Saturday, May 21, 2011

ஆட்சி மாற்றம்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பேருந்துத் தடமறியா
நாட்டுப்புறத்து
ஒத்தையடிப் பாதையில்
நீண்ட
நடைப் பயணம்.

தலைச்சுமையோடு
கையில்
பெருஞ்சுமையாய்த்
பெரிய பை ஒன்று

தொடர் நடையில்,
சுமக்கும் நேரம்
கூடக் கூட
பையின் பாரம்
கூடுமோ?
கழுத்து நரம்பு புடைக்க
சுமக்கும் கையோ தளர்ந்து வீழ
நடை பின்ன

இனி முடியாது
எனும்போதில்
பெரும்;பை பாரத்தை
மறுகைக்கு மாற்றினேன்.

நிம்மதிப் பெருமூச்சு
பாரம் குறைந்தது.
நடை முடுக்கேற
வேகநடை போட்டேன்

என்ன வியப்பு?
சுமப்பவன் நானேதான்
சுமையும் அதேதான்
குறையவில்லை,
என்றாலும்
பாரம் நீங்கி
இதம் பெற்றதுபோல்
ஒரு நிம்மதி.

இந்தக் கையிலிருந்து
அந்தக் கைக்குப்
பாரத்தை மாற்றியதில்
சுகமோ சுகம்

பாரம் தெரியவில்லை
பயணம் சுளுவானது

இந்த
நிம்மதிப் பெருமூச்சும்
கொஞ்சநேரம் தான்.

தொடரும் நடைப் பயணத்தில்
பாரம் சுமக்கும்
நேரம் கூடக் கூட..

மீண்டும்
கழுத்து நரம்பு புடைக்க..
சுமக்கும் கையோ தளர்ந்து வீழ..
நடை பின்ன..

இனியும் முடியாது!
எனும் போதில்

பாரத்தை
மீண்டும்
மறு கைக்கு மாற்ற வேண்டும்.
ஆட்சி மாற்றம் போல்.

Thursday, May 19, 2011

சுயதொழில் நாட்டை உயர்த்தும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)




அழைப்பு மணி
மெல்லச் சிணுங்க
கதவு திறந்து
தயக்கங்களோடு
தலைநீட்டியு போது

ஷுவும் டையுமாய்
டக்செய்த மிடுக்கோடு
இளைஞனொருவன்

ஒரு கையில்
உள்ளதை மறைக்க
பின்னால் மடக்கி
தத்துபித்தென்று
தமிழான ஆங்கிலத்தில்
ஏதோ ஒன்றை
விற்கத் துடித்தான்

வாங்கித் தீரவேண்டும்
என்ற அவசியமில்லையாம்
சும்மா
டெமோ பார்த்தால்
போதுமென்றான்

சமாளித்து அனுப்பிவிட்டு
கதவு சார்த்தித் திரும்ப,

மீண்டும்
அழைப்பு மணி
இளம் பெண்ணொருத்தி
களைத்த முகத்தோடும் குரலோடும்
புதுக் கம்பெனி
விளம்பரத்திற்காய்
எனச் சொல்லி
ஏதேதோ எடுத்து நீட்டி
இலவசங்களோடு
விற்பனை என்றாள்.

சலித்துத் தட்டிக் கழித்து
விரைந்து தாழ் அடைத்து
உள் நுழைய,

மீண்டும்
அழைப்பு மணி..
சிடுசிடுத்த முகத்தோடு
படீரெனக் கதவு திறக்க
நரைக் கிழவரொருவர்

ஊறுகாய் வடாம் வத்தல்
பாக்கெட்டுகளோடு
வழியும் வியர்வை துடைத்து
தடுமாறும் கரம் நீட்டி
வார்த்தைகளைக் குதப்ப

ச்சே!
முகத்திலும் குரலிலுமாய்
எரிச்சல் காட்டி
விரட்டிக் களைத்து,

காலிங்பெல் நிறுத்தி
கதவை உள்தாழிட்டு

பதட்டம் தணிய
ஆசுவாசப் படுத்தும் முயற்சியில்

இன்றைய செய்தித்தாள் புரட்ட
கண்ணில் பட்டது.
நேற்று
ஓர் அரசு விழாவில்
பேசிய என்பேச்சு

அரசாங்க வேலை..
அரசாங்க வேலை..
என்றில்லாமல்
சுயதொழில் செய்து
எல்லோரும்
நாட்டை உயர்த்தணும்.

Wednesday, May 18, 2011

மனிதத் தின்னிகள்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)



காலைநேரக் கண்விழிப்பு
அநிச்சையாய்க்
கண்ணும் மனமும் தேட,

வீடெங்கும்
சிதறிக் கிடக்கும்
செய்திக் குப்பைகள்
வார்த்தைகளும் படங்களுமாய்.

பழைய குப்பைகள் விலக்கி
புதிய குப்பைகள் தேடும்
கண்ணும் மனமும்.

காலை தினசரி..
பதட்டம் தொற்றிப்
புரட்டப் புரட்ட..

முதல் பக்கம் தொடங்கி
கடைசிப் பக்கம் வரை
பெரிய செய்தி
சிறிய செய்தி
பெட்டிச்செய்தி
கடைசிச் செய்தி
தேடத் தேடச்
சலித்தது மனசு

தாளின்
உள்ளே இறங்கியும்
செய்திகளைக்
கொட்டிக் கவிழித்தும்
தீவிர தேடல்

ஏன் இப்படி?
எங்கே! சாவும் பிணமும்
எங்கே! கொலையும் விபத்தும்
எங்கே! யுத்தமும் வெறியும்
எங்கே! இரத்தமும் சதையும்
என்ன எழவு செய்தித்தாள்?
இவைகளில்லாமல்

வழிந்தோடும் இரத்தமின்றி
சிதறிய உடல்களின்றி
எழுத்துக்களும் படங்களும்
வெறுமையாய்

கண்வெறிகொள
மனசு பிறாண்ட
எதிர்ப்பார்ப்பும் ஏமாற்றமும்
பித்தேற.. பித்தேற..

வேறுவழியில்லை
கண்ணும் மனசும் பரபரக்க

பழைய செய்தித்தாள்கள்
பழைய குப்பைகள்
புரட்டப் புரட்ட
மனசு நிறைந்தது

எழுத்துக்களும் படங்களும்
முழுமையுற
குவியல் குவியலாய்ப்
பிணங்கள்

மதக்கலவரத்தில்
எட்டுபேர் உயிரோடு எரிப்பு!

கார் குண்டு வெடிப்பு
இருபது பேர் உடல் சிதறி மரணம்!

இரசாயண குண்டு வீச்சு
எரிந்து கரிக்கட்டைகளான
அப்பாவிப் பொதுமக்கள்!

இரத்தம், நிணம்,
பிய்ந்த சதைத் துண்டங்கள்…
கொலை, சாவு, பிணம்…

பிணவாடை மூக்கைத் துளைக்க
பித்தம் தெளிய
இருப்புக்குச் சேதமில்லாமல்
நாள் தொடங்கியது

Sunday, January 16, 2011

சாமியேய்ய் மரணம் ஐயப்பா !!

- மலையருவி


சாமியேய்ய் மரணம் ஐயப்பா!

சரண கோஷங்களோடு
மரண கோஷங்களும்
வானைப் பிளந்தனவே!

ஐயப்பா!
கலியுகக் கடவுளாமே! நீ
இப்படிக் காலனாய் ஆனதென்ன!

இருமுடி சுமந்த உன் மக்கள்
ஒருமுடியும் இழந்ததென்ன!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
எனக் காத தூரங்களைக்
கடந்த கால்கள்

பிதுங்கி வழிந்த மனிதநெரிசலில்
அச்சத்தின் உச்சத்தில்
சக பக்தர்களையே
மிதித்துத் துவைத்த
கொடுமை!
என்ன? உன் திருவுளமா!

புல்மேடு தரிசனம்
புதைமேட்டுக்கு அழைத்ததென்ன!
மகரஜோதி
இப்படி
மரணத்தின் நுழைவாயில்
ஆனதேன்!

மணிகண்டா!
உன் சன்னதி மணியோசை
சாவுமணி ஆனதெப்படி!

சாஸ்தாவே!
எங்கள் வாய்க்கரிசி
வாய்த்த வழக்கென்ன
வகையறியோமே!

அரிஹர சுதனே!
உன்னைத் தேடிவந்த
சாமிகளைக் சவக்குழிக்கு
அனுப்பிவிட்டு
இனி
யாரைக் காத்து இரட்சிக்கத் திட்டம்!

சாமியேய்ய் மரணம் ஐயப்பா...!!

Sunday, December 19, 2010

எப்பிடி இருந்த நாம் இப்பிடி ஆயிட்டோம் !

-மலையருவி

மூன்று நாள்
மூட்டத்திற்குப் பின்
ஒருவழியாய்
மழை தொடங்கியது.

நல்ல வேளை
தீபாவளி தப்பித்தது.

முதலில்
சிறு மழைதான்..
விட்டு விட்டுப் பெய்தது.

அடுத்தநாள் காலை
அடைமழை தொடங்கியது.
வாரக் கணக்கில்..
மழை, மழை,
பேய்மழை.
மேகமுடைந்து
கொட்டித் தீர்த்தது

ஊர்
வெள்ளக் காடானது.
வயலாயிருந்த
குடியிருப்புகள்,
கொஞ்ச நஞ்சமிருந்த
விளைநிலைகள்
எல்லாம் ஏரிகளாயின.
ஏரிகள்
கடல்களாயின.

கபடி விளையாடிய
ஆற்று மணல்பரப்பில்
திடீர் வெள்ளம்.

போதுமா மழை?
போதும் போதும்பா!
இதுக்கே
இருபது முப்பது கிலோ
அரிசி போடுவாங்க..

இன்னும் கொஞ்சம்
ஊருக்குள்ளே
வெள்ளம் வந்தாதானே
மழை வெள்ள
நிவாரணம் கிடைக்கும்!

எப்பிடியும்
வீட்டுக்கு வீடு
ஆயிரம் ரூபா
போட மாட்டாங்களா?

Friday, December 17, 2010

கவிதையும் குழந்தையும் -மலையருவி

எழுதிய கவிதையை
என்ன செய்வது?

படித்துப் படித்துப் பார்த்தேன்
நிறைவில்லை..

நண்பரிடம் காட்டினேன்
நன்றாக வந்திருக்கிறது என்றார்.

பலரும்
ஆர்வத்தில் வாங்கி..!

வாசித்தார்கள் என நினைக்கிறேன்.

புரியலையே! என்றார் ஒருவர்
ஆரம்பிச்சிட்டீங்களா? இது இன்னொருவர்
ஒன்றும் சொல்லாமல்
கோபப் பார்வையுடன் மற்றொருவர்
அசட்டுச் சிரிப்புடன் அடுத்தவர்
உதட்டைப் பிதுக்கினார் ஒருவர்

ஏன் காட்டினோம் என்றிருந்தது

படம் வரையப்போறேன்
என்றிழுத்தவாறே
கவிதையின்
பின்பக்க வெள்ளைத் தாளில்
குதூகலத்துடன்
வரையத் தொடங்கியது.
குழந்தையொன்று.

இறுகியமனசு
இலேசானது.

Thursday, December 16, 2010

அநியாயத்துக்குக் கொள்ளை அடிக்கிறாங்கப்பா!! - மலையருவி

மாலைநேர
இந்தியன் குளம்பியக
உரையாடல்களுக் கிடையே
நண்பர் கேட்டார்..
ஒரு கோடிக்கு எத்தனை சைபர்?

கொஞ்சம் யோசனை செய்து
உறுதியில்லாத தொனியில்
விடை சொன்னேன்!

குழம்பிய வாறே
நண்பர் தொடர்ந்தார்,
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிக்கு
எத்தனை சைபர்?

உதட்டைப் பிதுக்கினேன்!

பக்கத்து நண்பர்
கொஞ்சம் கேலிகலந்த
சிரிப்பை உதிர்த்து,
ஒருதாள் கிடைக்குமா?
கேட்டவாறே
பேனாவைத் திறந்தார்.

எப்படியும்
எத்தனை சைபர் என்பது தெளிவாகிவிடும்!

கீரைக் கட்டோடு
காய்கறிகள் சகிதம்
உள்ளே நுழைந்த
புதிய நண்பர்
அலுத்துக் கொண்டார்.

ஒரு ரூபா! ரெண்டு ரூபா! வித்த
கீரைக்கட்டு
இப்போ அஞ்சி ரூபாயாம்
அநியாயத்துக்குக்
கொள்ளை அடிக்கிறாங்கப்பா!!!