Monday, November 1, 2021

கடைசியாக எழுதிய கவிதை

 

மலையருவி



நினைவுப் புத்தகத்தின்

ஒவ்வாரு பக்கத்தையும்

புரட்டிப் பார்த்துவிட்டேன்

 

கடைசியாக எழுதிய

அந்தக்

கவிதையை

எங்கே தொலைத்தேன்!

 

மகளின்

நோட்டுப் புத்தகத்தில்

கிழித்த

அந்த ஒற்றைத் தாளில்

அவசரமாய் எழுதி…

 

எங்கே வீசினேன்

 

வழக்கமாய்த்

துண்டுக் காகிதங்களைப்

பத்திரப் படுத்தும்

படுக்கையின் கீழே

அது இல்லை

 

பழைய காகிதங்களைப்

பொறுமையின்றிக்

கிழித்துப் போட்ட

அவசரத்தில்

அந்தக் கவிதையும்

குப்பைக்குப் போனதோ

 

குழந்தைகள்

கிழித்து வீசினவோ?

மனைவி

சுருட்டிக் காது குடைந்து

கசக்கிப் போட்டாளோ?

 

கவிதை.. கவிதை..

அந்தக் கவிதையை

மீண்டும் எழுதிவிடலாம் தானே!

 

கவிதையின்

சொல்லையும் பொருளையும்

கொஞ்சம் அசைபோட்டால்

மீட்டு விடலாம்

 

ஆனால்

அந்தக் கவிதையை…

அந்தக் கவிதையை…

எங்கிருந்து மீட்பேன்.


(முனைவர் நா.இளங்கோ)

ஜீவ சமாதி

மலையருவி 



நடுவீட்டு

மண் உண்டியல்

வயிறு பெருத்துப்

பேறு காலத்தில்

பெற்றெடுத்த

சேமிப்பு

மொத்தமாய்

ஆயிரம் ரூபாய்

 

சில்லரைகளைச்

சிறு மூட்டையாய்க் கட்டி

அண்ணாச்சி கடையில்

நோட்டாக மாற்றியதில்

கிட்டியதே

அந்த இளஞ்சிவப்பு

ஆயிரம் ரூபாய் நோட்டு

 

காட்டுமேட்டில்

குனிந்து வளைந்து

ஊமுள்

குத்தக் குத்தத்.

துடப்பம் ஆய்ந்து

சேர்த்த சிறுவானம்

 

மகள் வயிற்றுப்

பேத்தியின்

சடங்கை

மனதில் வைத்து

சீர்செய்யும் கனவுக்குச்

சேமித்தப் பெருந்தொகை

 

வங்கியில்

சேமிக்கச் சொன்ன

குரலெதுவும்

அவள் செவிக்கு

எட்டாததால்

எறவானத்துப் பெட்டகத்தில்

பாதுகாப்பாய்..

 

சாணி எடுக்கப்போய்

மாடு முட்டியதில்

அவள்

தர்ம ஆசுபத்திரிப்

படுக்கையில்

கோமா நோயாளியாய்..

 

நாட்கள்

வாரங்களாகி

மாதங்களாய் உருண்டு

வருஷமும் கழிந்தது

 

தொலைக்காட்சியில்

பெரிய ரூபாய் நோட்டுகள்

செல்லாது என

புதிய இந்தியாவைப்

பெற்றெடுத்த சந்தோஷத்தில்

பெரியவர்

பேசிக்கொண்டே… இருந்தார்

 

பேத்தியின்

புட்டு சுத்தும்

சடங்கில்

சீர்வரிசைகளோடு

கனவுலகில் குதூகலித்தாள்

அவள்

 

அழுக்கடைந்துக்

கசங்கிய

அந்த

ஆயிரம் ரூபாய் நோட்டு

ஜீவ சமாதி அடைந்தது

எறவானத்தில்..


(முனைவர் நா.இளங்கோ)

சுடுகாடுகளாய்…

மலையருவி


ராஜ குருக்களின்

ஆட்சியில்

கோரைப் பற்களை நீட்டி

மக்கள் குடல் கிழித்து

இரத்தம் குடிக்கும்

சிம்மாசனம்

 

உடைவாள் ஏந்திய

பெருமித்தில்

சித்தம் கலங்கி

சொந்த தேசத்து மக்களையே

வேட்டையாடும்

சிப்பாய்கள்

 

நர்த்தகிகளின்

நவரச

ஆட்டத்தில்

மெய்மறந்த சேனாதிபதிகள்

 

அறுசுவை விருந்தில்

போதை தலைக்கேறத்

தலைக்கறி கேட்கும்

தூதுவர்கள்

 

குடியிருப்புச் சுவர்களில்

காதுகளைப் புதைத்து

ஒட்டு கேட்கும்

ஒற்றர்கள்

 

தேசபக்த

கோட்சேக்களின்

பஜனைகளில்

மெய்மறக்கும் இராசமாதா

 

ராஜாதி ராஜ..

ராஜ மார்த்தாண்ட..

என்று நீட்டி முழக்கும்

ஊடக விதூஷகர்கள்

 

தர்பார் மண்டத்தில்

முதுகெலும்பு உடைந்த

தலையாட்டி பொம்மைகள்

 

இந்த

மகத்தான

ராஜ்ஜியத்தின்

எல்லைகள்

மேலும் மேலும் விரியும்

சுடுகாடுகளாய்…


(முனைவர் நா.இளங்கோ)

நவகண்டம் யாராவார்?

 மலையருவி


மெல்ல

அருகழைத்து

ஆசையாய்த் தலைகோதி

கருணை விழி தேக்கி

இதழ்விரித்துப்

புன்னகையால்

மௌனம் பேசம்

நன்மைகளும்

தொலைந்தனவோ

 

தலை சிலுப்பி

இரத்தம் இதழ்வடிய

கைகளில்

சூலும் வாளும் ஏந்தி

கூடிக்கூடிக்

குதித்து ஆர்ப்பரித்துக்

கூக்குரலால் வான்பிளக்கும்

தீமைகளின் களமாக

திசையெட்டும்

ஆயினவோ

 

பொய்களைப் படையலிட்டு

அதிகாரச் சூடமேந்தி

கோஷங்களின் மணியோசையில்

இரத்தம் தெறிக்கும்

பூஜைகள் யாருக்காக?

 

நாளை

பூஜைகளின் உச்சத்தில்

வாளேந்தி

தன்குடுமிக் கைபிடித்து

நவகண்டம் யாராவார்?  

 

 


முனைவர் நா.இளங்கோ

என் கடந்த காலங்கள்…

மலையருவி




கனத்துத் திரண்ட

இருட்டுக் கொட்டடியில்

சிதறிக் கிடந்த

சோகங்களைப்

புரட்டிப் புரட்டிச்

சலித்தன

என் கைகள்

 

தூக்கமற்ற இரவுகளில்

விழிமூடி விழிதிறந்து

இருட்டுச் சுவற்றில்

கிறுக்கிக் கிறுக்கிக்

களைத்தன

என் விழிகள்

 

அந்தகாரத் தனிமையில்

தடங்கள் அற்றப் பாதைகளில்

இலக்கற்றுத்

திரிந்துத் திரிந்துச்

சோர்ந்தன

என் கால்கள்

 

வெறுமைக் குழிக்குள்

தலைக்குப்புற

நான்

விழ்ந்து பதறும்

வேளையில்

வாய் பிளந்து

கைகொட்டிச் சிரித்து

வேடிக்கைப் பார்க்கும்

என் கடந்த காலங்கள்

                      -முனைவர் நா.இளங்கோ


 

Monday, June 1, 2020

நாடெங்கும் தேரைகள்…

-மலையருவி

 



எங்கள் வீட்டுக்

குளியலறை ஜன்னலில்

ஒரு தேரை.

சில மாதங்களாக

ஒரே இடத்தில்..

 

இடம் பெயர்வதில்லை

ஒலி எழுப்புவதில்லை..

ஆனால்

உயிரோடுதான் இருக்கிறது.

 

எப்பொழுதாவது

கொஞ்சம் இடப்பக்கமோ

கொஞ்சம் வலப்பக்கமோ

அசையும்

உயிரோடுதான் இருக்கிறேன்

என்பதைக் காட்ட

 

எப்பொழுது உணவு

எப்பொழுது தண்ணீர்

உயிர் வாழ்க்கை எப்படி?

புரியாத புதிர்..

 

இடி மின்னலோடு

சுழன்றடிக்கும் சூறாவளி

கொட்டும் மழை

கொளுத்தும் வெயில்

எதற்கும்

அசைந்து கொடுக்காத

தேரை..

 

யார் வாழ்கிறார்

யார் சாகிறார்

பூமி குளிர்கிறதா

தீயில் வேகிறதா

சலனமில்லா

சஞ்சலமில்லா

மோன தவத்தில்

தேரை..

 

குளியலறையில்

மட்டுமல்ல

வீட்டின்

உள்ளேயும் வெளியேயும்

நகரமெங்கும்

நாற்றிசையிலும்

நாடெங்கிலும்

தேரைகள்..

தேரைகள்..

 

வாழும் களத்தில்

இருக்கும் இடத்தில்

கண்ணுக்கெதிரே

எது நடந்தாலும்

யாருக்கு நடந்தாலும்

அசைந்து கொடுக்காத

தேரைகள்

 

புத்தகம் தின்று

பட்டங்கள் செரித்து

மூளை வீங்கிக் கிடக்கும்

தேரைகள்

நாடெங்கிலும்

நடுவீட்டிலும்..