Friday, August 6, 2010

பேரண்டமும் நானும் -மலையருவி-

அடடே
செவ்வாய் தோஷம்!
பரிகாரம் பண்ணு
மகாலட்சுமியாட்டம் பொண்ணு வருவா?

பேர்ல ஒரு A கூட சேர்த்துக்க!
அப்பத்தான்
கூட்டுத்தொகை 2 -ல வரும்
அப்புறம் பாரு
கலக்டர் உத்தியோகம்தான்?

ஒன்னோட ராசிக்கு
நீலமே ஆகாது
அதக்கழட்டு மொதல்ல!
பச்சக்கல்லப் போட்டுப்பாரு
கூரையைப் பிச்சிகிட்டு கொட்டும்?

வாசக்காலு வச்ச
திசையே சரியில்ல!
ம்.. அப்பறம்
அடுப்பங்கரையை மாத்து!
தென்கிழக்குத்தான்
அக்கினி மூலை
மகாராசனாட்டம் பவனிவருவ?

சித்தன்மல பீர்சாமியார
ஒருதடவைப் பார்த்து
தட்சனை கொட்டி
கும்பிட்டு வந்தா
கோடி கோயிலை சுத்துன புண்ணியம்?

தோஷம், பரிகாரம்
ராசி, வாஸ்து
சாமி, தட்சணை
ஓயாத இரைச்சல்களுக்கு நடுவே!

பேரண்டப் புழுதியின் துகள்கள்!
வானக் கடலின் துளிகள்!
துகள்கள்
துளிகளின்
உள்ளியங்கும் பேரண்டம்.

இடவலமற்று
திசைகளற்று
மொழியற்று
வடிவுகளற்று
நிறமற்று
வேடங்களற்ற
பேரண்டம்

என்னுள் தொடங்கி பேருருக் கொள்ளும்
என்னும் அடங்கி சூக்குமமாகும்

பேரண்டமும் நானும் ....

-மலையருவி-

Tuesday, March 2, 2010

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

நித்தியானந்தர்களின் நித்திய ஆனந்த லீலா விநோதங்கள்

மலையருவி

சாமியார்கள்
இரண்டுவகை

முதல்வகை,
போலிச் சாமியார்கள்.

இரண்டாம்வகை,
லீலைகள் இன்னும்
அம்பலமாகாத சாமியார்கள்

யாரைச்சொல்லி
யாரைநோக!

ஒருபாதி
மக்களின் அறியாமையும்
மறுபாதி
மக்களின் பேராசையுமே
இந்தப் போலிகளுக்கு
மூலதனம்

ஆண்டவன் பேரால்
நடக்கும்
அநாகரீகங்களும்
அநியாயங்களும்
அங்கீகரிக்கப்படுவது
எதனால்?

மதத்தின் பெயரால்!

ஒழிக்கப்பட வேண்டுவன எவை?

சாமியார்களா?
மதங்களா?

Saturday, January 30, 2010

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

சாகும் வரைக்கும் வேண்டும் வேலை!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

தேய்த்த நாற்காலிகளை
விட்டுவிட
மனம் வரவில்லை

வயதான காலத்தில்
புது இடத்தில் நிம்மதியான
தூக்கம் வராதாம்

வீட்டில்
காய்கறி மளிகை ரேஷன்
வாங்கிச் சுமக்கும்
சிக்கலில் சிக்காமல்
தப்பிக்க நல்ல வழி

நாற்காலி
கேண்டீன்
கழிப்பறை
பழகிப்போனவைகள்

பணிஓய்வுக்குப் பின்னும்
பணி நீட்டிப்பு

வீட்டில் இருக்கும்
அந்தத் தெண்டத் தீவட்டி
மகனுக்கு
எம்பளாய்மண்ட் நியூஸ் பேப்பர்
மறக்காமல் வாங்கனும்

Thursday, December 31, 2009

இவ்விடம் யாவரும் நலம்!

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

அன்பு மகன் சிரஞ்சீவிக்கு,

இவ்விடம் யாவரும் நலம்!

நீ அனுப்பிய பணம் கிடைத்தது.

அம்மாவுக்கு
ஆஸ்துமா தொல்லை அதிகமாகிவிட்டது
தூக்கமில்லை
மூச்சுவிட அதிக சிரமப்படுகிறார்
இருந்தாலும்
வீட்டுவேலைகளெல்லாம் அவள் தலையில்தான்
என்ன செய்ய!

உன்மனைவி
உன் மாமனாருக்கு உடம்பு சரியில்லையாம்
அவள் வீட்டுக்குப் போய்விட்டாள்!

எனக்கு
வழக்கம் போல்தான்!
இப்போ கொஞ்சம் கொஞ்சம்
தட்டுத் தடுமாறி நடக்க முயற்சிக்கிறேன்!
சக்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறேன்
பி.பி.தான் அப்பப்போ ஏறிவிடுகிறது
கால்காயம் ஆறிவருகிறது

நீ உன் உடம்பைப் பார்த்துக்கொள்

இவ்விடம் யாவரும் நலம்!!

தைரியத்துடன் அப்பா

வைத்தியநாதன்

Wednesday, December 30, 2009

செம்மொழியும் இரத்தவாடையும்

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

என் அறை முழுவதும் செம்மொழி?

செய்தித்தாள்களில்
வானொலியில்
தொலைக்காட்சியில்
அறிவிப்புகள்
அறிக்கைகள்
தினம் தினம்..

என்னைச் சுற்றி..
தொல்காப்பியம்
சங்க இலக்கியம்
திருக்குறள்
சிலப்பதிகாரம்
இன்னபிற..

படித்து முடித்தது
படிக்கப் போவது
குறிப்பெடுக்க அடையாளமிட்டது
ஒப்பிட்டுப் பார்த்தது
உரை தேடிக்கொண்டிருப்பது
விளங்காத பகுதிக்கு வினாக்குறியிட்டது
எனத் தொடர்கிறது..

மார்க்சிய, தமிழ்த்தேசிய
பெண்ணிய, தலித்திய
நவீனத்துவ, பின் நவீனத்துவ
இன்னபிற பார்வைகளால்
ஆய்வு புதுமெருகேறுகிறது

பாணர்களும்
விறலியர் கூத்தர் பொருநர்களும்
அடிக்கடி கனவில் வந்துபோகிறார்கள்

சேர, சோழ, பாண்டிய வேந்தர்களாய்
நானே!
சில பொழுதுகளில் முடிதரித்துக்கொள்கிறேன்

இருந்தாலும் நான் என்ன செய்ய?
என் ஆய்வுச்சுவடிகளில்
அடிக்கடி இரத்தவாடை வீசுகிறது!

இரத்தமும் நிணமுமாய்
சிதறிய மாமிசத்துண்டுகள்!
தீய்ந்து கருகிய உடல்கள்!
நெருப்பு, பெருநெருப்பு!
புகை, வானை முட்டிய புகை!
கொத்துக் கொத்தாய்ப் பிணக் குவியல்!

மரண ஓலங்களுக்கிடையே
செம்மொழிப்
புலவர்களின்! பாணர்களின்!
பாடல்கள் தெளிவாகக் கேட்கவில்லை

பிஞ்சுக் குழந்தைகளின்
பெண்களின்
வீரர்களின் சடலங்களுக்கிடையே
வேந்தர்களும் வள்ளல்களும்
காணாமல் போனார்கள்!

என் அறை முழுவதும்.. .. ..

Sunday, November 29, 2009

அடச்சீ! இதுக்கா பெத்தீங்க?

மலையருவி (முனைவர் நா.இளங்கோ)

பிரசவ அறைக்கு
உள்ளே
மகவு ஈனும்
தாயின்
வேதனை முனகல்

வெளியே
கணவன்,
உற்றார் உறவினர்
நட்பு வட்டம்

வெடிக்கும் வேதனையின்
கதறலைத் தொடர்ந்தது,
குழந்தையின்
மெல்லிய அழுகையொலி.

தேனாய் இனித்தது.

காத்திருந்தோருக்குக்
கற்கண்டாய்ச்
சேதி!
தாயும் சேயும் நலம்!

குழந்தைக்குப் பெயர்?
சூட்டி மகிழ
தாய், தந்தை
தாத்தா, பாட்டி
உறவு, நட்பு
ஆயிரமிருந்தும்

ஓடு! ஜோசியக்காரனிடம்,

என்ன பெயர் வைக்க?
நட்சத்திரப்படி,
ரி, ரீ, லு, லூ
எனத்தொடங்கும் பெயர்வை!
இதுவோ? இது போன்றோ?

எழுத்து இத்தனைதான்!
கூட்டினால்
எழுத்தெண்ணிக்கை
இத்தனை? வரவேண்டும்.

தமிழில் பெயர்!
ஆகவே ஆகாது

அடச்சீ!
இதுக்கா பெத்தீங்க?

கருவறைகளும் காமக் களியாட்டங்களும்

மலையருவி

காமத்தை விட்டொழிக்க
பக்தர்கள் ஆனதெல்லாம்
பழைய கதை

பக்தி மீதூற
கடவுளைக் காமுற்று
கவிதைகள் பாடியதும்
கடந்த காலம்

காம வெறியேற
கடவுள் துணையோடு
பக்தைகளை மேய்வதுவே
புதிய கதையாச்சு

கருவறைகள்
கடவுள் இருப்பிடமாம்

எட்டிப் பார்த்து
கும்பிட்டு
தட்சணை கொடுக்க மட்டும்
பக்தர்கள்

பக்தைகளுக்கு
ஆண்டவன் ஆசியோடு
குருக்கள் குதூகலிக்க
அனுமதி!

புனிதம்! புனிதம்!!

காஞ்சிபுரத்து
தேவநாதன்கள்
கருவறைகள் தோறும்!

எங்கே கடவுள்?