Thursday, January 31, 2013

கவிதை ஜெயித்துவிடும்


-மலையருவி


துண்டறிக்கையின்
பின்புற வெற்றிடத்தில்
எழுதப்பட்ட கவிதை?
வாசிக்கக் காத்திருந்தார் கவிஞர்

பார்வையாளர்களில் பலரும்
ஆளுக்கொரு தாள்ஏந்தி..

வாசித்து முடித்தவர்களுக்கு..
வேறு அவசர வேலை!
மெல்ல நழுவல்

நேரம் கடக்கக்.. கடக்க..
அரங்கு
காலி இருக்கைகளால்
நிரம்பி வழிந்தது

மைக்கைப் பிடித்தவர்களோ
சொல்லுக்குச் சொல்
வரிக்கு வரி
இருமுறைக்கு மும்முறையாய்
பதவுரை, பொழிப்புரை,
விளக்கவுரையாய்
விளங்கி..
விளக்கி..
உரத்த முழக்கம்

காத்திருந்த கவிஞரோ!
நிலவரத்தின் கலவரத்தால்
கவலையை முகத்தில் தேக்கி

எப்போதும் கைகொட்டி ரசிக்கும்
சுவைஞர் ஒருவர்,
இன்னும்ம்ம்.. அரங்கிலிருக்க!
நிம்மதிப் பெருமூச்சு

ரசிக்கத் தெரிந்தவர்
ஒருவர் போதும்
கவிதை ஜெயித்துவிடும்.

பாவம்,
கவிஞரின் நம்பிக்கை!

Tuesday, January 1, 2013

கான்கிரீட் மரம்


-மலையருவி



ஊரெங்கும்
கான்கரீட் தோப்புகள், காடுகள்
கண்ணில் நிறைந்து
கனவில்; ததும்பும்

வான்முட்ட வளர்ந்ததும்
வனப்புடன் விரிந்ததும்
புதரெனச் செறிந்ததும்
குறுமரமாய்க் குவிந்ததும்..
வகைவகையாய்
வனப்புமிகு மரங்கள்,
இரவில் மலரும்
வண்ணமிகு
மின்னொளிப் பூக்களில் மிளிரும்

நாடெங்கும் கான்கிரீட் மரங்கள்
எனக்கான மரம் எங்கே!

அப்பன் பாட்டன்
ஆசையுடன்
நாளைக்காக நட்டுவைத்த
நல்ல மரங்களின் நலன்சுருட்டும்
யோகமும்
எனக்கு வாய்க்கவில்லை.

கையில் மரக்கன்றும்
காலடியில் குழியுமாய்
கண்ணை விண்ணில்வைத்து
கடன் நோக்கிக்
கழித்துவிட்டேன்

குவளையில் கொண்டுவந்த
சேமிப்பும்
மண்உறிஞ்ச
ஒற்றை மரக்கன்றும்
வாடிக் காய்ந்ததுவே

வெட்டிய குழியருகே
வெறுமனே நான் குந்தி
வேடிக்கைப் பார்த்திருக்க
பக்கத்துக் குழியிலெ;லாம்
வான்முட்டும் வரை உயர்ந்து
வளர்ந்தனவே பயன்மரங்கள்

கான்கிரீட் மரம் வளர்க்கும்
பகல்கனவில் நான் திகைக்க
வெட்டிய குழி புதைந்து
விதையாகும் என் நிராசைகள்.

Monday, December 31, 2012

மேய்ப்பனிடம் சிக்கிய மந்தைகள்


-மலையருவி



தனித்தனியாக
மேய்ச்சலுக்கு விடப்பட்ட
மாடுகள்
மேய்ப்பனைக் காணும்
பெருவிருப்பில்
மலையேறின.

குழலெடுத்து
மேய்ப்பன் இசைந்த
வேணுகானத்தின் நினைவில்
கடமைகள் துறந்து
கனவுகள் சுமந்து
காதங்கள் கடந்தன.

ஆலயச் சிறையிருக்கும்
மேய்ப்பனின்
அழகுத் திருவுருவை..
ஆபரணக் களஞ்சியத்தை..
காணும்
கணநேர தரிசனத்தை..
கதை கதையாய்ச் சொன்னபடி..

கோடிகளில் மிதக்கும்
மேய்ப்பனுக்குக்
காணிக்கைகள் சுமந்தபடி
கையிருப்புக்கு ஏற்ற
வரிசைகளில்
ஊர்ந்தபடி

வரிசைகளின் இடைவழியில்
மந்தைகளை அடைக்கும்
பட்டிகள்

பட்டிகள் திறக்கும்
பகவானின்
கருணைக்கு ஏங்கியபடி
இருந்து
தின்று
நாட்களைக் கழிக்க

மேய்ப்பனின்
பெருங்கருணையில்
மேய்ந்த காலங்களை
நினைவில் சுமந்தபடி
பட்டிகளில் கண்அயரும்
மந்தைகள்.

Saturday, October 20, 2012

உள்ளிறங்கும் விஷம்

 -மலையருவி


படமெடுத்தாடிப்
பாய்ந்து தீண்டிய
வார்த்தைகளிலிருந்து
உள்ளிறங்கும் விஷம்

சொற்களுக்கிடையே
தொக்கி நிற்கும்
நிறுத்தக் குறிகளும்
நிசப்தமாய்
நினைவிழக்கச் செய்யும்

மொழியற்ற
மௌனங்கள் கூட
மதியை மயக்கி
மயக்கத்தில் ஆழ்த்தும்

வார்த்தைகள் நஞ்சென்றால்
இடைவெளிகளும்
குறியீடுகளும்
மௌனங்களும் வேறென்ன!

கடிவாயில் பல்புதைத்துத்
துப்பிய வி~ம் உறிஞ்சும்
வார்த்தைகள்
இன்னும்
வார்க்கப்படவே இல்லை.

துளித்துளியாய்
உதடுகள்
கக்கிய விஷம்
தன்மானச் சூட்டில்
விரைந்து உயிர்வாங்க
உடல்பரவும்.

Tuesday, September 18, 2012

சாக்கடையோர நாயாய் என் கவலைகள்

-மலையருவி


மலையருவி - நா.இளங்கோ

சாலையின் விளிம்பில்
சாக்கடையோரத்தில் படுத்திருக்கும்
நாயாய்
கவனிப்பாரற்றுக் கிடக்கும்
என் கவலைகள்

எப்பொழுதாவது கிடைக்கும்
எச்சில் சோறும்
எலும்புத் துண்டுமான
சில ஆறுதல் மொழிகளும்
இல்லாமல்
ஒட்டிய வயிற்றொடு
கொலைப் பட்டினியாய்..

வீசப்பட்ட
எச்சில் இலைகளுக்கும்
சொந்தம் கொண்டாடும்
அன்னக்காவடிகளாய்
வார்த்தைகள்,
இலைவழித்த கையோடு
மிரட்டும்

தொலைவில் எங்கோ கேட்கும்
சக நாய்களின்
குரைப்பொலி கேட்டுத்
திடுக்கிட்டு விழித்து
பசி மயக்கிலும்
குரலெடுத்துக் குரைத்துத்
தோழமை காட்டும்
என் கவலைகள்

Wednesday, September 12, 2012

நாளைய சாம்பல்

-மலையருவி


கோர்த்த நூலறுந்து
சிதறிய மணிகளாய்
ஆன்மாவின் நிராசைகள்
அறை முழுவதும்

எதிர்கால மரணத்தின்
ருசி பார்க்க
மொய்க்கும் ஈக்களாய்
உறவும் நட்பும்

மாலையின்
உதிர்ந்த மலரிதழ்களாய்
நிலையாமை,
வார்த்தைகளில்
கசங்கியபடி

கொடுத்த வாக்குறுதிகள்
நம்பிய எதிர்பார்ப்புகள்
பகையால் எரியும் வெறுப்புகள்
அன்பால் நனைந்த விருப்புகள்
வன்மம் குரூரம்
இரக்கம் கருணை
எல்லாம்
அந்தரத்தில் மிதக்க

குளிர்ப் பெட்டியில்
நாளைய சாம்பல்

Sunday, September 2, 2012

காக்கையின் கனவுகளில் கூடு

-மலையருவி



சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
கூடு..,

கூட்டில் குலவும்
இணையின்
இதமான உரசலும் நெருக்கமும்,

நெருக்கத்தில் விளைச்சலில்
கூடுநிறை முட்டைகள்,

சிறகணைப்பின் சூட்டில்
சிலிர்த்துத் தலைநீட்டும்
குஞ்சுகள்,

வழியெல்லாம் தேடி
வாகாய்க் கொணர்ந்த
இரை,

இரை கேட்டு
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் பசிக்குரல்,

பசி தீர்க்கும் தாய்மையின்
பரிவான வாய் ஊட்டல்.

ஓயாத பகற்கனவும்
அயராத உழைப்புமாய்க்
காலம் கடக்க,
நனவானது
முதல்கனவு

கூட்டின் முழுமையில்
குதூகலித்துத்
துயில் கொண்ட
முதல்நாள் இரவு

கருத்தது மேகம்
சிறுத்தது மேனி
சுழன்றது காற்று
உழன்றது மரக்கிளை
கூடு சிதைந்தது
காடு கவிழ்ந்தது

உயிர்த்தெழுந்த காகம்
மீண்டும்
சுள்ளிகள் பொறுக்கும்.

சுள்ளிகள் பொறுக்கும்
காக்கையின் கனவுகளில்
மீண்டும் கூடு..