Friday, June 15, 2012

இலவசங்களின் விலை


-மலையருவி




ஆளுவோரின் இலவசங்கள்
அன்றாடம் காய்ச்சிகளுக்கு
வரப்பிரசாதம்..
ஏழ்மையை விரட்டும்
எளிய உத்தி..
சமத்துவம் பேணும்
சாமார்த்திய வழி..
ஆவேசப் பேச்சு
அறிக்கைகள்
மின்னணுப் பதாகைகள்
ஊடக விளம்பரங்கள்

இலவசங்கள்..
அவை இலவசங்கள் இல்லை
எங்கும் எப்போதும் எவையும்
இலவசங்கள் ஆவதில்லை

இலவசங்களின் முதல்பலி
மக்களின் சுயமரியாதை..
அதன்
பகாசூரப் பசிக்குத் தீனி
புதுப்புது வரிகள்

ஆளுவோருக்கு
அவை அமுதசுரபிகள்
ஆறு கொடுத்தால்
நூறு எடுக்கலாம்

இலவசங்களுக்குக்
கையேந்திக் கையேந்தி..
கூனிக் குறுகிக்
குப்புறக் கீழே
வீழ்ந்து கிடக்குது
குடிமக்களின் மாண்பு

கேள்வி கேட்க,
எதிர்க்குரல் எழுப்ப,
உரிமைக்குப் போராட
எதற்கும் திராணியற்று

இலவசங்களால்
கொள்ளைபோகும்
பல கோடிகளைப் பறிகொடுத்துச்
சிதறிய சில்லறைகளைத்
தேடிப் பொறுக்குவதில்

நம்
தேசம் தொலைகிறது



Wednesday, June 13, 2012

கொடும்பாவிகளின் தீச்சுவாலை

  
            -மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்

தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்

எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்

இத்தனைக்கும் நடுவே

நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்

Monday, June 11, 2012

ஆட்காட்டி விரல்


-மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஓட்டு யந்திரத்தின்
பொத்தான் அமுக்க..
வறுமைக்கோட்டுக்கும்
கீழே
தலைக்குப்புற
வீழ்ந்துகிடக்கும்
வாக்காளர்களின்
ஆட்காட்டி விரல்களுக்கு மட்டும்
சந்தனக்காப்பு...
சாமரவீச்சு...

தேர்தல் திருவிழாக்களில்
இலவசங்கள் எனும்
அலங்காரம் ஒளிவீச
வாக்குறுதித் தேர்ஏறி
பவனி வருகின்றன
அரசியல்வாதிகளின்
ஈர நாக்குகள்

பேரரசர்களுக்கும்
இளவரசர்களுக்கும்
இயற்றமிழால் புகழ்மொழிகள்
எதிர்க்கட்சிகளுக்கு
இசைத் தமிழால் அர்ச்சனைகள்
நாடகத் தமிழால்
யாவரும் ரசித்துக் களிக்க
தொப்பக் கூத்தாடிகளோடு
ஒய்யாரக் கூத்து

தேர்தல் நியாயங்கள்
அநியாயத்துக்குக்
காற்றில் பறக்க..
குடம், மூக்குத்திகளோடு
சேலை, வேட்டி
நூறு, ஆயிரமாய் ரொக்கத்துடன்
தாராளமாகத்
தண்ணீ புரண்டோட

வாழ்கிறது ஜனநாயகம்?

Monday, May 7, 2012

காமமும் கடவுளும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

சலிப்பு,
ஓயாத சலிப்பு,
வாழ்க்கையே சலிப்பூட்டுவதாய்..

வெறுமை,
எங்கும் வெறுமை,
வாழ்க்கையே வெறுமையாய்..

துன்பம்,
தீராத துன்பம்,
வாழ்க்கையே துன்பமயமாய்..

சலிப்பின்-
வெறுமையின்-
துன்பத்தின்- உச்சத்தில்

இமைமூடித் திறந்த 
கணப்பொழுதில்
புதிய வெளிச்சம்
புதிய சுவாசம்
புதிய நான்

சலிப்பின் முடிவில் 
ஈர்ப்பு.
வெறுமையின் முடிவில்
முழுமை.
துன்பத்தின் உச்சத்தில்
இன்பம்.

நாட்டம் 
எங்கும் எதிலும் நாட்டம்
அன்பு 
அனைத்தையும் நேசிக்கும் அன்பு

காதல்
காமம்
கடவுள்
வாழ்க்கையின்
ஒவ்வொரு துளியிலும்..

Thursday, May 3, 2012

மடத்தையும் வாங்கலாம் மகேசனையும் வாங்கலாம்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


இங்கே
எல்லாவற்றுக்கும்
எல்லோருக்கும்
விலையுண்டு

விலை படியாதவரையில்
எல்லாமே
தகுதியானவை
எல்லோருமே
யோக்கியர்கள்

நல்லவிலை கிடைத்தால்
விரைவில் விலைபோவர்-
வாக்காளர்கள்,
அரசியல்வாதிகள்,
அதிகாரிகள்.

கையில் பணமிருந்தால்
கனத்த பணமிருந்தால்
ஊழல் பணமிருந்தால்
ஊரார் பணமிருந்தால்

ஓட்டு வாங்கலாம்
பதவி வாங்கலாம்
சட்டத்தை வாங்கலாம்
நீதியை வாங்கலாம்

மக்களை வாங்கலாம்
மதத்தை வாங்கலாம்
மடத்தையும் வாங்கலாம்
மகேசனையும் வாங்கலாம்

வாங்கத் தெரிந்தவர்கள்
விலைபேசி வருவதும்
விற்கத் தெரிந்தவர்கள்
விலைகூறி நிற்பதும்

வேடிக்கையல்ல
வினையாற்றும் நேரமிது.

Thursday, June 9, 2011

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



ஆயிற்று
அரை நூற்றாண்டுகள்.

தேய்த்துத் தேய்த்து
அழுக்கை நீக்க
ஆன பொழுதுகள்
எத்தனை எத்தனையோ!

உடம்பின் அழுக்கைத்
தேய்த்துக் குளித்தேன்.
துணியின் அழுக்கை
அடித்துத் துவைத்தேன்.
தரையின் அழுக்கைப்
பெருக்கிக் கூட்டிக்
குப்பையில் கொட்டினேன்.

குப்பையும்
சாக்கடையும்
அழுக்கின் கொள்கலம்.

சூழ்ந்து நிற்கும்
குப்பைமேட்டிலும்,
சாக்கடை நீரிலும்
மனிதனின் அழுக்குகள்

அழுக்கைக் கண்டால்
அசூயை.. அசூயை..
அழுக்கை,
நீக்கிட நீக்கிட
அடுத்த அழுக்கு.

மனிதர்களின்றி
மண்ணில் அழுக்குகள் உண்டா?
அழுக்குகள் இன்றி
இங்கே மனிதர்கள் உண்டா?

நானும் அழுக்கு நீயும் அழுக்கு!

சாதி அரசியல்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)


பெண்ணியம் பேசினான்,
எழுதினான்,
மேடைகளில் முழங்கினான்.
ஆண்கள் போராடி
பெண்ணுக்கு விடுதலையா?

பெண்கள் எதிர்த்தனர்,
எங்கள் விடுதலையை
நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம் என்று.

தலித்தியம் பேசினான்,
எழுதினான்,
போராடினான்.

தலித்தின் வலி
உனக்குத் தெரியுமா?
வேண்டாம்
ஓநாய் அழுகை என்றனர்.

இப்போது
ஒடுக்கப்பட்ட
தன் சொந்த சாதிக்காக
எழுதுகிறான்.

சொல்கிறார்கள்,
அவன் சாதி அரசியல்
பண்ணுகிறான் என்று!