Monday, May 20, 2019

வாழ்நாள் போராளி இரா.அழகிரி

முனைவர் நா.இளங்கோ
மலையருவி
16-05-2018




வாழ்நாள் போராளியே! –எங்கள்
அழகிரி அண்ணாவே!
கைகோர்த்துக் கடந்துவந்தோம்!
களத்தில்
கண்ணாகப் பின்தொடர்ந்தோம்! – எம்மைக்
கைவிட்டுச் சென்றீரே! –நாளும்
கலங்கியழச் செய்தீரே

அண்ணா அழகிரியே! -உம்
போராட்ட வாழ்க்கை கண்டோம்! –
உமக்கு வாழ்க்கையே போராட்டம்
என அறியோமே!

நாடு நலம் பெற
வீடு வளம் பெற
நாளும் குரல் கொடுத்தாய்!
பிறர் நாளும் மகிழ்ந்திட
மனத் துயரக் கடலினில்
என்றும் நீ கரைந்தாய்!

வீதியில் இறங்கிப் போராடுவோம்
விழிகள் கனல முழக்கமிடுவோம்
வியர்வை சிந்தக் குரல் உயர்த்துவோம்! -தமிழ்
மொழி இனம் நாடு காக்க
அணி திரட்டுவோம்
அண்ணலாரின் அகிம்சை வழியில்
படை நடத்துவோம்

படை நடத்தும் போதிலெல்லாம்
பார்க்கத் தவறினோம் –உம்
மனக்குமுறல் முகவாட்டம்
மதிக்கத் தவறினோம்

தோழமையின் கொடிபிடித்து
கொள்கை முழக்கினோம்
இழந்த உரிமை மீட்டெடுக்க
என்றும் அஞ்சிடோம்
இருக்கின்ற மக்கள்நலம்
காக்கக் கோரினோம்
இன்னல்களில் நீ தவித்த
தவிப்பைக் கண்டிலோம்.

காசு பணம் பார்க்காமல்
கடமை செய்தாயே!
கண்ணை மூடும்
நாள்வரைக்கும்
களத்தில் நின்றாயே!

உம்மைப்
பணம் கொடுத்து விலைக்கு வாங்க
பலர் முயன்றாரே!
நீதான்
பல்லிளிக்கும் பணப் பேயை
விரட்டி விட்டாயே!
அண்ணா! விரட்டி விட்டாயே!

உத்தமன் நீ! சத்தியம் நீ!

உலகம் உன்னை மறந்திடாது
உரத்துச் சொல்வேனே!
உண்மைத் தலைவன் நீதானென

உறுதி கொண்டோமே!