக அழுக்குகளைக் கீறி
உள்ளங்கைகளைத்
தேய்த்துக் குழைத்து
விரல்கள் நீவி
புறங்கை சுரண்டிக்
கழுவி கழுவி
கழுவி கழுவிக்
கைகள் சிறுத்தன

கைகழுவிச்
சோறுண்ணும் பழக்கத்தில்
கைகழுவும் போதெல்லும்
இரைப்பை
இரையை எதிர்நோக்கிக்
குதூகலிக்கும்
அநிச்சைய்யாய்ச் சுரக்கும்
உமிழ்நீரில்
நாக்கு  
புரண்டு புரண்டு படுக்கும்

ஈரமானது
கைகள் மட்டுமல்ல
கண்களும்தான்

ஈரமில்லா தேசத்தில்
எல்லோரும்
கைகழுவி விட்டார்கள்.

Friday, April 3, 2020

எது ஜெயிக்கும்?



கதவடைத்து
தெருவடைத்து
ஊரடைக்க
நாடடைக்கத்
தனித்திருந்தேன்

எல்லாம் அடைத்த
பின்னும்
வயிறடைக்க வழியில்லை

வாய் மூடி
கை கழுவி
வீடு மெழுகி
கிருமிநாசினி தெளித்து
அழுக்குப் போக்கி
கிருமி கொன்று
சுத்தத்தைப் பேணித்
தனித்திருந்தேன்

சுத்தம்
சோறுபோடுமெனச்
சொன்னவர்கள்
காணவில்லை.
எல்லாம்
கழுவி வைத்தும்
வயிற்றைக் கழுவ
வழியில்லை

முகக் கவசம்
போட்டதுபோல்
இறுகக் கட்டி
வயிற்றுக்கும்
போட்டு விட்டேன்.

கிருமியா?
பசியா?
எது ஜெயிக்கும்
என்றறியா
மயக்கத்தில்
வீழ்ந்து விட்டேன்.

-மலையருவி


Wednesday, April 1, 2020

கனவு தேசத்தில்...


மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



கனவு தேசத்தில்
அவசரநிலை
மக்கள் வெளியேற உத்தரவு
வீடில்லை
தொழில் இல்லை
உணவில்லை
கவலை வேண்டாம்

நல்ல மேய்ப்பர்கள்
உங்களைக்
காலாற மேய்ப்பார்கள்
குழலூதி
தேவகானம் இசைத்து
தொலை தூரத்து
அக்கரைப் பச்சையைக் காட்டி
மேயச்சொல்லி
வழியனுப்புவார்கள்

பசி பட்டினி உயிரச்சம்
தேச விரோதம்
வழியெங்கும்
கோமாதாயும் கோமியமும்
சர்வரோக நிவாரணியாய்க்
காத்து நிற்கும்

தலைச்சுமை
கைச்சுமைகளை
உதறி வீசுங்கள்
பாரம்சுமக்க
படைத்தவன் வருவான்

வயிறுகாய்ந்து
நடைதேய்ந்து
நாவறண்டு
கண்கள் இருண்டு
சுருண்டு வீழ்ந்து
செத்து மடிந்தாலும்
அவசரநிலை
கவனத்தில் இருக்கட்டும்

உதவிக்கரம் நீட்ட
ஆண்டவனோ
ஆள்கிறவனோ
வரவில்லையே என
வாய்விட்டுக் கூவாதே!

இது புண்ணிய தேசம்
மகான்களின் மண்
நம்பிக்கை அவசியம்
நாளைய
பொற்காலத்தை
நினைத்துக் கொண்டே
கண்களை மூடு.


Sunday, March 8, 2020

கங்குகள் உயிர்க்கும்

மலையருவி


கல்லெறி, தீ வைப்பு
வன்முறை வெறியாட்டம்.
கையில் தடி
கண்களில் கொலைவெறி
மறைத்த முகங்களின்
முகவரி தொலையும்

ஆயுதம் எடுத்தவர்க்கும்
ஆயுதம் கொடுத்தவர்க்கும்
அதே ஆயுதம்தான்.

இரத்தப் பூஜையும்
பிணப் படையலும்
சாமிக்காகவா!

எதிர்க்குரல் கேட்கக்
கூசும் செவிகளை
முழக்கப் பேரொலி
ஈட்டியாய்ப் பிளக்கும்

எரியும் தீயடங்கி
பூக்கும் சாம்பலில்
கங்குகள் உயிர்க்கும்

-மலையருவி


கடைசி நம்பிக்கை

மலையருவி


அவன், உன்னை வெட்டினாலும்
நீ, அவனை வெட்டினாலும்
அவர்கள் 
தமக்குள்ளே வெட்டி மடிந்தாலும்
நீங்கள்
உங்களுக்குள்ளே வெட்டி வீழ்ந்தாலும்

நமக்காக
அழுது அரற்றிக்
கண்ணீர் சிந்திக்
காக்கத் துடிப்பன
மனித மனங்களே!

மனிதர்களே!
ஒருபோதும்
மனிதத்தை வெட்டி
வீழ்த்தி விடாதீர்கள்!

நமது
கடைசி நம்பிக்கை
மனிதம்தான்.

-மலையருவி