முனைவர் நா.இளங்கோ
பழைய நினைவுகளின்
உசலாட்டத்தில்
உயிர் வாழ்க்கை
ஒட்டிய வயிற்றோடு
பசுமைப்
போர்த்திய
பரந்த வயல்வெளி,
ததும்பி
வழியும் வரப்புகளில்
துள்ளிக்
குதிக்கும் கெண்டை,
வரப்பு வளைகளில்
எட்டிப்
பார்த்து
கண்ணாம்பூச்சி
விளையாடும்
சேற்று நண்டுகள்
நினைவுகளை
அசைபோட்டு
அசைபோட்டு
வழியும்
இரத்தத் துளிகளில்
விழித்தெழுகிறோம்
புதுப்பானை
கரும்பு
மஞ்சள்
புத்தரிசிப்
பொங்கல்
கனாக்கண்டு
விழித்தெழுகையில்
வெடித்துப்
பிளந்த
நஞ்செய்
வயல்களாய்
நெஞ்சு வெடித்து
விவசாயி
மாடுகட்டிப்
போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
களத்து மேடுகளில்
சிதறிய
நித்தியக்
கல்யாணிகளோடு
உழவனின்
கனவுகள்
ஏறு தழுவிய
தோள்கள்
ஏந்திய கைகளாகும்
சோகத்தில்
எதிர்காலம்
வினாக்குறிகளோடு
சூலமேந்தி
பொய்மூட்டைகளைச்
சுமந்து
விடாமல்
துரத்தும்
தேசபக்தர்களின்
பலிபீடத்தில்
மண்டியிட்டு
தலைகுனிந்து
நிற்கிறது
தேசம்..
நேற்றைய
நினைவுகளின்
உற்சாகத்தில்
இன்றைய
வலிகளைக்
கடந்து
நாளைய விடியலை
எதிர்நோக்குவோம்..
வியர்வைகளின்
தேசமே!
இன்றைய உலைகளில்
நாம்
நம்பிக்கை
நீர்ஊற்றி
விழிப்பின்
நெருப்பினிலே
மக்கள் சக்தியெனும்
மகத்தான
பொங்கல்
வைப்போம்
கூடிப் பொங்கல்
வைப்போம்
குதூகலப்
பொங்கல் வைப்போம்
-மலையருவி